/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/EA444.jpg)
சிவகங்கையை அடுத்த முத்துப்பட்டியில் 16- ஆம் நூற்றாண்டு நவகண்ட சிற்பம் ஒன்றை சிவகங்கை தொல் நடைக் குழு அடையாளம் கண்டுள்ளனர்.
சிவகங்கை தொல் நடைக் குழுவைச் சேர்ந்த புத்தகக் கடை முருகன் முத்துப்பட்டியில் தனியார் இடத்தில் சிலை ஒன்று இருப்பதாக தகவல் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அவ்விடத்தில் சிவகங்கை தொல் நடைக் குழு நிறுவனர் புலவர் கா. காளிராசா, தலைவர் நா.சுந்தரராஜன் ஆகியோர் கள ஆய்வு செய்ததில் 16- ஆம் நூற்றாண்டு நவகண்ட சிற்பம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவகங்கை தொல் நடைக்குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா கூறியதாவது;
நடுகல்:
இறந்துபட்ட வீரர்களுக்கு நடுகல் எடுப்பது சங்க இலக்கிய காலம் தொட்டு தமிழர் மரபாக போற்றப்பட்டுள்ளது, பழமையான இலக்கண நூலான தொல்காப்பியத்திலும் நடுகல் அமைக்கும் முறை பற்றி கூறப்பெற்றுள்ளது. அதைப்போல தலைவனின் வெற்றிக்காக கொற்றவையின் முன்பு தன் தலையை கொடுக்கும் வீரர்கள் பற்றிய குறிப்புகளை தொல்காப்பியம், சிலப்பதிகாரம், கலிங்கத்துப்பரணி, புறப்பொருள் வெண்பாமாலை ஆகிய இலக்கண இலக்கியங்களில் காண முடிகின்றன.
நவகண்டம்:
நவகண்டம் என்பது உடலில் ஒன்பது இடங்களில் வெட்டிக்கொண்டு உயிரை விடுவதாகவும், அவிப்பலி, அரிகண்டம் தூங்குதலை என்பது இன்ன பிற வகையாகவும் அறிய முடிகிறது. அரசர் போரில் வெற்றி பெற வேண்டும் என்று வேண்டிக் கொண்டு கொற்றவையின் முன்பு தன் தலையை வீரர் பலி கொடுத்தலே இதன் உட்பொருளாகும்.
சங்க இலக்கியக் காலம்தொட்டு இது காணப்பெற்றாலும் ஒன்பதாம் நூற்றாண்டு முதல் பதிமூன்றாம் நூற்றாண்டு வரை இம்மரபு உச்சம் தொட்டது எனக் கொள்ளலாம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/E32.jpg)
நவகண்ட சிற்பம்:
சுமார் மூன்றடி உயரத்தில் ஒன்றரை அடி அகலத்தில். இச்சிலை வடிக்கப்பட்டுள்ளது, தலைமுடி கொண்டையாகவும், சிதறிய மூன்றுகற்றைகளாகவும் காட்டப் பெற்றுள்ளன. முகத்தில் மீசை காட்டப்பட்டுள்ளது, கழுத்தில் வேலைப்பாட்டோடு தொங்குகின்ற ஆபரணம் உள்ளது. கையில் கழல் போன்ற ஆபரணம் காட்டப்பட்டுள்ளது. வேலைப்பாடுடன் கூடிய ஆடை காணப்படுகிறது. மேலாடை தொங்குவதைப் போல காட்டப்பட்டுள்ளது, இடுப்பில் உறையுடன் கூடிய குத்துவாள் ஒன்றும் உள்ளது. கால்களில் காலணிகள் உள்ளன. ஒரு கை வில்லுடனும் மற்றொரு கை சிதைவு பட்டும் காணப்படுகிறது. கழுத்தில் வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கமாக கத்திக் குத்தியபடி இந்த நவகண்ட சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
திருப்புவனத்தில் நவகண்ட சிற்பமும் மல்லலில் நவகண்டக் கல்வெட்டும்:
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் மடப்புரம் காளிகோவிலில் இரண்டு நவகண்ட சிற்பங்கள் காணப்படுகின்றன. மேலும் காளையார்கோவில் ஒன்றியம் மல்லலில் உள்ள காளி கோவிலில் முதலாம் குலோத்துங்கசோழனின் நலனுக்காக அம்பலக் கூத்தன் என்பவன் தன்னை பலி செய்து நவகண்டம் கொடுத்த கல்வெட்டு ஒன்றும் தொல்லியல் துறையால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. தன்னரசன் போரில் வெற்றி பெற வேண்டும் என கொற்றவையை வேண்டிக் கொண்டு தன் தலையை பலிகொடுத்து வரலாறாய் நிற்கும் இந்த நவகண்ட சிற்பத்தின் வடிவமைப்பைக் கொண்டு 16- ஆம் நூற்றாண்டு எனக் கருதலாம். சிவகங்கை பகுதியில் 16- ஆம் நூற்றாண்டு நவகண்ட சிற்பம் அடையாளம் காணப்பட்டதில் சிவகங்கை தொல் நடைக்குழு பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளது. மேலும், இந்த சிற்பத்தை சிவகங்கை தொல் நடைக்குழு கேட்டுக் கொண்டதற்கு இணங்க இடத்துக்காரர் சிவகங்கை அருங்காட்சியகத்திற்கு வழங்க முடிவுசெய்து இருப்பது பெரும் பாராட்டுக்குரியது என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)