/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/993-pon_50.jpg)
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே பிராமணக்குறிச்சியில் 550 ஆண்டுகளுக்கு முன்பு வாணாதிராயர், அக்ரகாரம் அமைத்துக் கொடுத்ததைக் குறிப்பிடும் புதிய கல்வெட்டை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.
ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, ராமநாதபுரம் சி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லூரி மாணவி வே.சிவரஞ்சனி, திருப்புல்லாணி தொன்மைப் பாதுகாப்பு மன்ற மாணவர்கள் ஸ்ரீவிபின், முகம்மது சகாப்தீன் ஆகியோர், பிராமணக்குறிச்சி தடியார் உடையார் ஐயனார் கோயில் முன்பு கிடக்கும் 6½ அடி உயரமும், 1 அடி அகலமும் கொண்ட கருங்கல்லில் 9 வரிகள் கொண்ட ஒரு கல்வெட்டைக் கண்டுபிடித்துப் படியெடுத்து படித்து ஆய்வு செய்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/993_207.jpg)
இதுகுறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது, “வாணதிராயர்கள் பல்லவர், சோழர், பாண்டியர் காலத்தில் குறுநிலத் தலைவர்களாகவும், அரச அதிகாரிகளாகவும் இருந்துள்ளனர். பாண்டியர் வீழ்ச்சிக்குப் பின் விசயநகர மற்றும் நாயக்க மன்னர்களுக்குக் கீழ், மதுரை அழகர் கோயில் பகுதியைத் தலைமையிடமாகக் கொண்டு தனிஅரசு நடத்தியுள்ளனர். இவர்களின் கல்வெட்டுகள் மதுரை, புதுக்கோட்டை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ளன. இவர்கள் வைணவ மதத்தைப் பின்பற்றியவர்கள்.
பிராமணக்குறிச்சியில் உள்ள கல்வெட்டில் ‘சுந்தரதோள் மகவலி வணதராயர் தன்மம் அனகுறிச்சி அகிராகரம்’ என எழுதப்பட்டுள்ளது. அதன் மேல் கமண்டலமும், திரிதண்டமும் கோட்டுருவங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. வாணதிராயர் குலத்தைச் சேர்ந்த மன்னர் சுந்தரதோள் மகாவலி வாணதிராயர், கி.பி.15-ம் நூற்றாண்டில், அனகுறிச்சியில் பிராமணர்களுக்கு தானமாக அக்ரகாரம் அமைத்துக் கொடுத்துள்ளதைக் கல்வெட்டு தெரிவிக்கிறது. இவர் கி.பி.1468 முதல் கிபி.1488 வரையிலான காலத்தில் ஆட்சி செய்தவர். தற்போது இவ்வூர் பிராமணக்குறிச்சி என அழைக்கப்பட்டாலும், கல்வெட்டில் அனகுறிச்சி என உள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/993-ashok_152.jpg)
கல்வெட்டு உள்ள ஐயனார் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் கள ஆய்வு செய்தபோது இங்கு கருப்பு சிவப்பு பானை ஓடுகள், சிவப்பு பானை ஓடுகள், வட்டச் சில்லுகளுடன் இரும்புக் கசடுகளும் கண்டெடுக்கப்பட்டன. இதன் மூலம் சங்க காலத்தில் இருந்து சுமார் 2000 ஆண்டுகளாக இவ்வூர் மக்கள் வாழ்விடமாக இருந்துள்ளதையும், இங்கு இரும்பு உருக்கும் தொழில் நடைபெற்றதையும் அறிய முடிகிறது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)