2024 Parliamentary Elections: Who Will Contest in Theni?

Advertisment

2024-ல் பாராளுமன்றத் தேர்தல் நடக்கவிருப்பதால் ஆளுங்கட்சியும்எதிர்க்கட்சியும் போட்டிப் போட்டுக்கொண்டு 40 சீட்டுகளையும் தக்க வைக்க வேட்பாளர்களைத்தேர்வு செய்யும் முயற்சியில் வேகம் காட்டி வருகிறார்கள்.

தேனி பாராளுமன்றத்தொகுதியில் பெரியகுளம், போடி, கம்பம், ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, சோழவந்தான் என 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. தேனி பாராளுமன்றத்தொகுதியில் பெரும்பான்மையாக முக்குலத்தோர் சமூக மக்கள்தான் வசித்து வருகிறார்கள். அதற்கு அடுத்தபடியாகபட்டியலினத்தவர்கள், கவுண்டர், நாயக்கர், செட்டியார், பிள்ளைமார், நாடார் உட்பட சில சமூகத்தினரோடு முஸ்லீம் மக்களும், கிறிஸ்தவ மக்களும் வசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், தேனி பாராளுமன்றத் தொகுதியில் கரை வேஷ்டிகள் போட்டிப் போட்டுக்கொண்டு தத்தம் கட்சியில் சீட்டுக்காக மல்லுக்கட்டி வருகிறார்கள். ஆளுங்கட்சியான தி.மு.க.வில் வடக்கு மாவட்டச் செயலாளராக இருக்கும் தங்க தமிழ்ச் செல்வன் (டி.டி.எஸ்.) அ.தி.மு.க.வில் இருந்தபோது ஓ.பி.எஸ்.ஸுக்கும், டி.டி.எஸ்.ஸுக்கும் இடையேதான் கடும் போட்டி இருந்து வந்தது. அதனாலேயே போடி சட்டமன்றத் தேர்தலில் ஓ.பி.எஸ்.ஸை எதிர்த்து டி.டி.எஸ்.ஸை களமிறங்க வைத்தார் முதல்வர். குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் டி.டி.எஸ். தோல்வியைத் தழுவினார். அந்த அனுதாபம் முதல்வர் ஸ்டாலினிடம் இருந்து வருகிறது. அதோடு ஓ.பி.எஸ்.ஸை எதிர்த்து தொடர்ந்து அரசியல் செய்யும் டி.டி.எஸ்., வரும் பாராளுமன்றத்தேர்தலில் களமிறங்க சீட் கேட்டு வருகிறார்.

Advertisment

2024 Parliamentary Elections: Who Will Contest in Theni?

முன்னாள் எம்.பி. கம்பம் செல்வேந்திரனும்தேர்தலில் குதிக்கத்தயாராகி வருகிறார். அதனால் தனது நெருங்கிய நண்பரான கவிஞர் வைரமுத்து, டி.ஆர். பாலு மூலம் சீட் வாங்க காய் நகர்த்தி வருகிறார். ஒருங்கிணைந்த மாவட்டமாக தேனி இருந்தபோது ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமிதான், மாநிலத்தலைமை தீர்மானக்குழு இணைச் செயலாளரான ஜெயக்குமாருக்கு மாவட்டச் செயலாளர் பதவியை வாங்கிக் கொடுத்தார். மாவட்டம் இரண்டாகப் பிரிந்த பின் ஜெயக்குமாருக்கு மாநிலப் பொறுப்பு கொடுக்கப்பட்டது. அப்படியிருந்தும் கட்சியை வளர்ப்பதில் தீவிரம் காட்டி வரும் ஜெயக்குமார், அமைச்சர் ஐ.பி. மூலம் சீட் வாங்க முட்டி மோதி வருகிறார்.

நீலகிரி பாராளுமன்றத் தொகுதி எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ. ராசா பொதுத் தொகுதியில் போட்டிப் போட முடிவு செய்திருப்பதாகவும் அதனடிப்படையில் இரண்டு முறை தேனி தொகுதியில் விசிட்டடித்து பாராளுமன்றத் தேர்தலில் போட்டிப் போட காய் நகர்த்தி வருவதாக உ.பி.க்கள் மத்தியில் ஒரு பேச்சு அடிபடுகிறது.

Advertisment

அ.தி.மு.க.வை கைப்பற்றுவதில் ஓ.பி.எஸ்.ஸுக்கும், இ.பி.எஸ்.ஸுக்கும் நடந்த போட்டியில் இ.பி.எஸ். அ.தி.மு.க.வை கைப்பற்றியதன் மூலம், ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் ஓரம் கட்டப்பட்டனர். வரக்கூடிய பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் எம்.பி. பார்த்திபன் களமிறங்கத் தயாராகி வருகிறார். இவர் எம்.பி.யாக இருந்தபோது ஓ.பி.எஸ். இவரைச் செயல்படாமல் முடக்கி வைத்தார். அதனாலேயே பார்த்திபன், இ.பி.எஸ். பக்கம் தாவி சீட் கேட்டு வருகிறார். முன்னாள் கம்பம் சட்டமன்ற உறுப்பினரான ஜக்கையனின் மகனான இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை மாவட்டச் செயலாளரான பாலமணி மார்பனும் கோதாவில் குதிக்கத் தயாராகி வருகிறார். அ.தி.மு.க. ஒன்றாக இருந்தபோதே எடப்பாடிக்கு ஆதரவாக ஜக்கையன் இருந்து வந்ததனால் கடந்த சட்டமன்றத்தேர்தலில் கம்பத்தில் மீண்டும் போட்டியிட சீட் கொடுக்காமல் ஓ.பி.எஸ்ஸினால் ஓரம் கட்டப்பட்டார். எடப்பாடி பக்கம் தாவியதன் மூலம் மகனை எம்.பி.யாக்கும் குறிக்கோளுடன் இருந்து வருகிறார் ஜக்கையன்.

2024 Parliamentary Elections: Who Will Contest in Theni?

உசிலம்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ.வும், அம்மா மக்கள் முன்னேற்றக்கழக செயலாளருமான மகேந்திரன் சமீபத்தில் எடப்பாடியைச் சந்தித்து அ.தி.மு.க.வில் ஐக்கியமானார். அவருக்கும் எம்.பி. கனவு இருக்கிறது. தேனி கிழக்கு மாவட்டச் செயலாளர் முருக்கோடை ராமர், தேனி நகரச் செயலாளரும், வக்கீலுமான கிருஷ்ணகுமார் உள்பட சில ர.ர.க்களும் சீட்டுக்காக இ.பி.எஸ்.ஸிடம் மோதி வருகிறார்கள்.

தேனி மாவட்டத்திலுள்ள கட்சிப் பொறுப்பாளர்களும், பெரும்பான்மையான தொண்டர்களும் இ.பி.எஸ். பக்கம் சாய்ந்துவிட்டனர். அதனால் ஓ.பி.எஸ். சிட்டிங் எம்.பி.யாக இருக்கக்கூடிய ரவீந்திரநாத்தை மீண்டும் களமிறக்க யோசிக்கிறார். அ.ம.மு.க. சார்பில் ரவீந்திரநாத்தை களமிறக்குவது அல்லது டி.டி.வி.க்கு ஆதரவு கொடுத்து தேனி தொகுதியில் மீண்டும் தினகரனை களமிறக்கும் யோசனையும் ஓ.பி.எஸ்.ஸிடம் தெரிகிறது. பெண்கள் விசயத்திலும் எம்.பி. ரவீந்திரநாத் மீது கெட்ட பெயர் ஏற்பட்டிருப்பதால் வரக்கூடிய பாராளுமன்றத்தேர்தலில் ரவீந்திரநாத் போட்டிப் போட வாய்ப்பு இல்லை என்ற பேச்சும் பரவலாக எதிரொலித்து வருகிறது.

காங்கிரஸ் தரப்பில் தேனி எம்.பி.யாக இரண்டு முறை வெற்றிபெற்ற ஹாரூன், மீண்டும் தலைமையிடம் வாய்ப்பு கேட்கும் முடிவில் இருக்கிறார். இல்லையெனில் தனது மகனும் வேளச்சேரி எம்.எல்.ஏ.வான ஹசனுக்கு அந்த வாய்ப்பைக் கேட்கும் முடிவில் இருக்கிறார். காங்கிரஸில் வேறு பலரும் தேனி சீட்டுக்கு முட்டி மோதுகின்றனர்.

பா.ஜ.க.வில், அக்கட்சியின் மாவட்டத் தலைவர் பாண்டியனும், மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவருமான ராஜபாண்டியனும் இப்போதே தேனி நாடாளுமன்றத் தொகுதியைக் குறிவைத்து தலைமைக்கு நெருக்கமானவர்களை அணுகி உரிய முறையில் வாய்ப்பு கேட்டு வருவதாக கட்சிக்குள் பேச்சுக்கள் எழுகின்றன.