Skip to main content

22 வருடங்களுக்கு முந்தைய ‘லாக்கப்’ சித்திரவதை! அங்கம்மாளின் ரத்தச் சரித்திரம்!

Published on 29/06/2020 | Edited on 30/06/2020

 

angammal

 

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் காவல்துறை அதிகாரிகள் நடத்திய மிருகவெறி தாக்குதலைத் தொடர்ந்து, தந்தையும் மகனும் உயிரைவிட்ட நிலையில், ‘லாக்கப் மரணங்கள்’ குறித்து, தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.   

 

இன்றைய இளம் தலைமுறையினர், 22 வருடங்களுக்கு முன் மதுரையில் நடந்த லாக்கப் சித்திரவதையை அறிந்திருக்க வாய்ப்பில்லை. 1998-இல் நடந்த அந்தக் கருப்புச் சம்பவம் குறித்து, 13 வருடங்களாக வழக்கை நடத்தி வந்த நிலையில், 2011-இல் நக்கீரனுக்காக, பாதிப்புக்கு ஆளான அங்கம்மாள் மனம் திறந்தார். 2016-இல் அந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தீர்ப்பு வழங்கியது. 

 

அப்போது 'நக்கீரனில்' வெளியான செய்திக் கட்டுரையை, நக்கீரன் இணையத்தள வாசகர்களுக்காக, அப்படியே தருகிறோம். 

 

உச்சக் கட்டத்தை நெருங்கி விட்டது வழக்கு. இந்தச் சூழ்நிலையில் மறக்கவே முடியாத அந்த இருண்ட நாட்களை விவரிக்கிறார் அங்கம்மாள்!

 

“தலை கீழா எம் புருஷனைக் கட்டிப் போட்டு அவரு கண்ணு முன்னாலயே நாலு பேரு என்னை நாசப்படுத்தினார்கள்..! தாங்க முடியாத அத்தனை சித்திரவதையும் பட்டுட்டு  ‘மானமே போச்சுடி.. இனி நான் பிழைக்க மாட்டேன்’னு என் மடிலயே உசிரை விட்டாரே..! அப்பாவைக் கொன்னுட்டானுவ.. அம்மாவைச் சீரழிச்சிட்டானுவன்னு பழி வாங்குற வெறிய மனசுக்குள்ள புதைச்சிட்டு பதிமூணு வருஷமா நான் பெத்த புள்ளைக படற பாடு இருக்கே..! இந்தக் கொடுமை யாருக்கும் வரக் கூடாது சாமீ..ய்..ய்..”


பெருங்குரலெடுத்து கதறிய  அங்கம்மாள்  


“தெனமும் ராத்திரில தூக்கம் வராம  நான் புலம்புறதக் கேட்டுட்டு எந் தலமாட்டுல ஒக்காந்து ‘இந்த ஊரே கேவலமா நம்மப் பாக்குது.. அத்தன அசிங்கமும் பட்டுட்டோம்.. இனியும் எதுக்கும்மா நாம உசிரோட இருக்கணும்? ஒண்ணு நாம சாகணும்.. இல்லன்னா அவனுகளக் கொல்லணும்..’னு துடியாத் துடிப்பானுக. அடேய்.. நீதி செத்துப் போச்சுன்னு சொல்லாதிங்கடா.. நல்ல தீர்ப்பு வரும்.. நாம ஜெயிப்போம்.. பண்ணுன குற்றத்துக்கு அவனுக தண்டனை அனுபவிப்பானுக.. ஒரு வேளை கேசுல நாம தோத்துப் போனாச் சொல்லு.. அப்பச் சாவோம்..னு எம் புள்ளகள மனசத் தேத்துவேன்.. அதுகளும் எம் பேச்சுக்கு அடங்கிக் கெடக்குதுக..” பெருக்கெடுத்த கண்ணீரை சேலைத் தலைப்பால் துடைத்துக் கொண்டு விரக்தியிலும் நம்பிக்கை துளிர்க்கப் பேசினார். 

 

“கொலை பண்ணிருக்கானுக.. பலாத்காரம் செஞ்சிருக்கானுக.. இம்புட்டு அக்கிரமம் பண்ணுனவனுகளுக்கு  மாசா மாசம் சம்பளம் கொடுத்திக்கிட்டிருக்கு கவர்மெண்ட்... இத்தனை வருஷமாச்சு.. இன்னும் அவனுகளுக்கு தண்டனை கிடைக்கலியே.. என்ன சட்டமோ?  என்ன நியாயமோ? தப்பு பண்ணுன அவனுக என்னமோ பொண்டாட்டி புள்ளகளோட நிம்மதியாத்தான் வாழ்ந்துக்கிட்டிருக்கானுக.. மனசெல்லாம் கொதிக்கு..” 

 

-அங்கம்மாளின் முன்றாவது மகன் சுந்தரத்துக்கு அப்படி ஒரு ஆத்திரம்.

 

angammal


அங்கம்மாள் யார்? என்ன வழக்கு இது?


உசிலம்பட்டியை அடுத்துள்ள டி.கிருஷ்ணாபுரம் தான் அங்கம்மாளின் கிராமம். கணவன் குருவையா மற்றும் மகன்கள் மூவருடன் சொந்தத் தோட்டத்தில் விவசாயம் பார்த்து அமைதியாகத்தான் போய்க் கொண்டிருந்தது இவர்களது வாழ்க்கை. அப்போது அங்கம்மாளுக்கு வயது 33 இருக்கும். காக்கிகள் உருவத்தில் ஆரம்பித்தது வினை. 


27-7-1998.. அது ஒரு கருப்பு நாள்.. காலை 7 மணி..


“ஒம் புருஷன் எங்கேடி..”  ஜீப்பில் வந்த போலீசார் அதட்டலுடன் விசாரிக்க..


“தெரியாதுங்க..அவுக அம்மா வீட்டுக்கு.. பக்கத்துல இருக்குற கல்லுப்பட்டிக்கு போயிருப்பாருன்னு நெனக்கிறேன்..” – இது அங்கம்மாள்.

 

“அப்ப நீ ஏறுடி ஜீப்புல..”  

 

உத்தரவு பறக்க.. சூது வாது தெரியாமல் சட்டென்று ஏறினாள் அங்கம்மாள்.

 

ஊரே வேடிக்கை பார்த்தது. அந்த இடத்தை விட்டு ஜீப் நகர்ந்ததுமே பின் சீட்டில் ஒடுங்கிப் போய் உட்கார்ந்திருந்த அங்கம்மாளிடம் சில்மிஷம் செய்தது சீருடையில் இருந்த ஒரு மிருகம். முன்னால் அமர்ந்திருந்த டி.எஸ்.பி.யும் கண்டு கொள்ளவே இல்லை.

 

உசிலம்பட்டி காவல் நிலையத்துக்கு கொண்டு போனார்கள். எங்கு தேடியும் குருவையா கிடைக்காத நிலையில் மாலை 5 மணிக்கு மதுரையை அடுத்துள்ள ஊமச்சிகுளம் காவல் நிலையத்தில் பின்புறம் கைகளைக் கட்டி நிற்க வைக்கிறார்கள். அன்றிரவே கோடாங்கி நாயக்கன் பட்டியில் குருவையாவைப் பிடிக்கிறார்கள். உசிலம்பட்டி காவல் நிலையத்தில் மாறி மாறி விழுகிறது சாட்டை அடி. “பூச்சி, பாலுக்கும் உனக்கும் பழக்கம் இருக்குல்ல.. அவனுக களவாண்டு கொடுத்த நகைய யார்ட்ட கொடுத்த..? ஆளைக் காட்டு..”  திரும்பத் திரும்ப இதே கேள்வியைத்தான் கேட்டது போலீஸ். குருவையாவோ “அய்யோ.. அவனுகளுக்கும் எனக்கும் ஒரு சம்மந்தமும் இல்ல..”  என ஒரே பதிலையே சொன்னான். 

 

யார் இந்த பூச்சி, பாலு? அங்கம்மாள், குருவையாவிடம் என்ன விசாரணை நடக்கிறது?

 

பூச்சி, பாலு, அய்யனார் மூவரும் நகைகளைத் திருடி அடிக்கடி போலீஸிடம் சிக்கும் திருட்டுப் பேர்வழிகள். பெருமாளும் பஞ்சம்மாளும் குருவையாவின் தோட்டத்தில் வேலை பார்ப்பவர்கள். இவர்கள் பெண் கொடுத்தது நகைத் திருடன் பாலுவின் தம்பிக்கு. இதை அறியாத குருவையாவும் அங்கம்மாளும் தம்மிடம் வேலை பார்ப்பவர் என்பதால்,  பெருமாளின் மகள் திருமணத்துக்குச் சென்று கை நனைக்கிறார்கள். அவ்வளவுதான்.. கரையான் புற்றுக்குள் கருநாகம் புகுந்தது போல், இந்த ஒரு விஷயத்தை வைத்துக் கொண்டுதான் விசாரணை என்ற பெயரில் குருவையாவின் குடும்பத்தையே சின்னா பின்னமாக்கியது போலீஸ். 

 

மறுநாள் 28 ஆம் தேதி.. குருவையாவோடு, பெருமாளையும் பஞ்சம்மாளயும் அங்கம்மாளை வைத்திருந்த ஊமச்சிகுளம் காவல் நிலையத்துக்கு அள்ளிக் கொண்டு வந்தது போலீஸ். ‘முதலில் அடி மேல் அடி; பிறகு தான் விசாரணை’ என்ற வழக்கமான போலீஸ் நடைமுறையில் மூவரையும் மூர்க்கத்தனமாக அடித்தார்கள் காக்கிகள். முதல் நாள் இரவு முழுவதும் கைகள் கட்டப்பட்ட நிலையில் தூங்க விடாமல்  தன்னை நிற்க வைத்த போலீஸ், கணவனை அடிப்பது கண்டு ஆவேசமானாள் அங்கம்மாள். “ஏஞ் சாமீ.. இப்படி அடிக்கிறீங்க?” என்று கேட்ட நொடியிலேயே தோள்பட்டை, கை, கால், பின்புறம் என ஒரு இடம் விடாமல் லத்தியால் துவம்சம் செய்ததில் அங்கம்மாளின் இடது கை முறிந்து போனது. வியர்வையும் ரத்தமும் சிந்திக் கிடக்க.. தாகத்தால் தவித்த நால்வரும் “கொஞ்சம் தண்ணி கொடுங்கய்யா..” என்று கெஞ்சினார்கள். குருவையாவையும் பெருமாளையும் வெயிலில் முட்டி போட வைத்து அடித்ததில் கிறங்கி விழுந்தார்கள். அன்றிரவே குருவையாவையும் அங்கம்மாளையும் கருப்பாயூரணி காவல் நிலையத்துக்கு கொண்டு போனார்கள். 

 

angammal


“அந்த டேஷன்ல மொளகாப் பொடியப் பிழிஞ்சு அவரு கண்ணுல ஊத்துனானுக. ‘நீ ஒத்துக்க.. இல்லாட்டி எவனயாச்சும் கையக் காட்டு.. இல்லைன்னா ஒரு நகைக் கடையச் சொல்லு.. அங்கதான் கொடுத்தேன்னு.. ஒம் பேரச் சொல்லி அங்க போயி நாங்க அள்ளிட்டு வந்திர்றோம்..” அடிச்சிக்கிட்டே பொய் சொல்லச் சொல்லி வற்புறுத்துனானுக.. எம் புருஷனோ  ‘நான் கிராமத்துக்காரன்.. அப்படில்லாம் பொய் சொல்ல மாட்டேன்.. அந்தப் பாவம் என் குடும்பத்தச் சும்மா விடாது..’ன்னு அழுதாரு. உடனே அந்தப் போலீஸ் நாயிக எம் பக்கம் திரும்பி ஒரு மாதிரி பார்த்தானுக.. “கேக்குற ஒங்களுக்கே மனசு இம்புட்டு வலிச்சுச்சுன்னா.. மனசாலும் ஒடம்பாலும் அப்ப இருந்து இப்ப வரைக்கும்  நான் பட்டு வர்ற வலி இருக்கே.. அத நீங்க கேட்டுத்தான் ஆகணும்.. மானம், கற்புன்னு பொத்தி வைக்கிற சமாச்சாரமா இது? எல்லாத்தயும் உதிர்க்க வச்சுட்டானுகளே.. இந்த ஊரு ஒலகத்துக்கு நான் பட்டதெல்லாம் தெரியணும். போலீஸ்காரனுவ எப்பிடியாப்பட்ட ஆளுகன்னு அவன் பொண்டாட்டி புள்ளகளகளும் தெரிஞ்சுக்கணும்.. இதப்படிச்சிட்டாவது கெட்ட போலீசுக திருந்தணும்..” என்று குமுறலைத் தொடர்ந்தார். 

 

என்னையும் எம் புருஷனையும் சங்கிலில கட்டி டேஷனுக்கு வெளிய இழுத்துட்டு வந்து அந்த ராத்திரில வீதில நடக்க விட்டானுக. அப்பவும் அடிச்சுக்கிட்டே வந்தானுக. இருட்டுல எங்கள அந்தக் கோலத்துல பார்த்தவங்க அலறியடிச்சுட்டு ஒடுனாங்க. அஞ்சு நாளாச்சு.. அடிச்ச அடில என் புருஷனுக்கு  ஆணுறுப்பே இல்லாம சிதைஞ்சு போச்சு.. பேசக்கூட முடியாம முனங்கினாரு ‘நெஞ்சு அடைக்குது அங்கம்மா.. நான் செத்துப் போயிருவேன்.. ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போ’ன்னாரு. ஒவ்வொரு போலீஸ்காரன் கால்லயும் விழுந்தேன். ‘செத்தாச் சாகுறான்’னு ஈவிரக்கமில்லாம சொன்னானுக. ஆறாம் நாத்துதான் போலீசுக்கு ஒரு பயம் வந்து நர்ஸ விட்டு ஊசி போடச் சொன்னானுக. அப்புறம் ஆஸ்பத்திரிக்கு வேன்ல ஏத்திட்டுப் போனானுக. ஏழாம் நாத்து பேச்சு மூச்சில்லாமக் கிடந்தவரைத்தான் கண்ணுல காட்டுனானுக. ஒங்க மேல ஒரு தப்பும் இல்ல.. வீட்டுக்குப் அனுப்புறோம்னானுக. குத்துயிரும் குலை உயிருமா கெடந்த எம் புருஷனப் பார்த்துட்டு கூட்டியாந்த போலீச சத்தம் போட்டாரு டி.எஸ்.பி. ஒரு ஆஸ்பத்திரில சேர்த்தாரு. இந்தக் கேடு கெட்ட ஒலகத்துல வாழ்ந்தது போதும்னு நெனச்சாரோ என்னமோ அங்கயே எம் மடில உசிர விட்ட்டுட்டாரு மவராசன். அவரு போய் சேர்ந்துட்டாரு.  நாங்க செத்துக்கிட்டே இருக்கோம்...”

 

நா வறட்சியால் தொண்டையைச் செரும.. தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான் இன்னொரு மகன் பழனி. “அட போடா.. விக்கிக்கிட்டு நான் செத்தா என்ன? வாழ்ந்தா என்ன? அந்த ஒம்பது போலீசுக்கும் தண்டனை வாங்கிக் கொடுத்துட்டுத்தான் நான் கண்ணை மூடுவேன்.” என்று தரையில்  அடித்தார். 

 

“அம்மாவோட வைராக்கியம் தெரியுமா? எத்தனை லட்சம்னாலும் தர்றேன்னு கேசை வாபஸ் வாங்கச் சொல்லி வந்தானுக. பணம் எதுக்குடா? எம் புருஷன திருப்பித் தாடான்னு வெரட்டி அடிச்சிட்டாங்க.. அம்மாக்கு இப்படி ஆயிப்போச்சேன்னு அது பெத்த புள்ளங்க நாங்க தவிக்குற தவிப்ப வார்த்தைல சொல்ல முடியாது. தூங்குறப்ப திடீர்ன்னு முழிப்பு தட்டும். இப்பவே கிளம்பி அந்தப் போலீஸ்காரனுகள ஏதாச்சும் பண்ணனும்னு வெறி வரும். அடக்கிக்குவேன். எங்க அம்மா மட்டுமா பாதிக்கப்பட்டிருக்காங்க..? நாட்டுல எத்தனை பேரோட அம்மாக்கள இந்தப் போலீஸ்காரனுவ கடிச்சுக் கொதறியிருப்பானுக.. மானத்துக்குப் பயந்து இவனுக அயோக்கியத்தனத்த வெளில சொல்ல முடியாத அத்தனை அம்மாக்களுக்கும் சேர்த்துத்தான் நாங்க போராடுறோம். சட்டம் இவனுகள தண்டிக்கணும். அதுக்குத்தான் எங்க மூத்த அண்ணன் மலைச்சாமி எம்.எல். படிச்சு வக்கீலாயிருக்கான். அம்மாவுக்காக அரசு வழக்கறிஞருக்கு உதவியா அவனும் ஆஜராகப் போறான்..” என்று கண் கலங்கினார்.

 

ஆர்.டி.ஓ. விசாரணைக்குப் பிறகு 9 போலீஸார் மீது உசிலம்பட்டி நீதி மன்றத்தில் வழக்குப் பதிவானது. மூன்று தவணைகளில் மொத்தம் ரூ.3 லட்சத்தை அங்கம்மாளுக்கு தற்காலிக நிவாரணமாக வழங்கியது அரசாங்கம். மதுரை மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த அங்கம்மாளை அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர் நேரில் பார்த்து ஆறுதல் கூறினார். இந்த 9 பேர் உட்பட சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் பணி புரிந்த 17 போலீஸார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. 28-4-1998இல் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் 6ஆவது எதிரியான ராமசாமி. 16-9-2009இல் மற்ற எட்டு போலீசாரும் சஸ்பெண்ட் ஆனார்கள். டி.எஸ்.பி.தங்கப்பாண்டியனுக்கு ஓய்வூதியத்தை ரத்துச் செய்து விட்டது அரசாங்கம். 5 ஆவது எதிரி தனுஷ்கோடி கடந்த ஆண்டு இறந்து போனார். ஆனாலும், சஸ்பெண்ட் ஆனவர்கள் ‘ஸ்டே’ வாங்கி பணிகளில் தொடரவே செய்கிறார்கள். வழக்கு உசிலம்பட்டியில் நடந்தால், விசாரணை முறையாக இருக்காது என சென்னை உயர் நீதி மன்றத்தில் ரிட் போட்டார் அங்கம்மாள். உடனே இந்த வழக்கு ஆண்டிபட்டிக்கும் தொடர்ந்து தேனி கோர்ட்டுக்கும் மாற்றப்பட்டது. காவல்துறையினருக்கு எதிராக 13 ஆண்டுகளாக இழுத்துக் கொண்டே செல்லும் இவ்வழக்கில் வரும் மார்ச் மாதத்துக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதி மன்றம் இப்போது உத்தரவிட்டிருக்கிறது. 

 

‘நான் பெற்ற மகனே எனக்கு நீதி கிடைக்க வாதாடுவான்’ என அங்கம்மாள் அத்தனை நம்பிக்கை வைத்திருக்கும் மலைச்சாமி நம்மிடம் “எங்க அப்பா செத்தப்ப நான் எட்டு படிச்சிட்டிருந்தேன். எல்லாரும் கை விட்ட நிலையில் என்னோட லட்சியமான வக்கீல் படிப்புக்கு உறுதுணையா இருந்துச்சு மக்கள் கண்காணிப்பகம். என் வேதனையெல்லாம் சாதாரண மனுஷன் தப்பு பண்ணுனா எவ்வளவு சீக்கிரமா தண்டனை கிடைச்சிருது.. போலீஸ்ன்னா அவங்க நெனச்சபடி வழக்கை இழுத்தடிக்க ஸ்டே கிடைச்சிருது. கோர்ட்டே ஒரு தடவை குற்றம் சாட்டப்பட்ட போலீஸ்காரர்களைப் பார்த்து ‘நீங்கள் குற்றமிழைத்தது உண்மை என்றால் ஒத்துக்கொண்டு தண்டனையை ஏற்றுக்கொள்ளுங்கள். குற்றமற்றவர் என்றால் தாமதிக்காமல் வழக்கு விசாரணைக்கு (Trial) உட்பட்டு நிரபராதி என்பதை நிரூபியுங்கள்..’ என்று அறிவுறுத்தியிருக்கிறது. இப்பக் கூட காக்கிச் சட்டை போலீஸை எங்கு பார்த்தாலும் மனசு கொதிக்கத்தான் செய்யுது.  அந்த அளவுக்கு நாங்க பாதிக்கப்பட்டிருக்கோம். 

 

கற்புக்கரசின்னா கண்ணகி, சீதைன்னு சொல்றாங்க. கோவலனைக் கொன்னுட்டாங்கன்னு மதுரையவே அழிச்சா கண்ணகி. அது அவளுக்கு நியாயமாப்பட்டது. கண்ணகியக் காட்டிலும் எங்கம்மா கோபம் பெரிசு. ஆனா, சொத்தையெல்லாம் வித்து நீதி கேட்டு 13 வருஷமா போராடிட்டிருக்காங்க. இது போன்ற துயரங்கள் காவல் துறையால் இனி எந்தக் குடும்பத்துக்கும் ஏற்படக்கூடாது. அதற்காகத்தான் இத்தனை உறுதியுடன் போராடிக்கிட்டிருக்கோம்.” என்றார் தீர்ப்பை எதிர் நோக்கி.

 

‘அங்கம்மாளிடமிருந்து நாங்கள் நிறைய கற்றிருக்கிறோம். இவர் அனுபவித்த சித்திரவதைகளே இங்கு மறு வாழ்வு மையமாக எழுந்து நிற்கிறது. பாதிக்கப்பட்டோர் உரிமை என்றெல்லாம் நாங்கள் முன்னெடுக்கும் முன் முயற்சிகளுக்கு இவரே முன்னோடி..’ என்று பெருமித்தோடு சொல்கிறது மதுரையில் இயங்கி வரும்  மக்கள் கண்காணிப்பகம். 

 

ஆயிரம் கண்ணகிகளுக்குச் சமமானவர் அங்கம்மாள்! 

 

மேலும், அந்த செய்திக் கட்டுரையில் இடம்பெற்ற விஷயங்கள்:

 

உச்ச நீதிமன்றத்தின் கட்டளைகளை மீறியிருக்கிறார்கள்..

 

“நகை திருட்டு குறித்து குருவையா, அங்கம்மாள் மீது புகார் எதுவும் இல்லை. முதல் தகவல் அறிக்கையே எழுதவில்லை. ஆனாலும், அவர்கள் வசித்த எல்லைக்குள்ளேயே வராத சம்பந்தமில்லாத  வெவ்வெறு காவல் நிலையங்களில் 7 நாட்களாக அடைத்து வைத்து சித்திரவதை செய்திருக்கிறார்கள். விசாரணைக்கு பெண்களையே அழைத்து வரக்கூடாது. அவர்கள் வாழும் இடங்களிலேயே விசாரிக்க வேண்டும். அப்படி அழைத்து வந்தாலும் இரவு நேரத்தில்  பெண்களை காவல் நிலையங்களில் வைத்திருக்கக் கூடாது. ஒரு பெண்ணை விசாரிக்கும் போது பெண் காவலர் ஒருவர் உடனிருக்க வேண்டும். அங்கம்மாள் விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தின் கட்டளைகள் அப்பட்டமாக மீறப்பட்டிருக்கின்றன” என பாயிண்டுகளை முன் வைக்கும் வழக்கறிஞர் மலைச்சாமி “அய்யோ.. குருவையாவையும், அங்கம்மாளையும் நாங்கள் யாரும் காவல் நிலையத்துக்கே அழைத்துப் போகவில்லை. பிராந்திக் கடைக்கே வந்து குடிக்கும் பழக்கம் அவர்களுக்கு உண்டு. அப்போது சிலருடன் ஏற்பட்ட சண்டையில்தான் ரத்தக்காயங்கள் ஏற்பட்டிருக்கிறது என்று பொய் சாட்சிகளை வைத்து, குற்றம் சாட்டப்பட்ட காவல் துறையினர் நீதித் துறையை ஏமாற்ற நினைத்தது செல்லுபடியாகவில்லை” என்றார்.

 

குற்றச்சாட்டு யார் யார் மீது? அவர்கள் என்ன சொல்கிறார்கள்?


(1) எம்.பி.மகாலிங்கம், காவல் நிலைய ஆய்வாளர், எழுமலை காவல் நிலையம்.

(2) ஏ.ஞானசேகரன் (காவலர் எண் 1769) ஊமச்சிகுளம் காவல் நிலையம்

(3) சி.சிங்களன், தலைமைக் காவலர் எண் 615, உசிலம்பட்டி காவல் நிலையம்

(4) சி.குணபாலன், காவலர் எண் 727, உசிலம்பட்டி காவல் நிலையம்

(5) எம்.தனுஷ்கோடி, தலைமைக் காவலர் எண் 1221, சாப்டூர் காவல் நிலையம்

(6) ராமசாமி, காவல் சார்பு ஆய்வாளர், கருப்பாயூரணி காவல் நிலையம்

(7) எஸ்.சங்கர், முதல் நிலைக் காவலர் எம்.ஆர். 9187, கருப்பாயூரணி காவல் நிலையம்

(8)  கணேஷ்குமார், காவலர் எண் 1676, கருப்பாயூரணி காவல் நிலையம்

(9) ஜெயராஜ், காவலர் எம்.ஆர்.533, சிலைமான் காவல் நிலையம் என காவல் துறையினர் 9 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு, அப்போது அவர்கள் பணியாற்றிய காவல் நிலையங்களின் ஊர் பெயரைக் குறிப்பிட்டு வழக்குப் பதிவாகியிருக்கிறது.

 

http://onelink.to/nknapp


குற்றம் சாட்டப்பட்டவர்களில்  6 ஆவது நபரான ராமசாமி, பதவி உயர்வு பெற்று தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணி புரிகிறார். அவரைத் தொடர்பு கொண்டோம். ‘பாலியல் ரீதியாக துன்புறுத்தி வன்புணர்ச்சி செய்ததாக உங்களைக் குற்றம் சாட்டுகிறாரே அங்கம்மாள்..?’ எனக் கேட்டோம். 


“அப்ப எல்லாப் பத்திரிக்கைலயும் அப்படித்தான்  செய்தி வந்துச்சு.. அப்படி எதுவும் கிடையாது. அங்கம்மா என்னை மட்டும் சொல்லியிருக்க மாட்டா.. என் பெயரையும் சொல்லியிருக்க மாட்டா.. வழக்கு கோர்ட்ல இருக்கு. இதைப் பத்தி நான் எதுவும் சொல்ல முடியாது.” என்று மறுத்தார்.  

 

அது சரி, உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை 2016-இல் அளித்த தீர்ப்பினை பார்போம்!


நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால்,  குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான வழக்கை நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டது என்ற முடிவுக்கு வந்துள்ளதாகவும்,  அதனால், இந்த வழக்கின் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

நீதி செத்துப்போச்சு!


அங்கம்மாளின் மகனும் வழக்கறிஞருமான மலைச்சாமியை தொடர்புகொண்டோம். “நான் வேறென்ன சொல்ல முடியும்? பதினெட்டு வருடங்களாக நீதிக்காகப் போராடியதெல்லாம் வீணாயிருச்சு. எங்களைப் பொறுத்த மட்டிலும் நீதி செத்துப்போச்சு!” என்று குமுறி அழுதார்.  

 

 

 

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.