Advertisment

2500 ஆண்டுகள் பழமையான குறியீடுகளுடன் பானை ஓடுகள், சிறுவாள் கண்டெடுப்பு

2500-year-old potsherds with inscriptions, small sword found in Pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி மறமடக்கி கிராமத்தில் வில்லுனி ஆற்றின் பிறப்பிடமாக உள்ள சுமார் 56 ஏக்கர் பரப்பளவுள்ள கல்லுக்குளம்பல வருடங்களாக மராமத்து இல்லாததால் கனமழை பெய்தாலும் தண்ணீர் தேங்குவதில்லை. கடந்த ஆண்டு பெய்த கனமழைக்கு கரைகள் உடைந்து தண்ணீர் வீணானது. இதனால் அந்தப் பகுதியில் விவசாயத்திற்காக பல லட்ச ரூபாய் செலவு செய்து சுமார் 1200 அடி ஆழம் வரை ஆழ்குழாய் கிணறுகள் அமைத்துள்ளனர். சிறுகுறு விவசாயிகளால் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க முடியாமல் விளை நிலங்களை தரிசாக போட்டுள்ளனர்.

Advertisment

இந்த நிலையில் தான் நாளுக்கு நாள் நிலத்தடி நீர் கீழே செல்வதால் விவசாயம் பொய்த்துப் போவதுடன் குடிநீர் தட்டுப்பாடுகளும் கூட ஏற்படலாம் என்ற நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இளைஞர்கள் கல்லுக்குளத்தில் நின்ற சீமைக்கருவேல மரங்களை அகற்றி தண்ணீரை சேமிக்க முயற்சி செய்தனர்.

Advertisment

இந்த நிலையில் நிலத்தடி நீரை பாதுகாக்க மழைத் தண்ணீரை ஏரி, குளங்களில் சேமிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கைஃபா அமைப்பினரின் தொடர் பணிகளைப் பாராட்டிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் மறமடக்கி கல்லுக்குளம் சீரமைக்க கேட்டுக் கொண்டதுடன் கிராம மக்களின் மேற்பார்வையில் கைஃபாவின் இயந்திரங்கள் உதவியுடன் அதற்கான செலவினங்களை ஏற்று கடந்த 42 நாட்களாக கல்லுக்குளம் சீரமைப்பு பணிகள் நடக்கிறது. குளத்தின் கரையை பலப்படுத்தும் விதமாக சுமார் 15 அடி உயரத்தில், 20 அடி அகலத்தில் 1.5 கி மீ தூரத்திற்கு கரையை பலப்படுத்தி சாலையாக அமைத்து வருகின்றனர். கைஃபாவின் 140 வது நீர்நிலைப் பாதுகாப்புப் பணி 42 நாட்களையும் கடந்து நடக்கிறது.

கல்வட்டம் நிறைந்த குளம் கல்லுக்குளமானது;

இந்த குளத்தின் பெயர் கல்லுக்குளம் என்று அழைக்கின்றனர். அதாவது குளத்தின் உள்வாயில் தண்ணீர் உள்ளே செல்லும் பகுதியில் செம்புரான் கற்களைக் கொண்டு ஆங்காங்கே கல்வட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதனால் இந்தக் குளம் கல்லுக்குளம் என்று பெயரானதாகக் கருதப்படுகிறது. கல்லுக்குளம் நிறைந்தால் கடைசி போவது வில்லுனி ஆற்றில் தான்.

வில்லுனி ஆற்றங்கரைகளில் முதுமக்கள் தாழிகள்;

கல்லுக்குளம் சீரமைப்பு பணிகளைப் பார்க்கநாம் சக பத்திரிகை நண்பர் சுரேஷ் மற்றும் நண்பர்கள் பிரபாகரன், தங்க.கண்ணன் ஆகியோருடன் சென்றிருந்தபோது சில இடங்களில் தெரிந்த கல்வட்டங்களைப் பார்த்து அங்கே சென்று பார்த்தபோது அதில் ஒரு கல்வட்டத்தின் நடுவில் குளம் சீரமைப்பிற்காக சில பக்கெட் மண் தோண்டப்பட்ட நிலையில் கிடந்த கல்வட்டத்திற்குள் இருந்து எடுக்கப்பட்ட மண்ணில் முதுமக்கள் தாழி கனமான பானை ஓடுகள், கருப்பு சிவப்பு பனை ஓடுகள் சிதறிக் கிடந்தது. அந்த ஓடுகளை எடுத்து பார்த்தபோது சில ஓடுகளில் குறியீடுகள் காணப்பட்டது. இந்த குறியீடுகள் இதே வில்லுனி ஆற்றங்கரையில் சுமார் 5 கி.மீ தள்ளியுள்ள திருநாளூரிலும், 20 கி.மீ தள்ளியுள்ள மங்களநாடு பகுதியில் உள்ள அம்பலத் திடல் என்ற பகுதியிலும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்து ‘நக்கீரனில்’வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த ஓடுகளுடன் துருப்பிடித்த சிறிய வாள் ஒன்றும் கண்டெடுத்தோம். அதாவது வில்லுனி ஆற்றங்கரை ஓரத்தில் தொடர்ச்சியாக மக்கள் வாழ்ந்து மடிந்ததற்கான சான்றாக இந்த கல்வட்டங்கள் மற்றும் முதுமக்கள் தாழிகள் காணப்படுகின்றன.

2500 ஆண்டுகள் பழமையானது;

இந்த குறியீடுகளுடன் உள்ள பானை ஓடுகள் மற்றும் துருப்பிடித்த சிறுவாள் ஆகியவற்றை புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் ஆசிரியர் மங்கனூர் ஆ.மணிகண்டனிடம் அனுப்பி கேட்டபோது, “மறமடக்கி கல்லுக்குளத்தில் உள்ள கல்வட்டங்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது தான் ஆனால் அந்த வட்டங்களுக்குள் உள்ள முதுமக்கள் தாழி, குறுவாள் என்பது புதிய பதிவாக உள்ளது.

2500-year-old potsherds with inscriptions, small sword found in Pudukkottai

அதாவது இந்த பகுதியில் கிடைத்துள்ள பானை ஓட்டு குறியீடுகளும் இதே வில்லுனி ஆற்றங்கரையில் உள்ள அம்பலத்திடலில் கிடைத்துள்ள பானை குறியீடுகளும் ஒரே மாதிரியாக உள்ளது. இதே போல பல இடங்களிலும் கிடைத்துள்ளது. அதாவது, முதுமக்கள் தாழிகளில் இந்த குறியீடுகள் இருப்பது ஈம குறியீடாக இருக்கலாம். மூன்று தனித்தனி கோடுகள் முக்கோணம் போல ஒன்று சேர்வது போல அந்த குறியீடு உள்ளது. மற்றொன்று வேறு மாதிரியாக உள்ளது. அதே போல அம்பலத்திடலில் கற்கோடரி கிடைத்தது மறமடக்கியில் குறுவாள் கூடுதலாக கிடைத்துள்ளது சிறப்புமிக்கதாக உள்ளது. சுமார் 2500 ஆண்டுகள் பழமையானதாகக் கருதலாம்.

வில்லுனி ஆற்றங்கரையில் தொடர்ச்சியாக மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கு சான்றாக உள்ளது. அமைச்சர் ஆலோசனையில் கைஃபாவின் நீர்மேலாண்மைப் பணியின்போது பெரிய வரலாற்றுச் சான்றுகள் புதைந்திருப்பதை அறிந்தோ அறியாமலோ தொடர்ச்சியாக தோண்டி கல்வட்டங்களை அழிக்காமல் பாதுகாப்பாக வைத்துவிட்டு மற்ற இடங்களில் பணிகள் செய்து வருவது பாராட்டத்தக்கது. மேலும் கள ஆய்வு செய்தால் கூடுதல் சான்றுகள் கிடைக்கக்கூடும் என்ற நம்பிக்கை உள்ளது. இவற்றை கிராம மக்கள் பாதுகாக்க வேண்டும் என்றார். உள்ளூர் இளைஞர்களோ இதே போல பல கல்வட்டங்கள் இங்கே உள்ளது. இது என்ன என்று தெரியாமல் இருந்தாலும் ஏதோஒரு வரலாற்றுச் சான்று என்று ஒதுக்கி பாதுகாத்து வருகிறோம். தொடர்ந்து பாதுகாப்போம் என்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுபோன்ற கல்வட்டங்கள், முதுமக்கள் தாழிகள் ஏராளம் காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

pudukkottai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe