Skip to main content

வேலூர் தேர்தல்.... ஏ.சி.எஸ். திட்டம் வெற்றி... துரைமுருகன் திட்டம் தோல்வி...

Published on 09/08/2019 | Edited on 09/08/2019

 

ஆறு சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் 14 லட்சத்து 25 ஆயிரம் வாக்குகள் உள்ளன. இந்த தொகுதியில் இஸ்லாமியர்கள், முதலியார், வன்னியர், தாழ்த்தப்பட்ட மக்கள், கிருத்துவர்கள், நாயுடு, பிற சமூகத்தினர் வாக்குகள் என உள்ளன. இதில் பெரும்பாண்மை பலத்தோடு உள்ள சமூகமாக இஸ்லாமியர்கள், முதலியார்கள், வன்னியர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் என உள்ளனர். 
 

2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் கதிர் ஆனந்த் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அதிமுக கூட்டணி வேட்பாளராக புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். திமுக வேட்பாளரான கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக கூட்டணி வேட்பாளரான ஏ.சி.சண்முகம் 4,77,199 வாக்குகள் பெற்றார். 
 

acs - duraimurugan


 

ஏ.சி.சண்முகம் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 2014ல் இதே வேலூர் தொகுதியில் பாஜக கூட்டணியில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டார். அப்போது அதிமுக சார்பில் செங்கூட்டுவன், திமுக கூட்டணி வேட்பாளராக இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியைச் சேர்ந்த அப்துல்ரகுமான் ஆகியோர் போட்டியிட்டனர். அந்த தேர்தலில் அதிமுகவின் செங்கூட்டுவன் வெற்றி பெற்றார். ஏ.சி.சண்முகம் 3,25,000 வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார். திமுக கூட்டணி வேட்பாளரான அப்துல் ரகுமான் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
 

தாமரைச் சின்னத்தில் நின்றதால்தான் தனக்கு இஸ்லாமியர்களின் வாக்குகள் கிடைக்கவில்லை என்பதால் இந்த முறை இரட்டை இலை சின்னத்தில் ஏ.சி.சண்முகம் நின்றார். இஸ்லாமியர்கள் பாஜக மீது அதிருப்தியில் இருந்ததை கணக்கிட்டு அந்த வாக்குகள் மீது கவனம் செலுத்தாமல் மற்ற வாக்குகள் மீது கவனம் செலுத்தினார். முதலியார், நாயுடு, தலித் மற்றும் பிற சமூக வாக்குகளில் கவனம் செலுத்தினார். 
 

திமுகவினரோ, இஸ்லாமிய வாக்குகளோடு மற்றொரு சிறுபான்மையின வாக்குகளான கிருத்துவ வாக்குகள், வன்னியர் வாக்குகள், தலித் வாக்குகள் மீது கவனம் செலுத்தியது. தொகுதியில் இஸ்லாமிய வாக்குகள் 3.5 லட்சமும், கிருத்துவ வாக்குகள் 1.25 லட்சமும், முதலியார் வாக்குகள் 3 லட்சமும், வன்னியர்கள் வாக்குகள் 2.50 லட்சமும், தலித் வாக்குகள் 3 லட்சமும், நாயுடு சமுதாய வாக்குகள் ஒரு லட்சம் மற்றும் இதர சமுதாயத்தினரும் உள்ளனர். 
 

இந்த வாக்குகளில் இரு கட்சிகளும் தங்களுக்கான வாக்குகள் என பிரித்துக்கொண்டு வேலை செய்ததே ஒரு வேட்பாளருக்கு சந்தோஷத்தையும், மற்றொரு வேட்பாளருக்கு ஏமாற்றத்தையும் தந்துள்ளது.
 

திமுக வேட்பாளர் தனது சமுதாய வாக்குகள் பலமாக உள்ள அணைக்கட்டு, ஆலங்காயம், குடியாத்தம், கே.வி.குப்பம் போன்ற பகுதிகளில் உள்ள வாக்குகளும், இஸ்லாமியர்கள் பரந்து வாழும் பகுதிகளான ஆம்பூர், வாணியம்பாடி, பேரணாம்பட்டி, வேலூர் பகுதிகளில் உள்ள வாக்குகளும், தொகுதி முழுவதும் பரவலாக உள்ள
குறிப்பாக தனி தொகுதிகளான குடியாத்தம், கே.வி.குப்பம் பகுதியில் உள்ள தலித் வாக்குகளும் தங்களுக்கு சாதமாக விழும் என நினைத்தார். 
 

ஏ.சி.சண்முகம் தனது முதலியார் சமுதாய வாக்குகளும், நாயுடு சமுதாயம் மற்றும் பிற சமுதாய வாக்குகளும், மற்றும் தலித் வாக்குகளும் தனக்கு கிடைக்கும் என நினைத்து வேலை செய்தார். ஆறு சட்டமன்றத் தொகுதியிலும் இரு வேட்பாளர்களும் வாங்கியுள்ள வாக்குகளை பிரித்து ஆராயும்போது, பல சுவாரஸ்யங்கள் அறிய முடிகிறது.
 

அதில், ஏ.சி.சண்முகம் திட்டமிட்டதுபோல் முதலியார், நாயுடு உள்பட பிற சமுதாய வாக்குகளையும் மற்றும் தலித் வாக்குகளையும் ஓரளவு பெற்றுள்ளார். திமுகவுக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட வன்னியர் சமுதாய வாக்குகளும், ஏ.சி.சண்முகத்திற்கு பெருவாரியாக கிடைத்துள்ளன. குறிப்பாக அனைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளரைவிட ஏ.சி.சண்முகம் கூடுதலாக 20 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ளார். 
 

இதேபோல் தனி தொகுதியான குடியாத்தத்தில் திமுகவைவிட ஏ.சி.சண்முகம் கூடுதலான வாக்குகளை பெற்றுள்ளார். அதற்கு காரணம் அந்த தொகுதியில் உள்ள முதலியார் வாக்குளே. கே.வி.குப்பத்திலும் திமுகவைவிட ஏ.சி.சண்முகம் கூடுதலாகவே வாக்குகளை பெற்றுள்ளார். இது திமுகவிற்கு அதிர்ச்சியான ஒரு தகவல்தான். ஏனெனில் திமுக வேட்பாளர் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

திமுகவுக்கு முதல் சுற்று முதல் கடைசி சுற்று வரை முன்னணியில் இருந்த தொகுதி எது என்றால் அது வாணியம்பாடிதான். அங்குள்ள இஸ்லாமியர்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் செலுத்திய வாக்குகள் திமுகவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றன. அதிமுகவைவிட திமுக இந்த தொகுதியில் 28 ஆயிரம் வாக்குகளை கூடுதலாக பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

ஆம்பூர் தொகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் வாக்குகளில் 90 சதவீத வாக்குகள் திமுகவுக்கே கிடைத்துள்ளன. அதற்கு அடுத்து வேலூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள வாக்குகளும் திமுகவின் வெற்றிக்கு வழிவகுத்தன. இங்குள்ள கிருத்துவ வாக்குகளும், இஸ்லாமிய வாக்குகள் திமுகவுக்கு பெரிய அளவுக்கு கைக்கொடுத்துள்ளன. திமுகவினர் தங்களுக்கு நிச்சயம் விழும் என்று எதிர்பார்த்த வன்னியர் வாக்குகள்தான் காலை வாரியுள்ளன. இருந்தும் சிறுபான்மையினவாக்குகள், தலித் வாக்குகள் திமுகவை வெற்றிபெற வைத்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 




 

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.