ADVERTISEMENT

70 நாட்கள் போதும்... அரசுப் பள்ளியை அற்புதமான பள்ளியாக்க முடியும்! அசத்திய ஜோதிமணி!

06:33 PM Feb 11, 2020 | rajavel

ADVERTISEMENT

இன்று தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளை மாணவர்கள் இல்லை என்று தமிழ்நாடு அரசு மூடிக் கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளுக்கு அனுப்புவதால் அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை இல்லை என்று அரசுத் தரப்பில் சொல்கிறார்கள்.

ADVERTISEMENT



பெற்றோர்கள் தரப்பிலோ, இல்லை இல்லை அரசுப் பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை, ஆசிரியர்கள் பற்றாக்குறை, கழிவறைகள் கூட இல்லை. இப்படி இருக்கும் போது எப்படி அரசுப் பள்ளியில் சேர்க்க முடியும் என்று பெற்றோர்கள் கேட்கிறார்கள். அதைவிட மேலும் பெற்றோர்கள் கூறும்போது, அரசுப் பள்ளியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகளின் குழந்தைகளை படிக்க வைப்பதில்லையே ஏன்? என கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.

இந்த விவாதங்களுக்கு மத்தியில் தான் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியத்தில் மாங்குடி என்னும் சிறிய கிராமத்தில் 15 வருடங்களுக்கு முன்பு தலைமை ஆசிரியராக பணியாற்றிய ஜோதிமணி, அரசு நிதியை கொண்டும், உள்ளூர், வெளியூர், வெளிநாடு வாழ் இளைஞர்களின் உதவிகளைப் பெற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அனைத்து வகுப்புகளுக்கும் ஸ்மார்ட் வகுப்பறை, கணினி, வருகை பதிவு கைரேகை பதிவு, பாட்டு மன்றம், இலக்கிய மன்றம் என்று உலகத் தரத்தில் அத்தனை வசதிகளையும் செய்து கொடுத்து மாணவர்களையும் தரமான மாணவர்களாக உருவாக்கி வெளியே அனுப்பினார்.

இந்த பள்ளியை பற்றி நக்கீரன் தொடர்ந்து பல முறை கட்டுரைகள் எழுதியுள்ளது. நக்கீரன் கட்டுரைகளைப் பார்த்து கடந்த ஆண்டு சிறந்த அரசுப் பள்ளிக்காண புதுமைப் பள்ளி என்கிற விருதும் கிடைத்தது. விருது கிடைத்த கையோடு தலைமை ஆசிரியர் ஜோதிமணி இடமாறுதல் பெற விரும்பினார்.


பச்சலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு பணிமாறுதல் ஆணையை வாங்கிக் கொண்டு மாங்குடி அரசுப் பள்ளிக்கு வந்த மாணவர்கள், சக ஆசிரியர்களிடம் விடைபெற்றபோது அந்த இடமே கண்ணீரில் கரைந்தது. ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என அனைவரும் கட்டிப்பிடித்து வேறு பள்ளிக்கு போக வேண்டாம் என்று கதறி அழுதனர்.

கண்ணீரோடு வெளியேறிய தலைமை ஆசிரியர் ஜோதிமணி, 2019 ஜலை 10 ந் தேதி பச்சலூா் பள்ளியில் பதவி ஏற்றுக் கொண்டார். அந்தப் பள்ளியும் அனைத்து பெற்றோர்களும் சொல்வது போல சராசரி அரசுப் பள்ளியாக காட்சி அளித்தது. சேதம் என்று உடைக்கப்பட வேண்டிய வகுப்பறை கட்டிடங்களுடன் பள்ளி வகுப்பறைகள் காணப்பட்டது.


அதன் பிறகு விடாத முயற்சி கிராமத்தினர், நன்கொடையாளர்களின் உதவியை நாடினார். மாங்குடியின் சிறப்பை அறிந்த அனைவரும் உதவிகள் செய்ய முன்வந்தனர். உள்பட்டமைப்பு, முதல் வகுப்பறைகள் என அனைத்துப்பணிகளையும் செய்து முடித்தார். டிசம்பர் 4 ந் தேதி அதாவது 74 வேலை நாட்களுக்குள்.. மாங்குடியில் 15 ஆண்டுகள் செய்த வேலைகளை செய்து முடித்திருந்தார்.

அப்படி என்ன செய்துவிட்டார்..? கட்டிடங்கள் வண்ணமயம், உடைக்கப்பட வேண்டிய கட்டிடம் சீரமைக்கப்பட்டு பளிச்சென்று இருக்குமாறு செய்தார். நடைபாதைகளை சரிசெய்தார். வகுப்பறைகள் அனைத்தும் சீலிங் அமைத்து ஏசி, கணினி, ஸ்மார்ட் போர்டு, புரஜெக்டர், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள், மாணவர்களின் புத்தகம் வைக்கும் பீரோ, இப்படி அனைத்து வசதிகளுடன் கண்காணிப்பு கேமராகள், ஒலி பெருக்கி, இத்தனை வசதிகளையும் வகுப்பறையில் செய்தவர் விளையாட்டுக்காக தனி சீருடை, விளையாட்டு மைதானம், கூட்ட அறை இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். முதல் இரண்டு வகுப்புகளுக்கு மட்டும் குழந்தைகளின் நலன் கருதி ஏசி. இயக்கப்படவில்லை.

ஆசிரியர்களே இல்லாமல் மாணவர்களே பாடம் கற்கும் திட்டம், மதிய உணவில் தனக்கான உணவை தானே எடுத்துக் கொள்ளும் முறை இப்படி மாற்றங்கள் செய்யப்பட்டுவிட்டது. பாட்டு, கலை, இலக்கியம், நாட்டியம் என்று அத்தனையிலும் சாதிக்க தொடங்கிவிட்டார்கள் மாணவர்கள்.

எப்படி இப்படி குறுகிய காலத்தில் சாத்தியமானது? தலைமை ஆசிரியர் ஜோதிமணியே விளக்கினார். ''அரசுப் பள்ளிகள் என்றாலே பெற்றோர்கள் மத்தியில் ஒரு முகம் சுளிக்கும் நிலை தான் இன்றும் உள்ளது. அதை நான் மாங்குடியில் மாற்றிக் காட்டினேன். எனக்கு துணையாக சக ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பல பெரியவர்கள், முகம் தெரியாத பலர் இருந்தார்கள். அவர்கள் இல்லாமல் என்னால் எதையும் செய்திருக்க முடியாது. அதனால் தான் இப்போது நான் இல்லை என்றாலும் மாங்குடி பள்ளியை சக ஆசிரியர்களும், மாணவர்களும் சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காண ஆளுமை வளர்க்கப்பட்டுவிட்டது. இனி அவர்கள் எங்கே சென்றாலும் ஆளுமை திறனை வெளிப்படுத்துவார்கள்.


அதே போல தான் பச்சலூர் பள்ளியிலும் சக ஆசிரியைகள், மாணவர்கள், பெற்றோர்கள் துணையோடு நன்கொடைகள் கேட்டுப் போனபோது மனமுவர்ந்து கொடுத்தார்கள். அந்த பணத்தை அரசின் தன்னிறைவுத் திட்டத்தில் செலுத்தி 3 மடங்காகப் பெற்று எல்லாப் பணிகளும் செய்து முடித்துவிட்டோம். சுமார் 20 லட்சம் ரூபாய் செலவு செய்து பள்ளியை புதுமையாக்கி விட்டோம். பள்ளியை மட்டுமல்ல மாணவர்களையும் புதுமைப்படுத்தி வைத்திருக்கிறோம்.

எங்கள் மாணவர்கள் வழக்கம் போல பல்திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். தனக்கு தானே பாடம் கற்றல்என்ற முறையில் இணைய முறைகளை பயன்படுத்தி கற்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது, கற்பிக்க ஆசிரியர் வரவில்லை என்றாலும் கற்றல் நிற்காது. அடுத்தகட்டமாக முழுமையாக இணைய கல்வி வசதி ஏற்பாடுகள் செய்து வருகிறோம். எங்கள் மாணவர்கள் வகுப்பறையில் இருந்து கொண்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களிடம் சந்தேகம் கேட்கும் வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வகுப்பறையும் பள்ளி வகுப்பறைகள் போல இல்லாமல் அலுவலக அறை போல இருக்கும். மாணவர்களை பயன்படுத்தினால் பயனடைவார்கள்'' என்றார்.



ஒவ்வொரு வகுப்பறையும் மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் கூட இந்த வசதிகளை காண முடியாது. அதனால் தான் மாங்குடி அரசுப் பள்ளி பற்றிய நக்கீரன் இணைய வீடியோவைப் பார்த்து டெல்லி அரசாங்கம். வசதிகள் குறைவான மாங்குடி பள்ளியில் எப்படி இப்படி சாத்தியமானது என்று விவாத்திற்குள் நுழைந்திருந்தது. இனி பச்சலூர் அரசுப் பள்ளியும் நாட்டின் சிறந்த அரசுப் பள்ளிகள் பட்டியலில் இடம் பெறும் என்ற நம்பிக்கை நமக்கு உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT