நாடு முழுவதும் வேகமாகப் பரவி வரும் கரோனாவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சூழலில், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

Advertisment

aarogya setu and other apps to track corona virus infos

அதன் ஒரு நிலையாக, மக்கள் தங்களது சுயபாதுகாப்பை உறுதிசெய்துகொள்ள வழிவகுக்கும் சில செயலிகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் வெளியிட்டு வருகின்றன.இதில் மிகமுக்கியமான செயலியாக தற்போது பார்க்கப்படுவது 'ஆரோக்கிய சேது' செயலி.ஆண்ட்ராய்டு மற்றும் ஐ-போன்களில் இயங்கும் இந்த செயலியை மத்திய அரசு கடந்த வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது. சுமார் 11 மொழிகளில் பயன்படுத்தக்கூடிய இந்தச் செயலியில்,அரசாங்க தரவுகளின்படி ஒவ்வொரு பகுதியிலும் கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் எண்ணிக்கை குறித்த தரவுகள் தரப்பட்டுள்ளன. இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்து நாம் பயன்படுத்தும்போது, இந்தச் செயலி நமது அருகில் இருப்பவர்களின் தூரம் மற்றும் மக்கள் நெருக்கத்தை ஆராய்ந்து,நாம் இருக்கும் பகுதியில் கரோனா பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பதைக் கூறும்.மேலும் நாம் இருக்கும் பகுதியில் கரோனா உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் யாரவது இருக்கிறார்களா என்பதைக் கண்டறிந்து அதனை வைத்தும் நம்மை உஷார் படுத்தும் இந்தச் செயலி. கோவிட் -19 நோய்த் தொற்று பரவுவதற்கான அபாயத்தை மதிப்பிடுவதற்கும், தனிமைப்படுத்தப்பட்ட வேண்டிய பகுதிகளைக் கண்டறிந்து உரிய நடவடிக்கைகளை எடுக்கவும் இந்தச் செயலி அரசுக்கு உதவுகிறது.

இதேபோல மற்றொரு செயலியான கரோனா கவச் (Corona Kavach) மக்கள் தங்களின் சுயபாதுகாப்பை உறுதிசெய்ய வழிவகுக்கிறது. சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்துடன் இணைந்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட இந்தக் 'கரோனா கவச்' கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கிறது. இந்தச் செயலியின் மூலம் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்களின் நிகழ் நேர இருப்பிடத்தை (Live Location) தெரிந்துகொள்ள முடியும்.மேலும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, குணமடைந்தவர்கள், இறந்தவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றையும் இந்தச் செயலி மூலம் பார்க்கமுடியும்.

Advertisment

மத்திய அரசின் இந்தச் செயலிகளைப் போல மகாராஷ்டிரா, கோவா, பஞ்சாப், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநில அரசுகளும் தனித் தனிச் செயலிகளை வெளியிட்டுள்ளது. Test Yourself Puducherry, COVID-19 Quarantine Monitor - Tamil Nadu ஆகிய அரசின் செயலிகளைப் பயன்படுத்தி முறையே புதுச்சேரி மற்றும் தமிழக மக்கள் கரோனா குறித்த நம்பகமான மற்றும் துல்லியமான தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.