இந்திய அரசியலில் வரலாறு படைக்கப்போகும் 21 வயது கல்லூரி மாணவி...!

arya

நடந்து முடிந்த கேரள உள்ளாட்சித் தேர்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணி அமோக வெற்றிபெற்றுள்ளது. முதல்வர் பினராயி விஜயன் மீது பல குற்றச்சாட்டுகளைஎதிர்க்கட்சியினர் அடுக்கினாலும், அவற்றை முறியடித்து பெருமளவில் வெற்றிபெற்றிருக்கிறார் பினராயி. கேரளாவின் தலைநகரான திருவனந்தபுர மாநகராட்சித் தேர்தலில் இடதுசாரி கூட்டணிக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக்கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி இருந்தது. கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் இடதுசாரி முதலிடம் மற்றும் பாஜக இரண்டாம் இடம் பிடித்திருந்தது. இந்தமுறை எப்படியாவது முதலிடத்தைப் பிடித்துவிட வேண்டும் என்று பாஜக முழு மூச்சில் பிரச்சாரம் மேற்கொண்டது. ஆனால், இடதுசாரி 51 சீட்டுகளைப் பெற்று திருவனந்தபுரத்தை அவர்கள் வசமாக்கியது. இப்படி முழு கவனம் பெற்ற இந்த உள்ளாட்சித் தேர்தலில் திருவனந்தபுர மாநகராட்சியில், 21 வயது பெண், மேயராகப் பதவியேற்கப்போவதால், இந்தியா முழுவதும் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.

கேரளாவிலுள்ள சில கல்லூரிகளில் இன்னும் மாணவர்களுக்கு இடையிலான தேர்தல், மாநிலத் தேர்தல் அளவிற்கு சண்டை சச்சரவுகளுடன் நடைபெறுகிறது என்பது பலரும் அறிந்ததே. அந்த வகையில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஆர்யா ராஜேந்திரன் என்கிற 21 வயதான கல்லூரி மாணவி திருவனந்தபுர மாநகராட்சித் தேர்தலில் முடவன்முகல் வார்டில் போட்டியிட்டு வென்றுள்ளார். முதலில் மேயராக வாய்பு இருப்பதாகச் சொல்லப்பட்ட இரு பெண் வேட்பாளர்களும்தோல்வி அடைந்ததால், ஆர்யாவுக்கு இந்த வாய்ப்பை திருவனந்தபுர கம்யூனிஸ்ட் மாவட்ட கமிட்டி தந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. 'ஆல் செயிண்ட்ஸ் பெண்கள் கல்லூரி'யில் பிஎஸ்சி கணிதம் இரண்டாம் ஆண்டு படிக்கிறார் ஆர்யா. அவரின் குடும்பமே சிபிஎம் கட்சி உறுப்பினர்களாக இருக்கின்றனர். ஆர்யாவின் தந்தை ராஜேந்திரன் எலக்ட்ரீசியன், தாய் ஸ்ரீலதா எல்.ஐ.சி. ஏஜெண்டாக பணிபுரிகிறார். குடும்ப கஷ்டம் காரணமாக ஆர்யாவின் சகோதரர் அரவிந்த், ஆட்டோ மொபைல் என்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு ஐக்கிய அமீரகத்தில் பணிபுரிந்துவருகிறார். இவரும் சிபிஎம் கட்சியின் உறுப்பினர்.

வெற்றிபெற்ற ஆர்யாவின் தந்தை செய்தியாளர்களுக்குக் கொடுக்கும் பேட்டிகளில், ‘இது எங்களின் கட்சி, எங்கள் குடும்பத்தின் கட்சி’ என்று உரிமையுடனும் சிபிஎம்-இல் உறுப்பினராக இருப்பதைப் பெருமிதத்துடனும் பகிர்கிறார். ஆர்யாவுக்கு அரசியலில் ஆர்வம் தொற்றிக்கொள்ள கட்சியின் செயல்பாடுகள்தான் காரணம் என்கிறார். ஆர்யா, ஐந்தாவது வயதிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் இயங்கும் 'பாலசங்கம்' என்னும் சிறார்களுக்கான அமைப்பில், உறுப்பினராகி தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து அந்த அமைப்பின் மாவட்டத் தலைவராகவும் இருந்துள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களாக பாலசங்கத்தின் மாநிலத் தலைவராகப் பொறுப்பு வகித்துள்ளார். பாலசங்கம் அமைப்பில் சுறுசுறுப்பாக இயங்கி வந்த ஆர்யாவின் செயலால், கம்யூனிஸ்ட் மாணவர் அணியான எஸ்.எஃப்.ஐ. அமைப்பில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். அதுமட்டுமல்லாமல் அந்த அமைப்பின் மாநில கமிட்டியிலும் இடம்பெற்றிருக்கிறார். கேரள உள்ளாட்சித் தேர்தலில் சரிக்கு சமமான 50 சதவித சீட்டுகள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், உள்ளாட்சித் துறைகளின் சில முக்கியப் பொறுப்புகளும் பெண்களுக்கு வழங்கப்படுகின்றன.கடந்த தேர்தலில் வெற்றிபெற்று திருவனந்தபுரத்தின் மேயராக இருந்தவர் வி.கே. பிரசாந்த்.

cnc

இத்தனை ஆண்டுகளாக அரசியலில் கவனம் செலுத்தி வந்த ஆர்யா கல்வியில் பெரிதாக ஈடுபாடு இல்லாமல் இருந்துள்ளார். கார்மெல் உயர்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்த ஆர்யாவின் பள்ளி மற்றும் கல்லூரி என இரண்டுமே மாணவத் தேர்தல் இல்லாத ஒரு இடம். இருந்தாலும் ஆர்யா அரசியல் பயணித்தில் கவனம் செலுத்தியுள்ளார். பள்ளி மற்றும் கல்லூரியில் ஆசிரியர்களும் நண்பர்களும் ஆர்யாவின் இந்தச் செயல்களுக்கு உறுதுணையாக இருந்ததாகக் குறிப்பிடுகிறார், ஆர்யா. தனது சிறு குடும்பத்துடன் ஆறாயிரம் ரூபாய் வாடகை வீட்டில் வசித்து வரும் ஆர்யா, கேரளாவிலுள்ள அனைத்து மாவட்டத்திற்கும் அரசியல் கூட்டங்களுக்காக சிறுவயதிலிருந்தேசென்றுள்ளார். ஒரே ஒரு முறை மட்டும் ஆறாம் வகுப்பு படிக்கும்போது அரசியல் கூட்டம் ஒன்றிற்காக கேரளாவைத் தாண்டி மும்பைக்குச் சென்றுள்ளார். ஆர்யாவின் ரோல் மாடல்களாக கரோனா அச்சுறுத்தலின்போது உலகம் முழுவதும் பிரபலமடைந்த சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா, மலையாள கவிஞர் சுகத்தாகுமாரி, மலையாள எழுத்தாளர் கே.ஆர். மீரா ஆகியோர் இருக்கின்றனர்.

இன்னும் கம்யூனிஸ்ட் கட்சி இதுகுறித்தான முடிவை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை, ஆனால் இந்தியா முழுவதிலும் இருந்து இந்திய அரசியலில் வரலாறு படைக்கப்போகும் ஆர்யாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன...

arya rajendran Pinarayi vijayan
இதையும் படியுங்கள்
Subscribe