Advertisment

வரிகள் தள்ளுபடியை குறிப்பிடும் 800 ஆண்டு பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு!

800-year-old inscription mentioning tax exemption discovered

Advertisment

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகில் எமனேஸ்வரம் சிவன் கோயிலில் பாண்டியர் கால வரிகளைக் குறிப்பிடும் 800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே,ராஜகுரு, இளம் தொல்லியல் ஆய்வாளர் வே,சிவரஞ்சனி, தொல்லியல் துறை பயிற்சி மாணவி உஷாநந்தினி, திருப்புல்லாணி தொன்மைப் பாதுகாப்பு மன்ற மாணவர்கள் ஸ்ரீவிபின், முகம்மது சகாபுதீன் ஆகியோர், எமனேஸ்வரம் கோயிலில் மத்திய தொல்லியல் துறை 1914-ல் பதிவு செய்த கல்வெட்டுகளை ஆய்வு செய்தபோது, கோயிலின் தென்பகுதியில் கிடந்த கருங்கல்லில் புதிய கல்வெட்டுகள் இருந்ததை கண்டுபிடித்தனர்.

இதுபற்றி வே.ராஜகுரு கூறியதாவது, இங்கு இயமனீஸ்வரமுடையார், மல்லிகார்ஜுனேஸ்வரர் என இரு சன்னதிகள் உள்ளன. கல்வெட்டுள்ள கல் பழைய மல்லிகார்ஜுனேஸ்வரர் சன்னதி கருவறை அதிட்டானத்தில் இருந்ததாக இருக்கலாம். இதில் 11 வரிகள் கொண்ட இரு துண்டுக் கல்வெட்டுகள் உள்ளன. இவற்றின் எழுத்துகள் வெவ்வேறு அளவுகளில் உள்ளதால் இவை வெவ்வேறு கல்வெட்டுகளின் துண்டுகள் எனலாம். ஒன்றில், கோயிலில் நடத்தப்படும் மூன்று திருநாளுக்கு இரண்டு வேலி நிலமும், மடப்புறமாக ஐந்து மா நிலமும், திருஞானம் ஓதும் ஆண்டாற்கு இருமாவரை நிலமும் தானமாக கொடுக்கப்பட்டுள்ள தகவல் உள்ளது. கோயிலில் ஓதும் தேவாரம் போன்ற பாடல்களை திருஞானம் என்பர். வேலி, மா, மாவரை ஆகியவை நில அளவுகள் ஆகும். கடமை, அந்தராயம், வெட்டிப்பாட்டம், பஞ்சுபீலி, சந்து விக்கிரகப் பேறு, செக்கிறை, தட்டொலிப் பாட்டம், இடையர்வரி, இனவாயம் ஆகிய பாண்டியர் கால வரிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவ்வரிகளை தள்ளுபடி செய்து நிலத்தை தானமாக கொடுத்திருப்பர்.

Advertisment

ஏற்கனவே கோயில்களுக்கு வழங்கப்பட்ட தேவதான நிலமும், புத்த, சமண மத ஆலயங்களுக்கு வழங்கப்பட்ட பள்ளிச்சந்த நிலமும் நீக்கி உள்ள நிலம் தானமாக கொடுக்கப்பட்டுள்ளது. மடப்புறமாக நிலம் வழங்கியுள்ளதால், இங்கு மடம் இருந்துள்ளது எனலாம். மற்றொரு கல்வெட்டில், அந்தராயம், விநியோகம் ஆகிய வரிகளின் பெயர்களும், கீழை நெட்டூரான கீர்த்தி விசாலைநல்லூரும் வருகிறது. கீழநெட்டூர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது.

அம்மன் சன்னதியிலுள்ள முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டு தான் இக்கோயிலில் பழமையானது என்பதால், மல்லிகார்ஜுனேஸ்வரர் சன்னதியும் அவர் காலத்தில் கட்டப்பட்டதாக கொள்ளலாம். இக்கோயில் கல்லில் தான் புதிய கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அவை கி.பி.13-ம் நூற்றாண்டு சுந்தரபாண்டியன் காலத்தைச் சேர்ந்ததாக கருதலாம். இவ்வாறு அவர் கூறினார்.

inscription Ramanathapuram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe