Skip to main content

வாழும் போதும் நிம்மதி இல்லை... மறைந்த பிறகும் சந்ததிகளுக்கு நிம்மதி இல்லை... 

 

dddd

 

மக்கள் வாழ்வதற்கு வீடுகள் உள்ளன. உணவுக்கு விவசாய நிலங்கள் உள்ளன. குடிப்பதற்கு தண்ணீர் உள்ளது. ஆனால் வாழ்ந்து மறைந்த பிறகு அவர்களை அடக்கம் செய்ய சுடுகாடு இல்லை. சுடுகாடு இருந்தும் அதற்கு செல்ல பாதை இல்லை. இப்படி தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான கிராமங்கள் உள்ளன. அதுபோன்று உள்ள கிராமங்களில் யாராவது ஒருத்தர் இறந்துவிட்டால், அந்த உடலை அடக்கம் செய்ய இறந்தவரின் உறவினர்கள் படும்பாடு சொல்லிமாளாது. இறந்தவர்கள் பிரிவுத் துயர் தாங்காது அழுவதை விட, இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய முடியாதே என அழுகிறார்கள். இறந்த உடலை அடக்கம் செய்யும் வரை அவர்களுக்கு துக்கமே  மறுத்து போகிறது.

இறந்த மனித உடலை வைத்து போராட்டங்கள் மறியல் ஆர்ப்பாட்டங்கள் என பல்வேறு கிராமங்களில் அவ்வப்போது நடந்து கொண்டுள்ளன. மழைக்காலங்களில் ஓடைகளிலும் ஆறுகளிலும் தண்ணீரில் தத்தளித்தபடி உடலை சுமந்து சென்று அடக்கம் செய்யும் அவலம் தமிழக கிராமங்களில் ஏராளம் உள்ளன. அப்படிப்பட்ட கிராமங்களில் வாழும் மனிதர்கள் அனைவரும் சிந்திக்க கூடிய அளவில் ஒரு முன்னோடி கிராமமாக அமைந்துள்ளது கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள ஆதிவராக நல்லூர்.

இந்த ஊராட்சிக்கு உட்பட்ட துணை கிராமம் தம்பிக்கு நல்லான் பட்டினம். பல கிராமங்களைப் போலவே இந்த ஊரில் கடந்த 100 ஆண்டுகளாகவே ஊரில் யாராவது இறந்து போனால் அவர்களது உடலை அடக்கம் செய்ய, இறந்த உடலை சுமந்துகொண்டு சுடுகாட்டுக்கு செல்வதற்கு வழியில்லாமல் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வந்துள்ளனர். சுடுகாட்டுக்கு வழி இல்லாமல் தனியார் நிலங்கள் வழியாக சென்று வெள்ளாற்றில் இறங்கி சுமந்து சென்று உடலை அடக்கம் செய்து வந்தனர். 

மழைக் காலங்களில் ஆற்றின் வெள்ள நீரில் நீந்தி சென்று மனித உடல்களை அடக்கம் செய்துள்ளோம் என்று வேதனையோடு கூறுகிறார்கள் ஊர்மக்கள். இந்த கிராமத்தில் சுமார் 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்படி ஒவ்வொரு முறையும் ஊரில் இறப்பு ஏற்படுகிறபோது எல்லாம் சுடுகாட்டு பாதை இல்லாமல் கடும் சிரமத்தை தாங்க முடியாததால் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் முதல் பல்வேறு அரசு அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

ஆனால் இதுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை, நடவடிக்கையும் இல்லை. தற்போது இந்த ஆதிவராக நல்லூர் ஊராட்சி தலைவராக ஜோதி நாகலிங்கம் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் காலம் காலமாக ஆதிவராக நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட துணை கிராமமான  தம்பிக்கு நல்லான் பட்டினம் கிராம மக்கள் படும் சிரமத்தை நேரில் பார்த்து வந்தவர். அந்த ஊர் மக்கள் தலையாய பிரச்சனை சுடுகாட்டு பாதை. அதை தீர்த்து வைக்க வேண்டும் என்பதற்கு கடும் முயற்சி எடுத்து இப்போது வெற்றி பெற்றுள்ளார்.

 

cuddalore -

 

இவர் தலைவராக வந்தபிறகு சுடுகாட்டுக்கு பாதை செல்லும் வழியில் நிலம் வைத்திருக்கும் 25 விவசாயிகளை அழைத்துப் பேசினார். ஊரில் எல்லோரும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் இப்படி ஒற்றுமையோடு வாழும் நாம் இறந்த பிறகு நமது உறவுகளின் உடலை அடக்கம் செய்ய எவ்வளவு சிரமப்படுகிறோம் என்பது அனைவரும் அறிந்தது. எனவே சுடுகாட்டிற்கு பாதை செல்வதற்கு அந்த வழியில் நிலம் வைத்துள்ள நீங்கள் அனைவரும் மனம் உவந்து உதவிட வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளார்.

ஊர் முக்கியஸ்தர்கள் ஒத்துழைப்போடு சுடுகாட்டுக்குச் செல்லும் வழியில் பட்டா நிலம் வைத்திருந்த விவசாயிகள் 25 பேர்கள் தாமாகவே முன்வந்து சுமார் 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள விவசாய நிலங்களை சுடுகாட்டு சாலை அமைக்க தானமாக ஆதிவராக நல்லூர் ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளனர். 

 

cuddalore -

 

இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிலிங்கம் நம்மிடம் கூறுகையில், “எங்கள் ஆதிவராக நல்லூர் ஊராட்சியில் உள்ள தம்பிக்கு நல்லான் பட்டினம் மற்றும் ஆயிரம் புறம் புவனகிரி பேரூராட்சி (மேற்கு) ஆகிய மூன்று பகுதி மக்கள் அந்த சுடுகாட்டு மயானத்தில்தான் இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய வேண்டும். காலம் காலமாக விவசாய நிலங்களின் வழியே சடலத்தை எடுத்துச்செல்லப்பட்டது. அதிலும் மழைக்காலங்களில் விவசாய நெல்வயல்களில் மிதித்து துவைத்துக் கொண்டுதான் சடலங்கள் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்வது எரியூட்டுவது அந்த சுடுகாட்டுப் பாதை பிரச்சனை தீர்க்க முடியவில்லை.

 

cuddalore -

 

பிரச்சனையை தீர்த்து வைப்பது என்று உறுதியாக இருந்து சுடுகாட்டுக்கு செல்லும் பாதையில் நிலம் வைத்திருந்த 25 விவசாயிகளிடம் சுமுகமான முறையில் பேசினோம். அவர்கள் நிலம் கொடுப்பதற்கு முழு சம்மதம் தெரிவித்தனர். அவர்கள் அனைவருக்கும் ஊர் மக்கள் சார்பாக தலைவர் என்ற முறையில் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். நிலத்தை ஊராட்சி நிர்வாகத்திற்கு முறைப்படி ஒப்படைத்தனர். அதன்பிறகு எங்கள் சொந்த செலவில் சுமார் ஒன்றரை லட்சம் செலவு செய்து சுடுகாட்டுக்கு பாதை அமைக்கும் பணியை முதல் கட்டமாக செப்பனிட்டுள்ளோம். அரசு மேலும் சீர் செய்ய தார்சாலை அமைக்க சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் இந்த பணி எங்களுக்கு முழு மனநிறைவைத் தந்தது” என்றார்.

தமிழகத்தில் இதேபோன்று பிரச்சனை உள்ள கிராமங்களில் அந்தந்த கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளூர் மக்களைக் ஒன்று கூட்டி சுடுகாடு இல்லாத ஊர்களில் சுடுகாட்டுக்கு இடமும் பாதை இல்லாத ஊர்களில் அதற்கான பாதையையும் அரசு அதிகாரிகள் ஒத்துழைப்போடு பிரச்சனைகளை சுமுகமான முறையில் முடிவுக்குக் கொண்டு வரலாம்.

 

cuddalore -

 

தமிழக அரசு இதற்காக ஒரு சட்டத்தை கூட இயற்றலாம். உதாரணமாக மத்திய மாநில அரசுகள் சாலை அமைப்பது மற்றும் அரசு திட்டங்களுக்கு தேவையான நிலங்களை கையகப்படுத்துவதற்கு கடந்த 2005ஆம் ஆண்டு புதிய சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது. மத்திய அரசு அதன்படி நிலம் கையகப்படுத்தும்போது யாரும் அதை தடுத்து நிறுத்தவும் நீதிமன்றம் மூலம் வழக்கு தொடுத்து தடையுத்தரவு வாங்கவோ முடியாத அளவில் சட்டம் கொண்டு வந்துள்ளது. அதேபோன்று முறையில் சுடுகாட்டுக்கு இடமும் அதற்கான பாதையும் அரசு கையகப்படுத்தும்போது யாரும் தடுக்காத வகையில் ஒரு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார் ஊராட்சி தலைவர் ஜோதி நாகலிங்கம். ஒரு கிராம சுடுகாட்டுக்கு பாதை அமைக்கவே நூறு ஆண்டுகள் கடந்துள்ளது. 

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் ஒன்றியத்தில் உள்ளது கூட்டடி. இந்த கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் கூறுகிறார், “எங்கள் ஊரிலும் சுடுகாட்டுக்கு பாதை இல்லாமல் காலம்காலமாக படும் கஷ்டங்கள் சொல்லிமாளாது. எங்கள் ஊரில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் செல்ல வேண்டும் சுடுகாட்டுக்கு. ஆனால் அதற்கு பாதை இல்லாததால் வயல் வெளிகளிலும் வாய்க்கால் வரப்புகளிலும் தட்டுத்தடுமாறி இறந்தவர்கள் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்கிறோம். சமீபத்தில் ரூபலிங்கம் என்பவர் இறந்து போனார். அவர் உடலையும் வயல்வெளிவழியேதான் கொண்டு சென்று அடக்கம் செய்தோம். சுடுகாட்டிற்கு பாதை கேட்டு காலம் காலமாக அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும், போராட்டம் நடத்தியும் பார்த்து அலுத்து போய் விட்டோம். இதுவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. இதேபோன்று எங்கள் ஊர் அருகில் உள்ள ஈஸ்வரன் கண்ட நல்லூர். நகர் மன்னார்குடி ஆகிய ஊர்களிலும் இதே போன்று சுடுகாட்டு பிரச்சனை உள்ளது.

உளுந்தூர்பேட்டை, திருநாவலூர் ஒன்றியங்களில் உள்ள கிராமங்களில் சுடுகாட்டிற்கு புதிதாக பாதை அமைப்பதற்கு 50 லட்ச ரூபாய் அரசு நிதி ஒதுக்கி உள்ளதாம். நிதியை மட்டும் ஒதுக்கினால் போதுமா? அதிகாரிகள் சுடுகாடு இல்லாத ஊர்களுக்கு இடமும், பாதை இல்லாதவர்களுக்கு பாதையும் ஏற்படுத்தித் தருவதில் அக்கறை காட்டுவதில்லையே? அப்புறம் எதற்கு நிதி ஒதுக்குகிறார்கள்” என்ற கேள்வியையும் முன்வைக்கிறார்.

மனிதர்கள் பிறக்கும்போது எதையும் கொண்டு வருவதில்லை. இறக்கும்போதும் எதையும் கொண்டு போவதில்லை. இப்படிப்பட்ட மனிதர்கள் வாழ்ந்து மறையும்போது தங்கள் உடலை அடக்கம் செய்ய இடமும் அதைக் கொண்டு செல்ல பாதையையும் ஏற்படுத்த அந்தந்த கிராமத்தில் வாழும் மனிதர்கள் இனியாவது முன்வருவார்களா? 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்