Advertisment

ஆவினை மிரட்டும் கரோனா!!! லாக்-டவுனில் மாதவரம் பால்பண்ணை?

aavin milk

ஆவின் ஊழியர்கள் 3 பேருக்கு கரோனா தொற்று தாக்கியிருப்பதால் அதிர்ச்சியடைந்திருக்கிறது ஆவின் நிர்வாகம். இதனால் இன்று சென்னையில் ஆவின் பால் சப்ளையில் கால தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில், சம்மந்தப்பட்ட மாதவரம் பால் பண்ணை லாக் டவுன் செய்யப்படுமா? என்கிற கேள்வி ஆவின் வட்டாரங்களில் எதிரொலிக்கிறது.

Advertisment

சென்னையில் மட்டும் தினமும் 14 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகளை சப்ளை செய்கிறது ஆவின். இதில், மாதம் தோறும் முன்பணம் செலுத்தி பால் கார்டு பெற்றவர்களுக்கு 9 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் பால் விநியோகிக்கப்படுகிறது. மீதியுள்ள 5 லட்சம் லிட்டர் பால் மொத்த வியாபார ஏஜெண்டுகளுக்கு (11 பேர்) தந்து விடுகிறது ஆவின் நிர்வாகம்.

Advertisment

பல்வேறு மாவட்டங்களிலிருந்து டேங்கர் லாரிகள் மூலம் சென்னைக்கு தினமும் கொண்டு வரப்படுகிற பால், மாதவரம், சோழிங்கநல்லூர், அம்பத்தூர் ஆகிய 3 இடங்களிலுள்ள ஆவின் பால் பண்ணைகளில் குளிரூட்டப்பட்டு சென்னை மக்களுக்கு பால் பாக்கெட்டுகளும், பால் மூலம் தயாரிக்கப்படும் உப பொருட்களும் சப்ளை செய்யப்படுகின்றன.

இந்த நிலையில், மாதவரம் ஆவின் பால் பண்ணையில் பணிபுரியும் 2 ஊழியர்கள் மற்றும் நந்தனம் ஆவின் தலைமையகத்தில் பணிபுரியும் ஒரு பெண் ஊழியர் என 3 பேருக்கு கரோனா தொற்று தாக்கியிருப்பதை நேற்று கண்டறியப்பட்டு மருத்துவமனையில் அவர்கள் அட்மிட் செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களது குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது.

aavin milk

கரோனா தொற்று தாக்கியிருப்பதை அறிந்து மாதவரம் பால் பண்ணை ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து ஓடியிருக்கிறார்கள். அவர்களை சமாதானப்படுத்தி அழைத்துவந்து பால் பாக்கெட் அடிக்கும் பணிகள் நேற்று இரவு நடந்திருக்கிறது. இதனால் இன்று காலையில் பால் சப்ளை செய்வதில் சென்னையில் பல்வேறு இடங்களில் கால தாமதம் ஏற்பட்டன. இந்த நிலையில், மாதவரம் பால்பண்ணையை ஆவின் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

ஆவின் ஊழியர்களுக்கு கரோனா தொற்று பரவியதால் ஆவின் ஊழியர்கள் மற்றும் பொது மக்களிடையே இனம்புரியாத அச்சம் சூழ்ந்துள்ளதாக வருகிற தகவல்களை அடுத்து, இது குறித்து விசாரித்தபோது, ‘’ ஏழை முதல் கோடீஸ்வரர்கள் வரை அத்யாவசிய பொருளாக இருக்கிறது பால். அந்த வகையில் அதன் பாதுகாப்பில் கூடுதல் கவனம் தேவை. அதுவும் கரோனா வைரஸ், பொருட்களிலும் பரவும் என உலக சுகாதாரத்துறை எச்சரிக்கை செய்துள்ள நிலையில் பால் பாக்கெட்டுகள் விசயத்தில் அதீத கவனம் செலுத்த வேண்டும்.

பால் லாரி டிரைவர்கள், க்ளீனர்கள், ஆவின் பால் பண்ணையில் பணிபுரியும் அனைத்து பணியாளர்கள், பால் பாக்கெட்டுகளை விநியோகிக்கும் காண்ட்ராக்டர்களின்

லாரி ஓட்டுநர்கள், ஒப்பந்தபணி முறையில் பணிபுரியும் தொழிலாளர்கள் என அனைவரும் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். சானிடைஷர்களை பயன்படுத்த வேண்டும். பணியாளர்கள் உடல் கவசங்கள் அணிந்திருக்க வேண்டும். பால் பண்ணைகள், லாரிகள் அனைத்தும் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட வேண்டும். இப்படி அனைத்து நிலைகளிலும் பாதுகாப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பது அவசியம். ஆனால், ஆவின் நிர்வாகம் இந்த நடவடிக்கைகளை எடுத்ததாக தெரியவில்லை.

கரோனா தொற்று தாக்கியதற்கு பிறகுதான், இன்று காலையில் அனைத்து ஆவின் மேலாளர்களுக்கும் ஒரு அவசர உத்தரவை வாட்ஸ் அப்பில் அனுப்புகிறது ஆவின் நிர்வாகம். அதில், லாரி டிரைவர்கள் மற்றும் க்ளீனர்களுக்கு முக கவசம், சானிடைசர் ஆகியவைகளை கொடுக்க வேண்டும் என்றும், கொடுக்க தவறினால் அதனை நிர்வாகமே கொடுத்து விட்டு அதற்கான தொகையை லாரி உரிமையாளர்களிடமிருந்து பில்லில் கழித்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அப்படியானால், இதுவரை லாரி டிரைவர்களுக்கும் க்ளீனர்களுக்கும் முக கவசம் கொடுக்கப்படவில்லையா? ஆவின் பணியாளர்களும் முக கவசம் அணிவதில்லையா? என்கிற கேள்வி எழுகிறது. முக கவசம், சானிடைசர்கள், கபசுர குடிநீர் உள்ளிட்டவைகள் எங்களுக்கு கிடைக்கவில்லை; ஆவின் நிர்வாகமே இவைகளை தர வேண்டும் என ஆவின் நிர்வாகத்திடம் லாரி உரிமையாளர்கள் ஆரம்பத்திலேயே கோரிக்கை வைத்திருக்கிறார்கள். ஆனால், இதனை அலட்சியப்படுத்தியுள்ளது ஆவின் நிர்வாகம்.

சென்னையில் கரோனா தொற்று சமூக பரவலாக மாறியிருப்பதன் அடையாளம் தான் சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரிக்க காரணம். அந்த வகையில் தற்போது ஆவின் பால் பண்ணை ஊழியர்கள் வரை கொரோனா ஊடுறுவியிருப்பதால் பயப்பட வேண்டியதிருக்கிறது. இதன் சீரியஸ்னசை உணர்ந்து, மாதவரம் பால்பண்ணையை முழுமையாக கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்தி பண்ணையில் தொற்று இல்லை என உறுதி செய்யப்படும் வரை அந்த பால்பண்ணையை லாக் டவுன் செய்யப்பட வேண்டும். பண்ணையில் நிரந்தரமாக மருத்துவ குழுவினரை அமர்த்த வேண்டும். ஆனால், இதற்கான முயற்சிகளை ஆவின் நிர்வாகம் எடுப்பதாக தெரியவில்லை. பொதுவாகவே, ஆவின் அதிகாரிகளிடம் அலட்சியம் அதிகமாகவே இருக்கிறது ‘’ என்கிறார்கள் விசயமறிந்த ஊழல்களுக்கு எதிரான அமைப்பின் சமூக ஆர்வலர்கள்.

aavin milk

இது குறித்து பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மற்றும் துறையின் செயலாளர் கோபால் ஐ.ஏ.எஸ். ஆகியோரிடம் கேட்டபோது, ‘’ கரோனா விவகாரம் துவங்கியபோதே ஆவின் பால் பண்ணைகள் தொடங்கி பால் பாக்கெட்டுகள் மக்களிடம் சேரும் வரை அனைத்துவிதமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம். அனைத்து நிலைகளிலுமுள்ள ஆவின் ஊழியர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு கவசங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. கரோனா மட்டுமல்ல எந்த ஒரு வைரஸும் தாக்காமல் இருக்கும் வகையில் பால் பண்ணைகள் பாதுக்காக்கப்பட்டுள்ளன. அதனால் மக்கள் எந்த சூழலிலும் பால் பாக்கெட் விசயத்தில் பயப்படத் தேவையில்லை. தற்போது ஊழியர்கள் மூவரை தொற்று தாக்கியிருப்பதாக வந்த தகவலை அடுத்து முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கிறோம். அதேபோல, லாரி டிரைவர்களுக்கு முக கவசம், சானிடைசர்கள், கபசுர குடிநீர் உள்ளிட்டவைகள் வழங்க ஏற்கனவே மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டு அவர்கள் தேவையான கவசங்களை வழங்கியிருக்கிறார்கள். இருப்பினும் அதில் தடையேதும் இருந்தால் அதனை களைந்து அனைவருக்கு முக கவசம் கொடுக்கப்படும். தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆவின் பால் பாக்கெட் விசயத்தில் மக்களுக்கு அச்சம் தேவையில்லை ‘’ என்கிறார்கள் உறுதியாக.

madhavaram Chennai AAVIN MILK
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe