ADVERTISEMENT

1.34 கோடி பக்கங்கள், 700 இந்திய பணமுதலைகள்...

09:58 PM Nov 11, 2017 | Anonymous (not verified)

1.34 கோடி பக்கங்கள், 700 இந்திய பணமுதலைகள்...

'பாரடைஸ் பேப்பர்' விவரங்கள்!






சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முக்கிய கட்சித் தலைவரின் மகன், தன் நிறுவனத்தில் ஈட்டிய வருட வருவாய் 50,000 ரூபாய் தான். அந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தபின் மகனின் வருவாய் 16,000 மடங்காக உயர்ந்துள்ளது. இது எப்படினுலாம் கேட்டா, 'யு ஆர் ஆன்டி இந்தியன்'. இப்படி சம்பாரித்து வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ள பலரை புதிதாக வந்த 'பாரடைஸ் பேப்பர்' என்ற அறிக்கை கதி கலங்க செய்துள்ளது. இந்த அறிக்கையில் பல தொழிலதிபர்கள், நிறுவனங்கள், பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளனர்.


சர்வதேச புலனாய்வு பத்திரிக்கையாளர் கூட்டமைப்பு ஒன்று, 18 மாதங்களாக ஆவணங்களைச் சேர்த்து இதனை வெளியிட்டுள்ளனர். அறிக்கை என்றால் அரசியல்வாதிகள் விடுவது போன்றல்ல, இதில் உலக நாடுகளில் உள்ள தொழிலதிபர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்கள் தங்கள் நாட்டில் வரி ஏய்ப்பு செய்தது மற்றும் வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளதை வெளியிட்டுள்ளனர். இந்த கூட்டமைப்பில் 380 பத்திரிகையாளர்களைக் கொண்டு ஆவணங்களைக் திரட்டியுள்ளனர். 180 நாடுகளை உள்ளடக்கிய இந்த அறிக்கையில் இந்தியா 19 வது இடத்தை பிடித்துள்ளது. மொத்தம் 1.34 கோடி பக்கங்களைக் கொண்டது இது. ஜெர்மனி செய்தித்தாளில் வந்த தகவல்களின் அடிப்படையில் புலனாய்வு செய்ய ஆரம்பித்துள்ளனர். இந்தியாவில் 700 க்கும் மேற்பட்டோர் இந்த அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ளனர்.







பெர்முடாவை சேர்ந்த 'ஆப்பிள் பை' மற்றும் சிங்கப்பூரை சேர்ந்த ' ஏசியாசிட்டி' ஆகிய இரண்டு நிறுவனங்களின் மூலம் உலகம் முழுவதும் முதலீடு செய்தவர்களின் தகவல்களை திரட்டியுள்ளனர்.இந்த நிறுவனங்கள் உலக பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் வெளிநாடுகளில் முதலீடு செய்ய முகமையாக செயல்பட்டுள்ளன. இந்நிறுவனத்தின் கிளை எதுவும் இந்தியாவில் இல்லாத போதே 714 வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இதன் இரண்டாவது பெரிய வாடிக்கையாளர்களாக 'சன் முதலீட்டு நிறுவன அதிபர் நந்த் லால் கெம்கா உள்ளார். இதே போன்று பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா, விஜய் மல்லையா, சச்சின் பைலட், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் உள்ளனர்.

உலகப் புகழ் பெற்ற இங்கிலாந்து மகாராணி 'எலிசபெத்' தனது தனிப்பட்ட முதலீடாக சைமன் தீவுகளில் முதலீடு செய்துள்ளார். ரஷ்ய அதிபர் 'விளாதிமிர் புதின்' உறவினர் முதலீடு விவரங்கள் இதில் உள்ளது. யார் யாரோ இருக்கும்பொழுது, அவர் 'மிஸ்' ஆவாரா? ஆம், விஜய் மல்லையாவும் உள்ளார். சமீபகாலமாக நல்ல விதமாக அறியப்படும் கேரள முதலவர் 'பினராயி விஜயன்' பெயரும் இந்த சட்டவிரோத வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பட்டியலில் இருந்தது. முதலில் ஊடகங்களில் வெளியிட்டவர்கள், பின்னர் அவர் பெயர் இல்லையென கூறுகின்றனர். வரி ஏய்ப்பு பட்டியலில் ஆப்பிள், நைக்கி நிறுவனங்களும் இருக்கின்றன.







காங்கிரஸ் கட்சி, ஜெயந்த் சின்ஹா பதவி விலகவேண்டும் என்றும், இந்தத் தகவல்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றும் கூறியது. இந்த விவகாரம் பற்றி அமைச்சர் அருன் ஜேட்லியிடம் கேட்ட பொழுது, ஏற்கனவே 'பனாமா பேப்பர்' வெளியீட்டின் போது கூறியதைப் போலவே வசனங்கள் பேசி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். இதனை ஆராய செபியிடம் (SEBI) முறையிட்டுள்ளனர். 2016 ஆம் ஆண்டும் இதே போன்று 'பனாமா பேப்பர்' என்ற பெயரில் பனாமா வங்கியில் (மொஸா பொன்சேகா நிறுவனம்) உள்ள ரகசியங்கள் வெளியிடப்பட்டது. அதிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களின் பெயர் பட்டியலிடப்பட்டுள்ளது. இதெல்லாம் கேள்விப்படும்போது ஒரு வசனம் தான் நியாபகத்திற்கு வருகிறது 'ரிச் கெட் ரிச்சர், புவர் கெட் புவரர்'. அதாவது பணக்காரன் மேலும் பணக்காரனாகிக்கிட்டே இருக்கான், ஏழை மேலும் ஏழையாகிக்கிட்டே இருக்கான். திரிஷா இல்லைனா நயன்தாரா என்பது போல, சுவிஸ் பேங்க் இல்லைனா, பனாமா, அதுவும் இல்லைன்னா வேறு என்று முதலைகள் முதலீடு செய்துகொண்டே இருக்கின்றன. கருப்புப் பணம் ஒழியுமென்றும், வரி ஏய்ப்பு முடியுமென்றும், ஸ்விஸ் வங்கிப் பணம் திரும்ப வருமென்றும் நாம் நம்பிக்கொண்டே இருப்போம்.

சந்தோஷ் குமார்

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT