386-year-old King Sethupathi inscription was discovered on a cloth-washing stone

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், குளத்தூரில் துணி துவைக்கப் பயன்படுத்திய கல்லில் 386 ஆண்டுகள் பழமையான சேதுபதி மன்னரின் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தன் வீட்டின் அருகிலுள்ள கல்லில் கல்வெட்டு இருப்பதாக குளத்தூர், அரசு உயர்நிலைப்பள்ளி, முன்னாள் மாணவர் பர்ஜித் கூறியதாக அப்பள்ளி ஆசிரியர்கள் சி.பால்துரை, சி.ராமமூர்த்தி ஆகியோர் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுருவுக்கு தகவல் கொடுத்தனர்.

Advertisment

தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவர்கள் கவின்ராஜ்பாண்டியன், பிரியதர்ஷன், அபிஜன், ரித்திக் ஆகியோர், அவ்விடத்தையும் கல்வெட்டையும் சுத்தம் செய்தபின், கல்வெட்டை படித்து ஆய்வு செய்த வே.ராஜகுரு இதுபற்றிக் கூறியதாவது, கல்வெட்டில் “சகாத்தம் 1560-ன் மேல்ச் செல்லா நின்ற வெகுதானிய வருஷம் ஆவணி 5-ல் செவ்விருக்கை நாட்டில் குளத்தூர் குமிள மடை உடைய நாயன் தழவாயான் சேதுபதி காத்த தேவர் புண்ணியம்” என 12 வரிகளில் எழுதப்பட்டுள்ளது. இதன் தற்போதைய ஆண்டு கி.பி.1638. இது இரண்டாம் சடைக்கத் தேவர் என்ற தளவாயான் சேதுபதி காலத்தைச் சேர்ந்ததாகும்.

Advertisment

கண்மாயின் உட்புறம் உயர்ந்து நிற்கும் இரு தூண்களையும், அதன் கீழே கல்பெட்டி போன்ற ஒரு அமைப்பையும் குமிழி மடை என்பர். கல்பெட்டியின் மேற்பகுதியிலும், தரைமட்டத்திலும், இருக்கும் நீரோடி, சேறோடி துளைகள் மூலம் கண்மாயின் அதிகப்படியான நீரும், சேறும் வெளியேற்றப்பட்டு, பாசனக்கால்வாயில் சேரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். பாசனத்திற்கு நீர் திறக்கும்போது துளையை மூடியிருக்கும் கல்லை நீக்குவர். குளத்தூர் கண்மாயில் இத்தகைய குமிழி மடையை மன்னர் அமைத்துத் தந்துள்ளதாக கல்வெட்டு தெரிவிக்கிறது.

386-year-old King Sethupathi inscription was discovered on a cloth-washing stone

இவர் ஆட்சிக்கு வந்ததும் ராமேஸ்வரம் கோயிலுக்கு, பட்ட காணிக்கையாக இரு ஊர்களை தானமாக கொடுத்த செப்பேடு மூலம் இவர் கி.பி.1632 முதல் ஆட்சியில் இருந்ததாக கொள்ளலாம். இவ்வூர் அருகிலுள்ள முதலூரில் இம்மன்னர் கி.பி.1637-ல் குளமும், கலிங்கு மடையும் அமைத்துக் கொடுத்த கல்வெட்டு உள்ளது.

Advertisment

இவர் காலத்தைச் சேர்ந்ததாக இரு கல்வெட்டுகள், 3 செப்பேடுகள் மட்டுமே இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இப்புதிய கல்வெட்டு இம்மன்னரது வரலாற்றுக்கு வலு சேர்க்கும் ஆதாரமாக விளங்குகிறது. இவர் நீர்ப்பாசனத்தில் மிகுந்த கவனம் செலுத்தியதை அறியமுடிகிறது.

இவ்வூர் கண்மாய் கலிங்குப் (தெத்து) பகுதியில், பல கற்கள் கிடந்ததாகவும், அதில் கல்வெட்டு உள்ள இக்கல்லை 7 ஆண்டுகளுக்கு முன் எடுத்து வந்து துணி துவைக்கப் பயன்படுத்தியதாகவும் அவ்வூரைச் சேர்ந்த சசிக்குமார் தெரிவித்தார். கண்மாயில் சேதுபதி மன்னர் அமைத்த குமிழி மடை அகற்றப்பட்டு அந்த இடத்தில் தற்போது கலிங்கு மடை கட்டப்பட்டிருக்கலாம். அப்பகுதியில் சீமைக்கருவை மரங்களுக்குள் மடை அமைத்த கற்கள் சிதறிக் கிடக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

கல்வெட்டை தொல்லியல் துறை பாதுகாக்க வேண்டும் என பள்ளியின் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.