சிவகங்கை திருப்பத்தூரை அடுத்த கண்டவராயன் பட்டியில் 372 ஆண்டுகள் பழமையான சேதுபதி மன்னர் கால செப்பேடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கண்டவராயன்பட்டி அரியநாயகி அம்மன் கோவில் வழிபாட்டாளர்கள் சிவகங்கை தொல்நடைக் குழுவிற்கு கோவிலில் செப்பேடு ஒன்று உள்ளதாக கொடுத்த தகவலின் அடிப்படையில் சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவநர் புலவர் கா. கா. காளிராசா, செயலர் இரா.நரசிம்மன், காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் முனைவர் வேலாயுத ராஜா ஆகியோர் சென்று செப்பேட்டை பெற்று ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர் புலவர் கா.காளிராசா  கூறும்போது, “பொதுவாக மன்னர்கள், அரச பிரதிநிதிகள்  தங்களது கட்டளைகள் மற்றும் தானங்களை ஓலையில் பதிவு செய்தாலும் காலத்திற்கும் அழியாமல் பாதுகாக்க கல்வெட்டு செப்புப் பட்டயம் போன்றவற்றில் பதிவு செய்தனர். அந்த வகையில் இந்த செப்பேடு இரண்டு தெருவினருக்கு இடையே நடைபெற்ற சண்டையில் இறந்து போன 150 பேருக்காக பலிக் காணி வழங்கப்பட்டதை கூறுகிறது.

102

Advertisment

செப்பேட்டுக் காலம்;

திருமலை நாயக்கர் தொண்டன், ரகுநாத சேதுபதி என்ற சொற்களில் இடம் பெறுவதால் இது திருமலை காத்த சேதுபதி காலத்தது என கருத முடிகிறது, இதில் விசைய வருடம் ஆனி மாதம் 13ஆம் தேதி சாலிவாகன சகாப்தம் 1397 என்று குறிப்பிடப்படுகிறது ஆனால் சாலிவாகன சகாப்த ஆண்டு தவறாக உள்ளது,இதில் 1575என்று குறிப்பிட பட்டிருக்க வேண்டும். ஆண்டு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள விசைய ஆண்டு இந்த ஆண்டுக்கு ஒத்து வருகிறது.

செப்பேட்டுச் செய்தி;

Advertisment

வேலங்குடி தெற்குத் தெருவாருக்கும் வடக்குத் தெருவாருக்கும் ஏற்பட்ட சண்டையில் வடக்கித் தெருவார் பொன்னமராவதில் இருந்து ஆள் கூட்டி வந்து தெற்கு தெருவாரின் நில புலங்களை பறித்துக் கொண்டு விரட்டி விட்டனர், தெற்குத் தெருவார் வன்னியன் சூரக்குடிக்கு சென்று அன்றைய ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களின் அரச பிரதிநிதியாக இந்தப் பகுதியில் இருந்த வன்னியனாரிடம் முறையிட்டு தங்களுக்கு உட்பட்ட 24 கிராமத்தையும் மீட்டு தந்தால் அதில் மூன்றில் ஒரு பங்கு தருவதாக சத்திய பிரமாணம் செய்து கொடுத்தனர் வன்னியனாரும் எட்டு சேருவையும் 500 இளவட்டத்தையும் அனுப்பி வைத்தார்.

மூன்றாண்டுகள் நடந்த சண்டை;

கண்டவராயன்பட்டியில் படை தங்கி இருந்து  விஜய வருடம் தொடங்கிய சண்டை ஜெயவருடம் நீடித்து மன்மத வருடத்தில் தீர்வு காணப்பட்டுள்ளது. இவ்வாறாக இச்சண்டை மூன்றாண்டுகள் நீடித்துள்ளன.

 150 பேர் பலி;

இந்த மூன்று ஆண்டுகளில் தொடர்ச்சியாக சண்டை நடைபெற்றதில் 500 இல் 150 இளவட்டங்கள் இறந்துபட்டனர். பிரச்சனைக்கு தீர்வு கண்டு சூரக்குடி வன்னியனாரிடம் சென்று கூற இவர்கள் அனைவரையும் இராமநாதபுரம் கூட்டிச்சென்று நடந்தவற்றை அரசருக்கு தெரிவித்தார். பிரச்சினை முடிவுக்கு வந்ததை அறிந்து அரசர் மகிழ்ச்சியுற்று வன்னியனார் சொல்லும் படி நடந்து கொள்ள அறிவுறுத்தி அனுப்பி வைத்துள்ளார்.

அதன்படி எட்டு சேரு வைக்கும் நெய்க்குப்பை பட்டி மஞ்சினிப்பட்டி, இராசகண்டியநல்லூர், கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கி எல்லை குறிப்பிட்டு கல்நட்டு உள்ளனர். மேலும் இராசகண்டியநல்லூரில் பல்வேறு தொழிலாளர்களையும் வைத்து ஆண்டு அனுபவித்துக் கொள்ளவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இச் செப்பேட்டிற்கு தீங்கு செய்பவர்கள் முடிநாகத்தைக் கொண்ட தோசத்திலும் பிராமணரை கொன்ற தோசத்திலும் போகக் கடவதாகவும் இச்செப்பேட்டை நடப்பித்து வருபவர்கள் சிவ விஷ்ணு பிரதிஷ்டை செய்த புண்ணியத்தை அடைவதாகவும் கூறப்பட்டுள்ளது. செப்பேட்டின் இறுதியில் தெற்குத் தெருவார் உடன்பட்டு கையெழுத்திட்டுள்ளனர்.

செப்பேட்டில் வழங்கப்படும் ஊர் பெயர்கள்;

கண்டவராயன்பட்டி என்பது இராசகண்டியநல்லூர் என்றும்நெற்குப்பை என்பது நெய்க்குப்பை பட்டி என்றும் கோவிலார்பட்டி என்பது கோவிலூர் என்றும் குறிப்பிடப்படுகிறது.

செப்பேட்டின் அமைப்பு;

பெரும்பாலும் செப்பேடுகள் கைப்பிடி உடையவனாக அமைந்திருக்கும் மேலும் அதில் இறைவனின் படங்கள் போன்றவையும் வரையப்பட்டிருக்கும் ஆனால் இச்செப்பேடு சதுர வடிவில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது, மொத்தம் இரண்டு பக்கங்களில் 128 வரிகள் இடம்பெற்றன முதல் 19 வரிகள் சேதுபதி மன்னரை புகழ்ந்து மெய்கீர்த்தியாக எழுதப்பட்டுள்ளன. செப்பேட்டில் எழுத்துப் பிழைகள் அதிகமாக உள்ளன. கடைசி பகுதியில் இதை எழுதிக் கொடுத்தவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இச்செப்பேடு கோவிலில் பாதுகாக்கப் படுகிறது.

372 ஆண்டுகள் பழமையான இந்த செப்பேட்டை அடையாளப்படுத்தியதில் சிவகங்கை தொல்நடைக் குழு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது” என்று தெரிவித்தார்.