ADVERTISEMENT

‘2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஊழல்! – ஒரு பார்வை..

10:44 PM Nov 07, 2017 | Anonymous (not verified)



உலகம் 5ஜி-யை நோக்கி வேகமாக நகர்ந்துகொண்டிருக்கிறது. ஆனால், இந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கிற்கான தீர்ப்பு இன்னமும் முடிவாகவில்லை.

இந்திய அரசியல் களத்தில் அப்போது ஆட்சியில் இருந்த தேசிய முற்போக்குக் கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சிகளுக்குக் கிடைத்த மிகப்பெரிய ஆயுதம் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல். 2011 தமிழக சட்டமன்றத் தேர்தலிலும் இதையே பிரதான ஆயுதமாக பயன்படுத்தி அரசியல் கட்சிகள் தேர்தலைச் சந்தித்தன. அந்தளவிற்கு இன்றும் 2ஜி விவகாரம் பட்டிதொட்டியெல்லாம் பேசப்படுவதற்கான காரணமே, அதனால் கைமாறப்பட்டதாக சொல்லப்பட்ட ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி என்ற பிரமாண்டமான தொகைதான்.

இந்திய தொலைத் தொடர்புத்துறையில் முதன்முறையாக கம்பிவடம் இல்லாத சேவையை மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர முடிவுசெய்த தருணம் அது. 1ஜி என்ற வாக்கி டாக்கி பயன்பாட்டிற்கான தொழில்நுட்பத்தின் குறைகளைக் களைந்து, 2ஜி வேகத்துடன் கூடிய தொலைத்தொடர்பு சேவை படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது இந்தியாவில் உள்ள 22 தொலைத்தொடர்பு வட்டங்களுக்கான 281 மண்டல உரிமங்களும் அரசின் வசம் இருந்தன. இந்நிலையில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உரிமங்களைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்தது அரசு.



2001ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த இந்த தொழில்நுட்பத்திற்கு போதிய புரிதல் இல்லாததால், பெரும்பாலான செல்போன் சேவை நிறுவனங்கள் விண்ணப்பிக்க முன்வரவில்லை. அப்போதைய சூழலில் ரிலையன்ஸ் உள்ளிட்ட வெகுசில பிரபல நிறுவனங்கள் மட்டுமே உரிமங்களைப் பெற்று சேவையை வழங்கத் தொடங்கின.

இந்த உரிமம் வழங்குவதில் ‘முதலில் வருவோருக்கே முன்னுரிமை’ என்ற முறையை ட்ராய் எனும் தொலைத்தொடர்பு ஒழுங்கு ஆணையம் கடைபிடித்தது. அதாவது ஒரு தொலைத்தொடர்பு வட்டத்திற்காக இரண்டு நிறுவனங்கள் விண்ணப்பித்தால், அவற்றில் முதலில் விண்ணப்பிக்கும் நிறுவனத்திற்கே முன்னிரிமை வழங்கப்படும். அலைக்கற்றைப் பதுக்கலைத் தடுப்பதற்காகவும் அலைக்கற்றைப் பங்கீட்டில் சமநிலை கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதற்காகவுமே இந்த முறை பின்பற்றப்பட்டது.

இந்த முறையில் 2001ஆம் ஆண்டில் இருந்து ஒரே நுழைவுக்கட்டணம் கடைப்பிடிக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டுவரை நுழைவுக்கட்டணத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. அலைக்கற்றைகளை வெளிப்படைத்தன்மையுடன் ஒதுக்கீடு செய்யவேண்டும் என்றும் நுழைவுக்கட்டணத்தை அதிகரிக்கவேண்டும்’ என்ற அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கின் உத்தரவை, தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா ஏற்கவில்லை என்று கூறப்பட்டது. இதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட முன் அனுபவம் இல்லாத புதிய நிறுவனங்கள் பல, தங்களுக்கான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகளை வாங்கிக்குவித்தாகவும் புகார்கள் எழுந்தன.

யுனிடெக் மற்றும் ஸ்வான் என்ற அனுபவமில்லாத தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் அலைக்கற்றைகள் ஒதுக்கப்பட்டது. யுனிடெக் நிறுவனம் தான் ரூ.1661 கோடிக்கு வாங்கிய அலைக்கற்றையின் 60 சதவீதத்தை ரூ.6200 கோடிக்கு விற்றது. ஸ்வான் நிறுவனம் ரூ.1537 கோடிக்கு வாங்கிய அலைக்கற்றையின் 45 சதவீதத்தை ரூ.4200 கோடிக்கு விற்றது.



ஒட்டுமொத்தமாக 122 ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் அப்போது அமைச்சராக இருந்த ஆ.ராசாவால் வழங்கப்பட்டன. 2001ஆம் ஆண்டில் இருந்ததைவிட தொலைத்தொடர்புத்துறை மற்றும் செல்போன் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 20 மடங்கு அதிகமாக இருந்தபோதிலும், தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் குறைவான நுழைவுக்கட்டணமே வசூலிக்கப்பட்டதால், அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய தணிக்கைக்குழு மதிப்பீடு செய்து அறிக்கை வெளியிட்டது. மேலும், ஸ்பெக்ட்ரம் வழங்கலில் வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை. உரிமம் வழங்கப்பட்ட 122 நிறுவனங்களில் 85 நிறுவனங்களுக்கு முன் அனுபவம் இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. வெளிப்படைத்தன்மையோடு எதுவும் நடக்கவில்லை என பல குற்றச்சாட்டுகளை அதில் முன்வைத்தது. வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றவேண்டும் எனவும் பரிந்துரை செய்தது.

அப்போதிருந்த எதிர்க்கட்சிகள் சி.பி.ஐ-யை ‘காங்கிரஸ் பீரோ ஆஃப் இந்தியா’ என விமர்சித்து சி.பி.ஐ. தரப்பு விசாரணை நேர்மையானதாக இருக்காது எனக்கூறின. மேலும், வழக்கு விசாரணையை நடத்த ஒருங்கிணைந்த நாடாளுமன்ற விசாரணைக்குழுவை அமைக்கவும் வலியுறுத்தின. இந்தக் குழுவின் விசாரணையில் கலந்துகொள்ளமுடியாது என தெரிவித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழுவின் விசாரணையில் கலந்துகொள்வதாகக் கூறினார். இதையும் எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை.

இந்த விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் கலைஞர், குற்றம் இழைத்தவர்களுக்காக ஒருபோதும் திமுக துணைநிற்காது என நேரடியாகவே ஆ.ராசாவைத் தாக்கிப்பேசினார். இதையடுத்து 2010ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி ஆ.ராசா தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் பதவியில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தார்.

இந்த மெகா ஊழல் குறித்து ஆ.ராசாவிடம் 2010 டிசம்பர் 24, 25 மற்றும் 2011 ஜனவரி 31 ஆகிய தேதிகளில் சி.பி.ஐ. தன் தரப்பு ஆதாரங்கள் மற்றும் தகவல்களை வைத்து விசாரணையை நடத்தியது. இந்த விசாரணையில் ரூ.3 ஆயிரம் கோடி வரை ஊழல் செய்திருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறி அ.ராசாவையும், ரூ.200 கோடி ஊழல் செய்ததாக கலைஞரின் மகளும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழியையும் கைதுசெய்தது. இவர்கள் தவிர சாகித் பல்வா, சித்தார்த் பெகுரா, ஆர்.கே.சண்டோலியா உள்ளிட்ட 12 பேரின் பெயர்கள் இந்த ஊழல் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளன.

பிப்ரவரி 2012ஆம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் ஆ.ராசா தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கிய 122 உரிமங்களையும் முறைகேடானவை எனக்கூறி ரத்துசெய்தது. மேலும், யுனிடெக், ஸ்வான் மற்றும் டாட்டா தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு தலா ரூ.5கோடி அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. இந்த வழக்கை விசாரித்துவந்த ஒருங்கிணைந்த நாடாளுமன்ற விசாரணைக்குழு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு 2ஜி ஊழல் வழக்கில் சம்மந்தம் இல்லை என தெரிவித்து விடுவித்தது. மேலும், சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஆ.ராசா மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி முறையே 15 மற்றும் 6 மாத சிறைவாசத்திற்குப் பின் ஜாமீன் பெற்று வெளிவந்தனர். இவர்களின் மீதான வழக்கு விசாரணை டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்னமும் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த ஏப்ரல் 26ஆம் தேதியே நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என்று பலமுறை அறிவிக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் தள்ளிப் போகிறது.



கடைசியாக நவம்பர் 7 ஆம் தேதி தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தீர்ப்பு இன்னமும் இறுதியாகவில்லை எனக்கூறி தீர்ப்பு தேதி டிசம்பர் 5ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பு எதுவாக இருந்தாலும், அதுவே முடிவாக இருக்கப்போவதில்லை. ஒருவேளை ஆ.ராசாவிற்கு எதிராக தீர்ப்பு வந்தால் அவர் அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வார். அவருக்கு சாதகமாக வந்துவிட்டால் அரசும் உச்சநீதிமன்றத்தையே நாடும்.

உலகின் மிகப்பெரிய ஊழலான அமெரிக்காவின் வாட்டர்கேட் ஊழலுக்கு அடுத்தபடியாக 2ஜி ஸ்பெக்டரம் ஊழலை வைத்து விமர்சித்து எழுதியது டைம்ஸ் இதழ். இரண்டும் நடந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. சட்டம் அதன் பாதையிலேயே தீர்ப்பை வழங்கக் காத்திருக்கிறது.

- ச.ப.மதிவாணன்

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT