Skip to main content

“எங்களுக்கு விடிவு காலம் எப்போது பிறக்கும்?” நிரந்தர பணிக்காக ஏங்கும் 9 ஆயிரம் நர்சுகள்!

Published on 27/04/2022 | Edited on 27/04/2022

 

 9 thousand nurses longing for permanent work!
வனஜா

 

 

கடந்த 8 வருடங்களுக்கு முன்பு தனியார் செவிலியர் மற்றும் அரசு பயிற்சிப் பள்ளிகளில் பயின்ற செவிலியர்களுக்கு அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர் பணி வழங்கப்படும் என்பதனை முன்னாள் முதல்வர் ஜெ. சட்டசபையில் 110 விதியின் படி அறிவித்தார்.

 

அதன் அடிப்படையில்தான் மருத்துவ தேர்வு வாரியத்தை (ஆசுடீ)ஏற்படுத்தி செவிலியர், மருத்துவர் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களை போட்டித் தேர்வு நடத்தி பணி வழங்கியது. இதில் தேர்வு செய்யப்பட்ட 9 ஆயிரம் செவிலியர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டதின் பேரில் அடுத்த இரண்டு வருடங்கள் நிறைவடைந்தவுடன் பணி நிரந்தரம் செய்யப்படும் என்று கூறியதின் பேரில் தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் எம்.ஆர்.பி. மூலம் தேர்வு செய்யப்பட்ட செவிலியர்கள் பணிபுரிந்து வந்தும் கூட அரசு சொன்ன அடுத்த இரண்டு வருடத்தில் அவர்களை நிரந்தரப் பணியில் நியமிக்கப்படாததால் பாதிக்கப்பட்ட நர்சுகள் தொடர்ந்து போராட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என பல கட்ட போராட்டங்களை நடத்தியும் கூட கடந்த 8 வருடங்களாக பணிபுரிந்து வந்த நர்ஸ்களில் இது வரை 3 ஆயிரம் பேர் தான் கொஞ்சம் கொஞ்சமாக நிரந்தர பணியாளராக ஆக்கப்பட்டு இருக்கிறார்களே தவிர முழுமையாக ஆக்கப்படாததால் மனம் நொந்து போய் இருக்கிறார்கள்.

 

அதுபோல் கடந்த ஆட்சியின் போது கரோனா காலத்தில் தற்காலிக பணியாளராக நியமிக்கப்பட்டுள்ள 3 ஆயிரம் நர்சுகளும் நிரந்தர பணியாளர்களாக ஆக்கவேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்திலும் குதித்து  இருக்கிறார்கள். இப்படி எம்.ஆர்.பி. மூலம் தேர்வு செய்யப்பட்ட நர்சுகள், கரோனா மூலம் தேர்வு செய்யப்பட்ட நர்சுகள் என 9 ஆயிரம் பேர் நிரந்தர பணிக்காக போராடி வருகிறார்கள்.  இந்த நிலையில் தான் வரும் 29ம்தேதி சுகாதாரத் துறையின் மானியக் கோரிக்கை நடைபெறயுள்ளது. அதன் மூலமாவது எங்களுக்கு விடிவு காலம் பிறக்குமா? என்ற ஏக்கத்தில் தான் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி, சுகாதார நிலையங்களில் பணிபுரியும் நர்சுகள் இருந்து வருகிறார்கள்.

 

திமுகவின் தேர்தல் அறிக்கையின் போது தற்காலிக நர்சுகளை நிரந்தர பணியாளர்களாக ஆக்குவோம் என்று முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதியும் கொடுத்திருக்கிறார். அதுபோல் முதல்வர் ஸ்டாலின், எங்களை நிரந்தர பணியாளர்களாக ஆக்குவார் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. இருந்தாலும் கடந்த ஆட்சியின் போது வருடத்திற்கு 300 பேர், 400 பேர் என தான் நிரந்தர பணியாளர்களாக ஆக்கி வந்தனரே தவிர முழுமையாக ஆக்கவில்லை. அதனால குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்துக்கொண்டு  குடும்பத்தை காப்பாற்றுவது பெரும் கஷ்டமாக இருந்து வருகிறது. அதுபோல் பல நர்சுகளும் நிரந்தர பணியாளர்களாக ஆனபின் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற கனவில் தங்கள் வாழ்க்கையை பொது மக்களின் சேவைக்காக  அர்ப்பணித்துக் கொண்டு வருகிறார்கள்.

 

முன்னாள் முதல்வர் கலைஞர் இருந்தபோது எங்களை நிரந்தர பணியாளர்களாக ஆக்க வேண்டும் என்று வலியுறுத்தி டி.எம்.எஸ் முன்பாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு, அப்பொழுது எங்களை போலீசார் அடித்து துன்புறுத்திதைக் கண்டு கலைஞர் கூட ஏன் அந்த வெள்ளை புறாக்களை இப்படி துன்புறுத்துகிறார்கள் என்று கண்டனம் தெரிவித்தார். அந்த அளவுக்கு தலைவர் கலைஞர் எங்க மேல் இரக்கம் வைத்திருந்தார். தற்பொழுது அவருடைய ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் நடத்தி வருவதால் எங்களை நிச்சயம் நிரந்தர பணியாளர்களாக ஆக்குவார் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது. அதை இந்த மானியக் கோரிக்கை மூலம் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம் என்றார் மன்னார்குடியை சேர்ந்த நர்ஸ் வனஜா.

 

 9 thousand nurses longing for permanent work!
விஜயலட்சுமி

 

இது சம்பந்தமாக கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த நர்ஸ் விஜயலட்சுமிடம் கேட்டபோது, “நிரந்தர பணிக்காக ஏங்கும் பெரும்பாலான நர்சுகள் ஏற்கனவே இருபது வருடங்களாக தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்த பின்பு தான் தற்போது அரசு மருத்துவமனையில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வரும் என்னை போல் உள்ள பெரும்பாலான நர்சுகளுக்கு 45 வயதுக்கு மேல் ஆகிவிட்டது. அப்படி இருந்தும் நிரந்தர பணிக்காக தொடர்ந்து போராடி வருகிறோம். எங்க வாழ்நாள் முடிவதுக்குள்ளேயாவது நிரந்தரப் பணி கிடைத்து விடுமா என்ற ஏக்கத்தில் இருக்கக்கூடிய சூழ்நிலையில் தான் இருந்து வருகிறோம். ஏற்கனவே அரசுப்பணி கிடைத்துவிடும் என்று பணியிலிருந்த பல நர்சுகள் கூட கரோனா மூலம் இறந்தும் இருக்கிறார்கள். ஆனால், தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலிப்பணியிடங்கள் இருந்தும்கூட கடந்த ஆட்சி காலத்தில் அதை நிரப்பாமல் எங்களை வைத்து தொடர்ந்து வேலை வாங்கி வந்தனர். அந்த நிலை மேலும் தொடராமல் முதல்வர் ஸ்டாலினும், அமைச்சரும் எங்களை உடனடியாக நிரந்தர பணியாளராக ஆக்கி எங்களுக்கு ஒரு விடிவு காலம் கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.

 

 9 thousand nurses longing for permanent work!
செந்தில்நாதன்

 

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மெடிக்கல் காலேஜ்க்கும் குறைந்தபட்சம் ஆயிரம் நர்சுகளாவது பணிபுரிய வேண்டும். ஆனால், ஏற்கனவே திருச்சி, மதுரை, கரூர் உள்பட ஏழு மெடிக்கல் காலேஜ்களில் தலா 150 நர்சுகள் தான் பணிபுரிகிறார்கள் தவிர அதனுடைய காலியிட பணியிடங்களை முழுமையாக நிரப்பவில்லை. நிரப்பி இருந்தாலே எம்.ஆர்.பி மூலம் தேர்வு செய்யப்பட்ட செவிலியர்கள் அனைவரும் நிரந்தர பணியாளர்களாக ஆக்கி இருப்பார்கள். அதையும் கடந்த கால ஆட்சியில் விட்டுவிட்டனர். அதைத்தொடர்ந்து தற்போது 11 மெடிக்கல் காலேஜ் திறந்திருக்கிறார்கள். அதன் மூலமும் பல ஆயிரக்கணக்கான நர்சுகள் பணியில் அமர வைக்க வேண்டும். அந்த அளவுக்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலிப்பணியிடம் இருந்தும்கூட அதை நிரப்ப முன்வரவில்லை. இங்குள்ள தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலிங் தலைவர் குருநாதன் அதை கண்டுகொள்வதில்லை. ஆய்வு என்று மருத்துவக் கல்லூரி போகும் போது அங்குள்ள டாக்டர்களிடம் நர்சுகளின் காலிப் பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

 

ஆனால், அதை நிரப்ப அவர் ஆர்வம் காட்டுவதும் இல்லை. அதுபோல் டி.எம்.எஸ் அலுவலகத்தில் சரிவர ஆட்கள் இல்லாததால் அங்குள்ள நம்பிராஜன் வைத்தது தான் சட்டமாக இருந்து வருகிறது. முறையான ரிப்போர்டுகளையும் அமைச்சர்க்கு அனுப்பி வைப்பதில்லை. வருடந்தோறும் இந்திய மருத்துவ கழகம் மூலம் ஒரு டீம் வந்து அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆய்வு செய்கிறது. அப்போது டாக்டர் நர்சுகளின் எண்ணிக்கையும் ஆய்வுசெய்ய வேண்டும். ஆனால், இந்திய மருத்துவக் குழு மூலம் வரக்கூடிய அதிகாரிகள் அரசு மருத்துவக்கல்லூரி என்ற மிதப்பில் அந்த எண்ணிக்கையை கண்டுகொள்ளாமல் போய்விடுகிறார்கள். அதனாலதான் தொடர்ந்து கடந்த எட்டு வருடங்களாக நிரந்தர பணிக்காக நர்சுகள் போராடி வருகிறார்கள். நர்சு பணிகளில் இருக்கக்கூடியவர்கள் 90 சதவீதம் பெண்கள் அவர்களை முழுமையாக ஒருங்கிணைக்கவும் முடியவில்லை. அதை கடந்த கால அரசு சாதகமாக்கி கொண்டது அந்த நிலை மேலும் தொடராமல் இருக்க முதல்வர் ஸ்டாலினும் அமைச்சரும் உடனடியாக தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வரும் 9 ஆயிரம் நர்சுகளை உடனடியாக நிரந்தர பணியாளராக அறிவிக்க வேண்டும் இது சம்பந்தமாக ஏற்கனவே முதல்வரிடமும், அமைச்சரிடமும் மனு கொடுத்து இருக்கிறோம் இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இந்திய மருத்துவக் கழகத்தின் மேல் தான் வழக்குப் போட இருக்கிறோம் என்றார் நர்சுகள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவரான செந்தில்நாதன்.

 

ஆனால் கடந்த எட்டு வருடங்களாக அரசுப் பணி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இரவு பகல் பாராமல் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பொதுமக்களின் சேவைக்காகவே பணிபுரிந்து வரும் நர்சுகளின் வாழ்க்கையில் விளக்கேற்ற இந்த மானிய கோரிக்கை மூலமாவது அவர்களுக்கு நிரந்தர பணி வழங்க முதல்வர் அதிரடி நடவடிக்கை எடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.