Advertisment

2025: கலங்க வைத்த சம்பவங்கள்

10

2025: Disturbing incident in tamilnadu Photograph: (2025)

இதோ இன்றுடன் விடை கொடுக்க காத்திருக்கிறது '2025'. இந்த புத்தாண்டு நாளில் புதிய வேட்கைகளும், ஏற்றங்களும், நம்பிக்கைகளும் இடம் பிடித்திருக்க வேண்டியதைப் போல் வாழ்க்கையில் மறவாத சில சறுக்கல் நிகழ்வுகளையும் பின்னோக்கி பார்ப்பது அவசியமாகிறது. இன்பம் மட்டுமல்ல சில தும்பியல் நிகழ்வுகளும் தானே வாழ்க்கை. அந்த வகையில் 2025 ல் நாம் சந்தித்த சில துயரங்கள், மரணங்கள், வடுவாகிப்போன ரணங்களை தொகுப்பாக்கிறது இந்த வரைவு. 
Advertisment
 
துயரத்தை ஏந்திய 'கரூர்'
03
2025 Photograph: (incident)
நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மக்கள் சந்திப்பு நிகழ்வில் 41 பேர் உயிரிழந்த சம்பவம்  பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.
Advertisment
 
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த 27.09.2025 அன்று கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக அதிகமான மக்கள் அங்குக் கூடியதால் கடும் நெரிசல், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பலர் மயக்கமடைந்த நிலையில் 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தேசிய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக தற்போது வரை சிபிஐ விசாரணை தொடர்கிறது.
 
இந்த சம்பவத்தில் விஜய் குறித்த நேரத்தில் பிரச்சாரம் நடக்கும் இடத்திற்கு வராததும், காலையில் இருந்தே உணவு, தண்ணீர் இல்லாமல் கூடியிருந்த மக்கள் சோர்வடைந்து மயங்கியதும் காரணம் என பரவலாக பேசப்பட்டது. விஜய் தரப்பில் அரசு சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை என்று குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. 
 
சம்பவம் நடந்த அடுத்த கணமே சென்னை கிளம்பிய விஜய், கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு பிறகு வீடியோ வெளியிட்டிருந்ததும், அதேபோல் நேரில் வருவேன் என பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடியோ காலில் உறுதியளித்த விஜய் இறுதியாக பாதிக்கப்பட்ட குடும்பத்தாரை மாமல்லபுரத்திற்கு வரவழைத்து பார்த்ததும் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.
 
விஜய் நேரில் பார்த்து நலம் விசாரிக்க வராததால் ரமேஷ் என்ற தனது கணவரை இழந்த சங்கவி என்ற பெண் விஜய் கொடுத்த நிவாரண தொகை 20 லட்சத்தை மீண்டும் அனுப்பியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தற்போது வரை தவெக நிர்வாகிகளிடம்  இந்த சம்பவம் தொடர்பாக இறுதி விசாரணை நடத்தி வருகிறது சிபிஐ.
 
ரயிலுக்கு இரையான பிஞ்சுகள்
08
2025 Photograph: (incident)
காலையில் விறுவிறுவென வழக்கம்போல் பள்ளிக்கு கிளம்பிய மாணவர்கள் பள்ளி பேருந்தில் சென்று கொண்டிருந்த போது ரயில்வே கேட் கீப்பரின் அலட்சியத்தால் பெரும் கோர விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. 
 
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் கடந்த 08/07/2025 அன்று தனியார் பள்ளி வேன் ஒன்று ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த பயணிகள் ரயில் தனியார் பள்ளி வேன் மீது மோதி தூக்கி வீசப்பட்டது.

இந்த விபத்தில்  மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மொத்தம் ஐந்து பேர் அந்த பள்ளி வேனில் பயணித்த நிலையில் ஆறாம் வகுப்பு மாணவன் நிமலேஷ், பதினொன்றாம் வகுப்பு மாணவி சாருமதி, செழியன் என மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.

சம்பந்தப்பட்ட ரயில்வே கேட் பகுதியில் பணியிலிருந்த கேட் கீப்பர் பங்கஜ் சர்மா பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு விசாரணை நடந்தது. விசாரணையில் ரயில்வே கேட் கீப்பரின் அலட்சியம் தான் இந்த விபத்திற்கு முழு காரணம் என்பது தெரிய வந்தது. ரயில்வே துறையின் தானியங்கி தொலைப்பேசி உரையாடலில் ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் கேட் கீப்பருக்கு இடையே நடந்த உரையாடல் மூலம் இது உறுதி செய்யப்பட்டது.
 
ஆரம்பாக்கத்தை அதிர வைத்த பாலியல் வன்கொடுமை; விரைவில் கிடைத்த தீர்ப்பு
09
2025 Photograph: (incident)
பள்ளி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்ற 12 வயது சிறுமி வடமாநில நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆரம்பாக்கம் பகுதியில் கடந்த ஜூலை மாதம் 12ஆம் தேதி (12.07.2025) பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த 10 வயது சிறுமி வடமாநில இளைஞரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தேடப்பட்டு வந்த இளைஞர் 14 நாட்கள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு கைது செய்யப்பட்டார். ராஜூ பிஸ்வ கர்மா என்ற ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த நபரிடம் நடத்தப்பட்ட  விசாரணையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்வதற்கு முன்பாக அந்த வழியாக வந்த கர்ப்பிணிப் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நிலையில் அந்த இளைஞரை அப்பெண் கண்டித்து விரட்டியுள்ளார். அதனைத் தொடர்ந்து அங்குப் பள்ளி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த சிறுமியை பிஸ்வ கர்மா பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. 
 
இந்த வழக்கின் தீர்ப்பானது (24.12.2025) வெளியாகியது. அதில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி ராஜு பிஸ்வ கர்மாவிற்கு இரட்டை ஆயுள் தண்டனையானது வழங்கப்பட்டுள்ளது. அதோடு ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வரவேற்றனர்.
 
காவல் கஸ்டடியில் இன்னொரு மரணம்
05
2025 Photograph: (incident)
கொரோனா காலகட்டத்தில் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் போலவே சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் கோவில் ஊழியர் அஜித்குமார் என்பவர் நகை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு போலீசார் கஸ்டடியில் அடித்து கொன்ற சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளியாக பணிபுரிந்து வந்தவர் அஜித்குமார். இவர் மீது கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி (28.06.2025) நகையை திருடியதாக நிகிதா என்பவர் காவல்துறையில் புகார் ஒன்றை அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார், அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இந்த விசாரணையின்போது போலீசார் அவரை தாக்கியதில் ஜூன் 29ஆம் தேதி உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியது 

இதற்கிடையே இந்த வழக்கைத் தமிழக அரசு ஏற்கனவே சி.பி.ஐ. விசாரிக்கும் என்று அறிவித்திருந்தது. இந்த சம்பவத்தில் அஜித்குமாரை விசாரணை என்ற பெயரில் போலீசார் சுற்றி நின்று தாக்கும் அந்த காட்சிகள் வைரலாகி இருந்தது. 
 
அதிர்ச்சி கொடுத்த ஆணவக்கொலை 
06
2025 Photograph: (incident)
படித்த பட்டதாரி இளைஞரான கவின் காதல் காரணமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் என்ற பகுதியைச் சேர்ந்த இளைஞர் கவின்.  சென்னையில் உள்ள பிரபல ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். இத்தகைய சூழலில் தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார். அச்சமயத்தில் தன்னுடைய தாத்தாவிற்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அவரை திருநெல்வேலியில் உள்ள பாளையங்கோட்டை கே.டி.சி நகர்ப் பகுதியில் உள்ள சித்த மருத்துவமனைக்குக் கடந்த ஜூலை மாதம் 27ஆம் தேதி (27.072025) அழைத்து வந்தார். அப்போது அங்கு வந்த இளைஞர் சுர்ஜீத் என்பவர் கவினைச் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

 இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், உயிரிழந்த கவினும், சுஜித்தின் சகோதரியும் பள்ளி காலத்தில் இருந்தே நண்பர்களாகப் பழகி வந்துள்ளனர். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த கவின், தனது சகோதரியிடம் பழகுவது சுர்ஜித்துக்கும், காவல்துறையில் உதவி ஆய்வாளர்களாகப் பணியாற்றி வரும் சுஜித்தின் தாய் மற்றும் தந்தை ஆகியோருக்கும் பிடிக்காமல் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக சுஜித், கவினைக் கொலை செய்திருக்கிறார் என்பது தெரியவந்தது. இதையடுத்து கவின் ஆணவக் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் செய்து டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கில் சுஜித், அவரது தந்தை உள்ளிட்ட மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டு தற்போது வரை விசாரணை நடைபெற்று வருகிறது.
வாழ்வை முடித்துக் கொண்ட ரிதன்யா
02
2025 Photograph: (incident)
ஆசை ஆசையாக திருமணம் செய்துவைத்த பெண், அப்பாவிற்கு தனக்கு நடந்த கொடுமைகளை வாட்ஸ் அப்பில் குறுச்செய்தி அனுப்பிவிட்டு தவறான முடிவெடுத்த சம்பவம் கொங்கு பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
 
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை(50). இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயசுதா. இந்த தம்பதியினரின் மகள் ரிதன்யா(27). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கவின் குமார் என்பவருக்கும்  திருமணம் நடந்துள்ளது.

புதுப்பெண் ரிதன்யா சேவூர் சாலையில் தனது காரை நிறுத்திவிட்டு, பூச்சி மருந்தைச் சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதற்கு முன்பு, தனது தந்தைக்கு வாட்ஸ் ஆப்பில்,  ‘எனது மரணத்திற்கு காரணம் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் செய்த சித்ரவதை தான் காரணம்’ என்று ஆடியோ ஒன்றை அனுப்பியிருந்தார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரையும்  கலங்க வைத்தது. இந்த சம்பவத்திலும் விசாரணை நீண்டு வருகிறது.
பட்டப்பகலில் பள்ளி சிறுமி கொலை
01
2025 Photograph: (incident)
ராமேஸ்வரத்தில் 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர் பட்டப்பகலில் ஒருதலை காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

ராமநாதபுரம் மாவட்டம் சேரங்கோட்டை பகுதியில் வசித்து வருபவர் முனிராஜ். கல்லூரி படிப்பை முடித்த முனிராஜ் வேலை எதற்கும் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். அதே பகுதியில் வசித்து வரும் 12ஆம் வகுப்பு மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். மாணவி முனிராஜின் காதலை ஏற்றுக்கொள்ளாத நிலையில் விடாத முனிராஜ் கடந்த ஒரு வருடமாக அவரை பின்தொடர்ந்து செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்துள்ளார்.

சிறுமியின் வீட்டிற்கு இது தெரிய வர, சிறுமியின் தாயாரும் பலமுறை முனிராஜை எச்சரித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த நவம்பர் 19 ஆம் தேதி வழக்கம் போல பள்ளிக்கு சென்று கொண்டிருந்த மாணவியை முனிராஜ் தொடர்ந்து சென்றுள்ளார். அப்போது தனது காதலை ஏற்றுக் கொள்ளும்படி வறுபுறுத்திய நிலையில் மாணவி மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முனிராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியின் கழுத்தை அறுத்ததுடன் கழுத்தின் பின்புறமாக குத்தியதில் சம்பவ இடத்திலேயே மாணவி ரத்த வெள்ளத்தில் விழுந்துள்ளார். 
 
அவசரத்திற்கு வாகனங்கள் கிடைக்காததால் அருகில் இருந்தவர்கள் இருசக்கர வாகனத்தில் வைத்து சிறுமியை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவ பரிசோதனையில் சிறுமி ஏற்கனவே உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் முனிராஜ் கைது செய்யப்பட்ட நிலையில் வழக்கு விசாரணையில் உள்ளது.
 
கோவை ஏர்போர்ட் சம்பவம்

 

07
2025 Photograph: (incident)
கோவை விமான நிலையம் பின்புறம் ஆளரவமற்ற பகுதியில் காரில் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த பெண் போதை இளைஞர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
கோவை பீளமேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில்  02.11.2025 அன்று இரவு ஆண் நண்பருடன் தனியார் கல்லூரி மாணவி ஒருவர் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 மர்ம நபர்களால் கல்லூரி மாணவி, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியது. 

இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி நிலையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இடத்திற்கு அருகில் சட்டவிரோத மதுபான பார் இயங்கி வந்ததாக புகார் எழுந்தது. இதை அறிந்து அங்கு வந்த நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் பாரில் இருந்த மது பாட்டில்களை கைப்பற்றி உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அங்கு வந்த போலீசார் அவரிகளிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இந்த சட்டவிரோத பாரும் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு காரணம். இதை நடத்தியது யார்? என கேள்வி எழுப்பினர்.
 
சிறார்களின் பட்டாக்கத்தி அட்டூழியம்
04
2025 Photograph: (incident)
ரயில் பயணம் செய்த வடமாநில இளைஞரை இன்ஸ்டா மோகத்தில் சிறார்கள் சேர்ந்து பட்டாக்கத்தியால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ரயில் நிலையம் அருகில் நவம்பர் 27 ஆம் தேதி சூரஜ் என்ற வடமாநில இளைஞர் ஒருவர் உடல் முழுவதும் வெட்டுக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் உயிருக்குப் போராடியுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்தப் பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். 
 
அதன்பேரில் திருத்தணி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த வடமாநில இளைஞர் சூரஜை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலரும் இதற்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
 
கொலைகளும், மரணங்களும் உங்களை ரணப்படுத்தி இருக்கலாம். கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்ளுங்கள். 'துயரங்கள் இல்லா...' நோ நோ எதார்த்தத்தில் அதற்கு வாய்ப்பில்லை எனினும், துயரங்கள் குறைவான ஆண்டாக 2026-ஐ நம்புவோம்... வரவேற்போம்...!
 
new year 2025 police sad incident Tamilnadu tvk vijay
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe