ADVERTISEMENT

‘தில்வாலே புச்...’ டூ 'கிருப கிருப' - சோகத்திலும் சிரிக்க வைத்த 2020 மீம்கள்!

06:26 PM Dec 29, 2020 | santhoshkumar

ADVERTISEMENT

ADVERTISEMENT

மீம்ஸ்... இந்த வார்த்தை தமிழர்களின், இல்லை மனிதர்களின் வாழ்வில் சமீபத்திய அங்கமாகிப்போன வார்த்தை. எவ்வளவு பெரிய துயரத்தையும், கோபத்தையும், கொதிப்பையும் மக்கள் மீம்ஸைக் கொண்டு கடந்து செல்கின்றனர். எவ்வளவு பெரிய ஆளுமைகளையும் பிரபலங்களையும் தலைவர்களையும் மக்கள் மீம்ஸைக் கொண்டு கீழே தள்ளுகின்றனர். பெரிய கருத்துகளை, அரசியல் சித்தாந்தங்களை, அறிவியலை மக்களிடம் எளிதாகக் கொண்டு சேர்க்கும் ஆக்கபூர்வமான கருவியாகவும் சில நேரங்களில் மீம்கள் விளங்குகின்றன. எந்த வகையிலும் பயன்படாமல் நேரத்தை அழிக்கும் கருவியாகவும் மீம்கள் இருக்கின்றன. எப்படி பார்த்தாலும் மீம்கள் இணைய வாழ்வில் அங்கமாகிவிட்டன. 2020ஆம் ஆண்டில் தமிழ் இணைய உலகில் வைரல் ஆன மீம்கள் சிலவற்றை காணலாம்.

வடசென்னை மீம்கள்

“செந்தில், குணா, வேலு, தம்பி இவங்க எல்லாரையும் அன்பு வாழ்க்கையோடு இணைக்கிறது ராஜன்” - இந்த வடசென்னை பட டயலாக்கை வெற்றிமாறனோட குரல்ல தியேட்டரில் கேட்குறப்போ பார்க்குறவங்களுக்கு ஒரு சிலிர்ப்பை கொடுத்தது. இப்படிப்பட்ட ஒரு மாஸான விஷயத்தை அப்படியே தமாஸாக்கின பெருமை மீம் கிரியேட்டர்களை சேரும். லாக்டவுனில் ரொம்ப ட்ரெண்டாகி, ஒரு கட்டத்தில் ‘போதும்டா சாமி ஆளவிடுங்க’ன்னு சொல்ற அளவுக்கு இந்த மீம் டெம்பிளேட்டை ட்ரெண்ட் செய்தனர். வாட்ஸப் ஸ்டேட்டஸ், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், ஃபேஸ்புக் என எல்லாவற்றிலும் செந்தில், குணா... செந்தில், குணா என வசனத்தை கேட்டு, மீமாகப் பார்த்து தூக்கத்தில் கூட அந்த டயலாக் வந்தது. ‘ஏலக்காய், மசாலா, சிக்கன், ரைத்தா இவங்க எல்லாரையும் என் கூட இணைக்கிறது பிரியாணிதான்’ என்பது இந்த டெம்பிளேட்டில் வந்த மீம்களில் ஒரு உதாரணம். இதுபோல எல்லா ஜானர்களிலும் புகுந்து இந்த டெம்பிளேட்டால நம்மை சிரிக்கவும் ரசிக்கவும் வைத்தனர்.

சீம்ஸ் மீம்கள்


இந்த வருடம் தமிழ்ப் படங்களிலிருந்து மட்டும் மீம் டெம்பிளேட்கள் இறக்குமதி செய்யாமல், ஃபாரீனிலிருந்து இம்போர்ட் செய்யப்பட்டவை சீம்ஸ் வகையறா மீம்கள். முழுக்க முழுக்க காமெடி மட்டும்தான். இதுவரை மீம்ஸ்கள் ஏதாவது படத்திலிருக்கும் காட்சி அல்லது வசனத்தை மையமாக வைத்தே உருவாக்கப்படும். ஆனால், சீம்ஸ் மீம்ஸ் முற்றிலும் வித்தியாசமானவை. அதில் சீம்ஸ், வால்டர், பெர்ரோ, டாகி உள்ளிட்ட நான்கு நாய்களுக்கு என்று ஒவ்வொரு குணாதிசயத்தை வைத்து பல சமூக விஷயங்கள், ரசிகர்கள் சண்டை, ட்ரெண்ட் விஷயங்களை கலாய்ப்பதுதான் இந்த சீம்ஸ் மீம்ஸ்களின் சுவாரஸ்யம். 2013ஆம் ஆண்டிலிருந்து வெளிநாட்டில் இவை மீம்ஸ்களாக வலம் வர தொடங்கிவிட்டன. ஆனால், தமிழ் மீம் உலகில் லாக்டவுன் காலகட்டத்தில்தான் பிரபலமாகின. இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்திருக்கும் இந்த சீம்ஸ்க்கும் பெர்ரோவுக்கும் இன்னும் ரசிகர் மன்றம் ஆரம்பிக்காததுதான் குறை.

‘தில்வாலே புச்...’ மீம்கள்

இந்தியில் வெளியான ஒரு ஆல்பத்திலிருந்து ஒரு சின்ன ஆடியோ க்ளிப்பை வைத்து உருவாக்கப்பட்ட இந்த மீம்ஸ், ஒரு பெரிய கூட்டத்தையே சிரிக்க வைத்துள்ளன. ஏமாறுவது, ஒன்றை எதிர்பார்த்து மற்றொரு விஷயம் நடப்பது போன்ற சம்பவங்களுக்கு இந்த 'தில்வாலே...' தான் பிஜிஎம். தொடக்கத்தில் நடிகர் அப்பாஸ் நடித்த படத்திலிருந்து ஒரு சீனுக்குப் போடப்பட்ட இந்த பிஜிஎம், அடுத்தடுத்து பல மீம்களில் பயன்படுத்தப்பட்டுவிட்டது. இது எல்லாவற்றையும் தாண்டி அதில் வரும் ‘ஓஓஓஓஓஒ...’ என்னும் ராகத்தைப் போட்டே ரக ரகமாக மீம்ஸ்களை அள்ளித் தெளித்தனர்.

கோபி சுதாகர் மீம்கள்

கோபி சுதாகர் வெளியிடும் ஒவ்வொரு புதிய வீடியோக்களும் சிரிக்கும்படியாக ரசிக்கும்படியாக இருக்கிறதா என்பதை தாண்டி ஒவ்வொரு வீடியோவிலும் ஒரு டெம்பிளேட்டாவது நம்மை சிரிக்க வைக்க மீம் கிரியேட்டர்களின் வலையில் சிக்கிவிடுகிறது. டிக்டாக் செய்பவர்களை கலாய்த்து வெளியிட்ட வீடியோவில் சிக்கிய ஒரு டெம்பிளேட், ‘எனக்காக நான் இங்கு நிக்குறேன் ஆனா அவள் எனக்காக இங்க நிக்கலைடா’ என்று சுதாகர் சொல்லிவிட்டு கோபியை கடந்து செல்லும் அந்த டெம்பிளேட் பல மீம்களை உருவாக்கியது. கரோனா லாக்டவுன் சமயத்தில் அனைவரும் நமக்கு கரோனா இருக்குமோ என்ற பீதியில் இருப்பதை நகைச்சுவையாக, ‘ஒரு வேளை இருக்குமோ’ என்று சுதாகர் நடித்ததும் ட்ரெண்டானது. சமீபத்தில் நம்மை பீதியடையச் செய்த நிவர் புயலின்போது வெளியிட்ட வீடியோவில் புயலின் நடுவே நின்று ரிப்போர்ட் செய்யும் கோபியின் காமெடி ட்ரெண்டானது. இப்படி இவர்களின் ஒரு வீடியோவில் பல மீம்கள் இருக்கின்றன. இதனிடையே நடைபெற்ற ஐபிஎல் காலகட்டத்தில் சென்னை தோல்வியை தம்தே பாடி கொண்டாடிய பெண்களின் வீடியோவிலிருந்து ‘கண்ணன் தேவன் டீ பொடி’ வைரலானது. அதை இவர்கள், ஜெயம் ரவி நடிச்ச படம் பூமி, ஜாதவ் எங்க குலசாமி என்று கலாய்த்ததும் கூட மீமானது.

'சூரரைப் போற்று' மீம்கள்

'ஆமாங்கய்யா...', 'என்னால முடியாம் ஆனா பண்ண மாட்டேன்...', 'தாம்பரத்தில ஃப்ளைட்ட இறக்குடா...' என்ற நீண்ட லிஸ்ட் சூரரைப்போற்று படத்திலிருந்து சமீபத்தில் ட்ரெண்டானது. படம் எந்தளவிற்கு வெற்றியோ அந்தளவிற்கு இப்படத்தின் காட்சிகளை பயன்படுத்தி வெளியான மீம்களும் அனைத்து விதமான ஜானர்களிலும் வெற்றிபெற்றது. என்னடா மீமில் ஜானரா என்று பார்க்காதீங்க, மீம் கலாச்சாரத்துல தற்போது பல விதமான கருத்து சொல்ற மீம், காமெடி, சமூக அக்கறை, சீரியஸ் போன்ற அனைத்து வகைகளிலும் மீம் வர தொடங்கிவிட்டது. அதைத்தான் அப்படி சொல்லியிருக்கிறேன். சூர்யா நடித்த 7ஆம் அறிவு படத்தில் போதி தர்மரை வைத்து வந்த, 'உணர்கிறார்...' என்கிற மீம்களும் ட்ரெண்டாகி வருகிறது.

கிருப கிருப மீம்

‘டேலண்டெல்லாம் இல்ல பிரதர், எல்லாம் கிருபதான்...’ என்று ஒருவர் ஆறு வருடத்திற்கு முன்பு பாடிய பாடலை ஹிட் அடிக்க வைத்து, அவரும் அதற்கு பார்ட்-2 பாடல் ஒன்றை வெளியிட்டதற்கு காரணமாக இருந்தது ஒரு மீம். எல்லாத்துக்கும் காரணம் கிருபதான் என்று நம்மையே நம்ப வைக்கும் அளவிற்கு ட்ரெண்டானது. ஐபிஎல் சமயம் எனபதால் மேலும் ஜெயிக்கிற டீம் பக்கம், சிக்ஸ் அடிக்கிற வீரருக்கு என்று கிருப கிருப டெம்பிளேட்டை பதிவிட்டனர்.

ஐபிஎல், பிக்பாஸ் என்று பல விஷயங்களிலிருந்து நிறைய மீம்கள் நம்மை கவர்ந்தன, ட்ரெண்டாயின. சில ரசிக்கவும் வைத்தன, சில கோபத்தை ஏற்படுத்தின. 'ஹாங் ஓவர்' ஆலனை வைத்து வெளியான மீம்களை குறிப்பிடாமல் இருக்க முடியாது. பல மீம்கள் அதில் கிரியேட்டிவ்வாகவும் டைமிங் காமெடியாகவும் இருக்கும். 'உனக்கு சண்டை போட தெரியுமாடா குமரா' என்கிற ஜெயம் ரவியின் பட வசனத்தை வைத்து, அப்பாவுக்கும் மகனுக்கும் நடைபெறும் சம்பவத்தை மீம்களாகப் பதிவிடுகின்றனர்.

இப்படி 2020, மீம்கள் நிறைந்த வருடமாகக் கடந்தது. கரோனா கடுந்துயரை கடக்க மீம்கள் பலருக்கு உதவின.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT