Skip to main content

புலனாய்வுப் பயணத்தில் புயல் வேக 30 ஆண்டுகள்!

Published on 20/04/2018 | Edited on 20/04/2018

 முப்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. 31ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது உங்கள் நக்கீரன். இந்த வளர்ச்சியையும் வெற்றியையும் தந்த தமிழ் வாசகர்களுக்கு நக்கீரன் குடும்பம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது. நக்கீரனின் முதல் இதழ் 1988ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் நாள் வெளியானபோது, எந்தளவுக்கு வேகமும் வீச்சும் இருந்தனவோ அந்த உணர்வு இன்றும் குறையாமல் புலனாய்வு இதழியலில் தனி முத்திரை பதித்துக் கொண்டிருக்கிறது.

nakkheerangopalநக்கீரன் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த புலனாய்வு செய்திகள் ஒவ்வொன்றும் அரசியல்-சமுதாயத் தளத்தில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தி, மாற்றத்தை விதைத்துள்ளன. 1989-ஆம் ஆண்டில் விடுதலைப்புலி மாத்தையாவால் பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று பத்திரிகைகளில் செய்தி வெளியானபோது, அவர் உயிருடன்தான் இருக்கிறார் என்ற உண்மையை அட்டைப்படக்கட்டுரையாக வெளியிட்டு உலகெங்கும் உள்ள தமிழர்களின் நெஞ்சில் தன் புலனாய்வு முத்திரையை அப்பொழுதே பதித்து பேரும் புகழும் பெற்றது நக்கீரன். ஒரு தமிழ்ப் பத்திரிகையை பற்றி உலகெங்கும் பேசப்பட்டது அப்போதுதான்.

மக்கள் மனதில் இன்றளவும் சந்தேகக் கிளை பரப்பியிருக்கும் ஜெயலலிதாவின் மகள் விஷயத்தில், முதன்முதலாக படத்துடன் செய்தி வெளியிட்டதும் நக்கீரன்தான். அ.தி.மு.க. தலைமைக்கழகம் தொடர்பாக ஜானகி-ஜெயலலிதா அணிகளுக்கிடையிலான மோதலின்போது, ஜெ. தரப்பினர் தி.மு.க அரசின் போலீசால் தாக்கப்பட்ட புகைப்படங்களை களத்தில் நின்று ரத்தக்காயத்துடன் எடுத்தது நக்கீரனே. அந்தப் படங்கள்தான் தலைமைக்கழகம் யாருக்கு உரிமை என்ற வழக்கில் ஜெயலலிதாவுக்கு சாதகமான சாட்சிகளாயின.

கொலைப்பின்னணி கொண்ட தூக்குத்தண்டனைக் கைதி ஆட்டோ சங்கரின் பின்னணியில் இருந்தவர்களைத் தொடர்ச்சியாக எழுதியதுடன், அவரது மரண வாக்குமூலம் தொடர் மூலமாகவே விரிவாக அம்பலப்படுத்தி, அதற்கு ஆட்சியாளர்களும் காவல்துறையும் ஏற்படுத்திய தடைகளை உச்சநீதிமன்றம் வரை சென்று நொறுக்கி, இந்திய இதழியல்துறைக்கே கருத்து சுதந்திரத்தைக் காப்பாற்றும் (India's Landmark Judgement) தீர்ப்பினைப் பெற்றுத் தந்தது உங்கள் நக்கீரன். பத்திரிகை சுதந்திரம் தொடர்பாக சட்டக்கல்லூரி மாணவர்கள் இன்று வரை படித்து வருவது மேற்படி நக்கீரன் வழக்கின் தீர்ப்பினைத்தான்.

ஜெ. ஆட்சியின் அதிகார அத்துமீறல்களை மூத்த அரசியல் பிரமுகர் க.சுப்பு, "இங்கே ஒரு ஹிட்லர்' எனத் தொடராக எழுதியதற்காகவும், ஜெ.வை பெண் ஹிட்லராக அட்டைப்படத்தில் வெளியிட்டதற்காகவும் நக்கீரன் எதிர்கொண்ட நெருக்கடிகள் ஏராளம். அப்பொழுதும் தமிழகமெங்கும் புலனாய்வில் நெ.1 ஆக பேசப்பட்டது நக்கீரன். ஜெ.ஆட்சியில் டெலிபோன்கள் அனுமதியின்றி ஒட்டுக்கேட்கப்பட்டதை அம்பலப்படுத்தி வாட்டர்கேட் ஊழல் என்ற அட்டைப்படக் கட்டுரைக்காக நிர்வாக ஆசிரியரான நானும் அப்போதைய ஆசிரியர் துரை-நிருபர் காமராஜ் ஆகியோரும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டோம். சிறை சித்ரவதைகளால் நக்கீரன் பிரிண்டர் அய்யா கணேசன் தன் இன்னுயிரையே இழந்தார்.

திருச்சி விமானநிலையத்தில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீது அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள்-நிர்வாகிகள் ஆகியோர் நடத்திய தாக்குதலை, ப்ரேம் பை ப்ரேமாக படம் எடுத்து, நக்கீரன் அம்பலப்படுத்தியபோது, அந்தப் புகைப்படங்களே ஜெ.வுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு அழுத்தமான சாட்சியமானது.

முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரால் செயல்படமுடியாது என்றும் தன்னை முதல்வராக்கவும் பிரதமர் ராஜீவுக்கு ஜெ. எழுதிய கடிதம், எம்.ஜி.ஆர். சாக ஜெ. செய்த யாகம்- இந்த செய்திக்காக தமிழகமெங்கும் ஒரே நாளில் 105 வழக்குகள் போடப்பட்டன. ஹைதராபாத்தில் ஜெ.வின் திராட்சைத் தோட்டம் என அனைத்தும் நக்கீரனால் அம்பலப்படுத்தப்பட்டன. மகாமகத்தில் ஜெ-சசி குளித்தபோது ஏற்பட்ட நெருக்கடியால் 50க்கும் அதிகமானவர்கள் சேற்றில் புதைந்தும் நசுங்கியும் உயிரிழந்ததற்கு, போலீஸ் அதிகாரி தேவாரம் நடத்திய துப்பாக்கிச் சூடுதான் என்ற உண்மைப் பின்னணி, ஆசிட் வீச்சுக்குள்ளான ஐ.ஏ.எஸ்.அதிகாரி சந்திரலேகாவின் பாதிக்கப்பட்ட கோர முகம், அப்போதைய அமைச்சர் சொன்னபடி சந்திரலேகா மீது ஆசிட் அடித்தேன் என மும்பை தாதா சுர்லா படத்துடன் தந்த வாக்குமூலம், தி.மு.க வக்கீல் சண்முகசுந்தரத்தை தாக்கிய வெல்டிங் குமாரின் படம்-பின்னணி அனைத்தும் நக்கீரனின் புலனாய்வு மூலம் வெளிப்பட்டது. சுர்லா, வெல்டிங் குமார் இருவர் படத்தையும் நாம் வெளியிட்ட பின்புதான் அவர்களை கைது செய்தது போலீஸ். இதனால் நக்கீரனின் புகழ் கொடிகட்டிப் பறந்தது.


 

jaya sasi



கொடநாட்டில் ஜெ.வும் சசிகலாவும் எஸ்டேட் வாங்கியதை "அதோ பார் அக்கா அந்த எஸ்டேட்தான்' என்ற அட்டைப்படக்கட்டுரையாக வெளியிட்டது நக்கீரன். அதுவரை ஜெ.வும் சசியும் தோழிகள் என்பது தெரியும். இருவரும் அன்னியோன்யமாக இருப்பது நம் அட்டைப்படம் மூலம் வெட்ட வெளிச்சமானது. இதற்குப் பரிசு "அரசு ஆவணத்தை திருடிய குற்றம்' என நம்மீது 3 வழக்குகள் போடப்பட்டன. தாமிரபரணி திட்டத்தில் 23 கோடி ஊழல் பற்றி செய்தி சேகரித்த போட்டோகிராபர் கதிரைதுரையை சாகும் அளவுக்கு அடித்து கை, கால்களை உடைத்தது அ.தி.மு.க.வின் கண்ணப்பன் ஆட்கள். "பஸ்ஸில் காணாமல் போன ஆறு கோடி' என்று செய்தி வெளியிட்டதற்காக சிவகங்கை நிருபர் சண்முகசுந்தரம் கைவிரலை வெட்டி உயிருக்கு ஆபத்தை விளைவித்ததும் அதே கண்ணப்பன்தான்.


இந்தத் தொடர்ச்சியான புலனாய்வில் இன்னொரு மைல்கல்தான் தம்பி சிவசு எடுத்த சந்தன கடத்தல் வீரப்பன் புகைப்படத்துடனான முதல் பேட்டி. அதுபோலவே வீரப்பனுக்கு உதவினார்கள் என்ற பொய்யான குற்றச்சாட்டில் இரு மாநில அதிரடிப்படையினரால் ஒர்க் ஷாப் எனப்படும் கொடூரமான சித்ரவதைகளுக்குள்ளான மலைவாழ் மக்களின் துயரத்தை அங்கு நேரில் சென்று உயிரை பணயம் வைத்து வீடியோவாக வெளிக்கொண்டு வந்தது தம்பி ஜெயப்பிரகாஷ். இதனை தொகுத்து நாம் டெல்லி மனித உரிமை கமிஷனில் புகார் கொடுத்தோம். எங்களுடன் பழங்குடி மக்கள் சங்கம் மற்றும் தன்னார்வ அமைப்புகள் கைகோர்த்ததன் விளைவே நீதிபதி சதாசிவா கமிஷன் உருவானது. 1996-ல் ஆட்சி மாற்றத்திற்கு காரணங்களில் ஒன்றான வீரப்பனின் வீடியோ பேட்டி, சரண்டராக விருப்பம் தெரிவித்து வீரப்பன் அளித்த பேட்டி, கர்நாடக வனத்துறையினர் 9 பேர் 1997-ல் கடத்தப்பட்டபோதும், 2000-ல் கன்னட நடிகர் ராஜ்குமார் உள்ளிட்டவர்கள் கடத்தப்பட்டபோதும், தமிழகம்-கர்நாடகம் ஆகிய இரு மாநில அரசுகளின் அங்கீகரிக்கப்பட்ட தூதுவர்களாக நக்கீரன் டீம் காட்டுக்குச் சென்று, எவ்வித உயிரிழப்புமின்றி கடத்தப்பட்டவர்களை மீட்டு, கர்நாடகாவில் வசிக்கும் 60லட்சம் தமிழர்களின் வாழ்வில் நிம்மதியை ஏற்படுத்தியது என வீரப்பன் தொடர்பான நக்கீரனின் சாதனைகள் உலகறிந்தவை.

பத்திரிகைகளிடம் அதிகம் பேசாத சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் முதல் அரசியல் பேட்டி, முந்திரிக்காட்டில் தலைமறைவாக இருந்த தமிழ்த் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த சுப.இளவரசன் பேட்டி, நக்சலைட் தோழர் தர்மபுரி பாலன் பற்றிய பின்னணி எனப் பலவும் நக்கீரனால் வெளிப்பட்டன.


 

manjolai



எந்த ஆட்சியாக இருந்தாலும் நக்கீரனின் புலனாய்வு வீச்சு குறைந்ததே இல்லை. தி.மு.க. ஆட்சியில் தாமிரபரணி ஆற்றில் மாஞ்சோலை எஸ்டேட் தொழிலாளர்களை போலீசார் அடித்துக் கொன்ற கொடூரம், முதலில் நக்கீரனில்தான் வெளியானது. தி.மு.க. அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் ஆட்களால் பெரும் அச்சுறுத்தலுக்குள்ளான சேலம் அங்கம்மாள் காலனி விவகாரம், கடத்தல்காரன் ஜீப்பில் தி.மு.க. அமைச்சர் முல்லைவேந்தன் செய்த பிரச்சாரம் ஆகியவற்றை ஆதாரங்களுடன் வெளியிட்டது நக்கீரன். வெளிக்கொண்டு வந்த நிருபர் தம்பி ஓசூர் ஜெ.பி.யின் அண்ணன் மகனை கடத்தினார்கள். பின் காப்பாற்றப்பட்டார்.

ஆட்சியாளர்களின் அத்துமீறல்களை சுட்டிக்காட்டுவது பத்திரிகைகளின் ஜனநாயகக் கடமை. அதைச் செய்ததற்காக ஜெயலலிதா ஆட்சியில் நக்கீரன் சந்தித்த நெருக்கடிகள் ஏராளம். என் மீது பொடா வழக்கு போடப்பட்டு 252 நாட்கள் சிறைவாசம், 6 நாட்கள் ஜட்டியுடன் போலீஸ் லாக்கப்பில் வைத்து சித்ரவதை. அத்தோடு 3 கொலை வழக்குகள், 4 கடத்தல் வழக்குகள், ஒரு ஆயுத வழக்கு. தம்பிகள் சிவசுப்ரமணியன், சுப்பு, மகரன் உள்ளிட்டோர் கைது, சிறைவாசம், ஜீவா மீதும் வழக்கு இவற்றை சட்டரீதியாக எதிர்கொள்ள உச்சநீதிமன்றம் வரை சென்றதால் கோடிக்கணக்கில் ஏற்பட்ட மிகப் பெரிய பொருளாதார இழப்பு, தொடர்ச்சியான நெருக்கடிகளால் மனமுடைந்த எனது மாமனார் ஆர்.எஸ்.பாண்டியன் அவர்களின் மரணம், எனக்கு நேர்ந்த சிறை சித்ரவதையை அறிந்த எங்கள் தாயார் மரணம். "மாட்டுக்கறி மாமி' என்ற செய்திக்காக நக்கீரன் அலுவலகம் மீது அமைச்சர்கள்-ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் நாள் முழுவதும் 1000 பேர் நடத்திய கொலை வெறித் தாக்குதல்கள், ஒரே புகாருக்கு 261 எஃப்.ஐ.ஆர்., என நக்கீரனின் சட்டப்போராட்டம் இன்றளவும் தொடர்கிறது.

இத்தனை போராட்டங்களுக்கிடையிலும் நக்கீரன் தனது புலனாய்வு முத்திரையைத் தொடர்ந்து பதித்து வருகிறது. அப்பல்லோவில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அவரது எக்ஸ்ரே உள்ளிட்ட பல மருத்துவக் குறிப்புகளையும் இரவு-பகல் பாராமல் சேகரித்து உண்மை நிலையை மக்களிடமும் ஆளுங்கட்சியினரிடமும் தெரிவித்தது நக்கீரன்தான். 2016 தேர்தல் நேரத்தில் சிறுதாவூர் பங்களாவில் நிறுத்தப்பட்டிருந்த கண்டெய்னர் லாரிகளை படமெடுத்து வெளியிட்டதும் நக்கீரனே. காவிரி குடிநீரை தனது சொந்த நிலத்தின் விவசாயத்துக்கு திருடும் முதல்வர் எடப்பாடி என வேறெந்த பத்திரிகைகளிலும் வெளிவராத புலனாய்வு செய்திகள் தொடர்ந்து இடம்பெற்றபடியே உள்ளன.

 

nithi




அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்களின் அக்கிரமங்களை மட்டுமின்றி, சாமியார் வேடத்தில் இருப்பவர்களின் சுயரூபத்தை வெளிப்படுத்தியதும் நக்கீரன்தான். ஆசிரமத்துப் பெண்களிடம் லீலைகள் புரிந்த பிரேமானந்தா, சங்கரராமன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ஜெயேந்திரர்-விஜயேந்திரர், ஆன்மிக பேரின்பம் என்ற பெயரில் மோசடி செய்த நித்யானந்தா, இயற்கையையும் இளம்பெண்களையும் வஞ்சித்த ஜக்கிவாசுதேவ் என நக்கீரன் அம்பலப்படுத்தியவை ஏராளம். அதுமட்டுமின்றி, சிவகாசி ஜெயலட்சுமி, செரினா (எ) ஜனனி என அதிகாரபலத்தின் பின்னணியில் சிக்கிய பெண்கள், ரயில்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய அலிஅப்துல்லாவின் படம், ஸ்வாதி கொலை வழக்கு உண்மைகள், ராம்குமார் உடலில் 12 இடங்களில் மின்சார ஷாக் என அனைத்து தளங்களிலும் நக்கீரன் தனது முத்திரையைப் பதித்துள்ளது.

புலனாய்வு இதழியலில் முன்னணி இடம் பெற்றிருப்பது மட்டுமல்ல, சட்டப் போராட்டங்கள் மூலம் இந்திய இதழியலுக்கே புதிய தீர்ப்புகளைப் பெற்று, பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாத்ததிலும் நக்கீரனுக்கு பெரும் பங்கு உண்டு. ஆட்டோ சங்கர் வழக்கில் பெறப்பட்ட தீர்ப்பை உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசர் கிருஷ்ணய்யர் தொடங்கி பல சட்டமேதைகளும் குறிப்பிட்டு வருகின்றனர். பொடா சட்டத்தின் கீழ் ஒரு மாநிலத்தையே நோட்டிஃபைடு ஏரியா எனக் குறிப்பிடப்பட்டதை எதிர்த்து நீதிமன்றம் அது செல்லாது என உத்தரவு பெற்றதுடன், பொடா வழக்கில் ஓராண்டுக்கு முன்பாகவே ஜாமீன் பெற முடியும் என நிரூபித்ததும் நக்கீரன்தான். ஜெயலலிதா ஆட்சியில் நக்கீரன் மீது சட்டமன்றத்தில் உரிமை மீறல் பிரச்சினை கொண்டுவந்தபோது, அதில் பத்திரிகையின் சார்பில் வக்கீல் ஆஜராகலாம் என இந்தியாவுக்கே முன்னோடியான தீர்ப்பு பெற்றதும் நக்கீரனே.

இவை அனைத்தும் நக்கீரனுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த பத்திரிகை துறைக்கும் ஜனநாயக அமைப்புகளுக்கும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க வைக்கும் முத்திரைத் தீர்ப்புகளாகும். மக்களோடு இணைந்து நிற்பதுதான் நக்கீரனுடைய புலனாய்வுத் தன்மையின் வெற்றிக்குக் காரணம். அதனை 1989, 1996, 2004, 2006, 2009 என பல தேர்தல் கள சர்வேக்களில் நிரூபித்துள்ளது உங்கள் நக்கீரன்.

 

WRAPPERS




எளிமையான பின்னணியில், உழைப்பையும் துணிவையும் கொண்ட தம்பிகளின் துணையுடன் தொடங்கப்பட்ட உங்கள் நக்கீரன், எப்போதும் மக்கள் பக்கம் நின்று அவர்களின் மனசாட்சியாகப் பேசுகிறது. 30 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய அந்தப் பயணம் இன்றும் துணிச்சலுடன் அதே வேகத்தில் தொடர்கிறது என்பதற்கு இப்போதைய சாட்சிதான், கல்லூரி மாணவிகளுக்கு வலை வீசிய பேராசிரியை நிர்மலாவின் ஆடியோ ஆதாரம். கவர்னர் மாளிகை வரை புயலைக் கிளப்பி, இந்திய அரசியலின் கவனத்தை ஈர்த்திருக்கும் இந்த ஆடியோவை முதன்முதலில் 2018 ஏப்ரல் 08 தேதியிட்ட இதழிலேயே புலனாய்வுத் தன்மையுடன் தந்தது உங்கள் நக்கீரன்தான்.

தமிழ் மக்கள்-வாசகர்கள் பேராதரவுடன் முகவர்கள், வணிகர்கள், அவர்களுக்குத் துணையாக இருப்போர் ஆகியோரின் ஒத்துழைப்புடன், முக்கியமாக அனைத்து வழக்குகளிலும் வெற்றிபெற, பெற்றுக் கொண்டிருக்க எங்களுக்காக வாதாடிக் கொண்டிருக்கும் வழக்கறிஞர்களுடன் நக்கீரன் குடும்பத்தின் துணிச்சல்மிக்க புலனாய்வுப் பயணம் எப்போதும் போலத் தொடரும் என்ற உறுதியினை அளிக்கிறோம்.
 

Next Story

ஆளுநர் மாளிகை சம்பவம்; கூடுதல் ஆணையர் விளக்கம்

Published on 25/10/2023 | Edited on 25/10/2023

 

Governor's House incident; Additional Commissioner Explanation

 

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை வாயில் முன்பு பெட்ரோல் குண்டு வீசிய பிரபல ரவுடியை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் பிரபல ரவுடியான கருக்கா வினோத். இவர் பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி அதைப் பற்ற வைத்து ஆளுநர் மாளிகையின் முகப்பு வாயிலில் வீசி இருக்கிறார். அடுத்தடுத்து இரண்டு பாட்டில்களை வீசியதாகக் கூறப்படுகிறது. உடனடியாக அங்கு இருந்த பாதுகாப்பு போலீசார் விரைந்து சென்று கருக்கா வினோத்தை பிடித்து கைது செய்து, கிண்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

 

முதற்கட்ட விசாரணையில், கருக்கா வினோத் தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் ஏற்கனவே பெட்ரோல் குண்டு வீசி சிறை சென்றுள்ளார். ஓராண்டாக சிறையில் இருந்த நிலையில், விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. அதன் காரணமாக ஆத்திரத்தில் தற்போது மீண்டும் ஆளுநர் மாளிகையின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இந்த பெட்ரோல் குண்டு வீச்சுக்கு இதுதான் உண்மை காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அவர் மொத்தமாக நான்கு பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களைக் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. சரித்திரப் பதிவேடு குற்றவாளியாகவும், ஏ பிளஸ் குற்றவாளியாக கருக்கா வினோத் இருந்துள்ளார்.

 

ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு மாதிரிகள் சேகரித்து எடுத்துச் செல்லப்பட்டது.

 

Governor's House incident; Additional Commissioner Explanation

 

தொடர்ந்து சென்னை தெற்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார். ஆளுநர் மாளிகைக்கு முன் வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பு மீது பெட்ரோல் குண்டு விழுந்துள்ளது. மது போதையில் தவறுதலாக ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசியதாகக் கூறியுள்ளார். பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கைது செய்யப்பட்ட கருக்கா வினோத் மீது ஏற்கனவே 7 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகத் தெரிவித்தார்.

 

 

Next Story

'வீட்டு கடனை கட்டவில்லை' - நிதிநிறுவன ஊழியர் செய்த செயலால் அதிர்ச்சி

Published on 05/10/2023 | Edited on 05/10/2023

 

'Didn't Pay the Purchased Loan'-Shocked by the Action of the Financial Institution Employee

 

தனியார் நிதி நிறுவன ஊழியர் ஒருவர் 'வீட்டுக் கடனை கட்டவில்லை' என பெரிய எழுத்துக்களில் பெயிண்டில் எழுதி வைத்துவிட்டு சென்ற சம்பவம் தேனியில் நிகழ்ந்துள்ளது.

 

தேனி மாவட்டம் அன்னை இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் தன்னுடைய வீட்டை அடைமானம் வைத்து மூன்று லட்ச ரூபாய் கடனாக பெற்றதாகக் கூறப்படுகிறது. கொரோனா காலத்தில் ஏற்பட்ட நெருக்கடி சூழல் காரணமாக ஒன்பது மாதமாக கடன் தவணையைக் கட்ட முடியாமல் இருந்துள்ளார். கடனைத் திருப்பி செலுத்துவதற்கான காலக்கெடு மேலும் 9 மாதங்கள் நீட்டிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து முறையாக வாங்கிய கடனை பிரபு செலுத்தி வந்துள்ளார்.

 

கடந்த செப்டம்பர் மாதமே முழு கடன் தொகையும் கட்டியதாக பிரபு தரப்பில் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கடன் தொகையை கட்டியதால் வீட்டு பத்திரம் வேண்டும் என கேட்டுள்ளார். அப்பொழுது பிரபுவின் வீட்டிற்கு வந்த தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் கடனை செலுத்தவில்லை எனக்கூறி இரண்டு பேர் இருசக்கர வாகனங்களை எடுத்துச் சென்றுள்ளனர். இதனால் அதிருப்தியடைந்த பிரபு காவல் துறையினருக்கு புகார் கொடுத்து இருசக்கர வாகனங்களை மீட்டுள்ளார்.

 

இதனால் ஆத்திரமடைந்த நிதி நிறுவன ஊழியர்கள் 'போலீசில் புகார் கொடுத்து எங்களை அசிங்கப்படுத்தி விட்டாய். உன்னை சும்மா விடமாட்டோம்' என மிரட்டிவிட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று தனியார் நிதி நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர் மகேந்திரபிரபு மது போதையில் பிரபுவின் வீட்டிற்குச் சென்று ஸ்பிரே பெயிண்ட் மூலம் 'வெரிடாஸ்' நிறுவனத்தில் கடன் பெற்ற வீட்டு கடன் கட்டவில்லை' என சுவரில் எழுதியுள்ளார். இது குறித்து வீட்டு உரிமையாளர் பிரபு கேட்டபோது 'அப்படித்தான் செய்வேன்' என்று மிரட்டல் தொனியில் பேசியதாக பிரபு தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.