Skip to main content

1100 ஆண்டுகள் பழமையான எட்டுக்கரங்களுடன் உள்ள கொற்றவையும் கல்வெட்டுகளும் கண்டுபிடிப்பு

Published on 12/04/2019 | Edited on 12/04/2019

கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம் பெரியநெசலூர் என்ற கிராமத்தில் ஆய்வுகள் மேற்கொண்டனர். அப்போது ஆயிரத்தி நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட மலையமான் கால கொற்றவையும் சில கல்வெட்டுகளும் கண்டறியப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இவற்றை கண்டறிந்த சேலம் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், ஆறகழூர் பொன்.வெங்கடேசன், மருத்துவர் பொன்னம்பலம் ஆகியோர் அடங்கிய குழுவினர் கூறும்போது, “சங்க காலத்தில் இருந்தே கொற்றவை வழிபாடு இருந்துவந்துள்ளது. அக்காலங்களில் தாய் வழி சமூக அமைப்பு செயல்பட்டதை கொற்றவை வழிபாட்டின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. சங்க இலக்கியங்களும்,தொல்காப்பியமும் கொற்றவையைப் பற்றி சில குறிப்புகளை தருகின்றன. சிலப்பதிகாரத்தில் வேட்டுவ வரிகளில் கொற்றவையின் உருவ அமைப்பு, ஆயுதங்கள், உடை, அணிகலன்கள், வழிபாட்டு முறைகள் போன்றவற்றை விரிவாக எடுத்துரைக்கிறது. கொற்றவை பாலை நிலக் கடவுளாக அறியப்படுகிறார். காடுகளில் வசித்த வேட்டுவர்கள் தங்களது வேட்டையில் வெற்றி கிடைக்க கொற்றவையை வழிபட்டுள்ளனர்.

 

kotravai


   
கொற்றவையானவர் பழையோள், பாய்கலைப்பாவை, ஐயை, பைந்தொடிப்பாவை, ஆய்கலைப்பாவை, சூலி, நீலி, காடுகிழாள் என பல்வேறு பெயர்களில் அறியப்படுகிறார். சிலப்பதிகாரத்தில் கொற்றவையின் கோயில் ஐயை கோட்டம் என அழைக்கப்பட்டுள்ளது. பல்லவர்கள் காலத்தில் கொற்றவை வழிபாடு மிகச்சிறப்பாக இருந்துள்ளது. பல்லவர்களின் கீழ் ஆட்சி செய்த வாணர்கள், மலையமான்கள் போன்றவர்கள் பல்லவர்கள் கலைப்பாணியை பின்பற்றி கொற்றவையின் தோற்றத்தை வடிவமைத்துள்ளனர்.

 

kotravai


பெரிய நெசலூர் கொற்றவை பெரிய நெசலூர் கிராமத்தில் உள்ள மங்கமுத்தாயி அம்மன் கோயிலின் உள்ளே மேற்குப் புறத்தில் இந்தக் கொற்றவை தனி மேடையில் உள்ளது. ஆரம்ப காலத்தில் இது கருவறைக்குள் இருந்திருக்க கூடும். இக்கொற்றவை கி.பி 9 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக கருதலாம். பல்லவர்கள் கலைப்பாணியை பின்பற்றி மலையமான்களால் செய்யப்பட்டுள்ளது. பல்லவர்கள் வலு இழந்த 9 ஆம் நூற்றாண்டில் மலையமான்கள் இப்பகுதியை ஆட்சி செய்ததை இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இக்கொற்றவையின் உயரம் 102 செ.மீ, அகலம் 88 செ.மீ, தடிமன் 12 செ.மீ ஆகும். ஒரு பலகைக்கல்லில் புடைப்புச்சிற்பமாக வெட்டப்பட்டுள்ளது. எருமைத்தலையின் மீது சமபங்க நிலையில் நின்றபடி உள்ளார். தலையில் கரண்ட மகுடம், காதுகளில் பத்தரகுண்டலம், கழுத்தில் சரபளி, சவடியுடன் புலிப்பல்லால் இணைக்கப்பட்ட தாலியை அணிந்துள்ளார். மார்புக்கச்சை பட்டையுடன் உள்ளது. மார்பில் சன்னவீரம் உள்ளது. இந்த சன்னவீரம் என்பது போர் கடவுள்கள், போர் வீரர்கள் மட்டும் அணியும் வீரச்சங்கிலியாகும். வலதுபுற மேல்பகுதியில் சூலமும் கிளியும், இடது புறம் கொற்றவையின் வாகனமான மானும் சிங்கமும் உள்ளது. மானும் சிங்கமும் அருகருகே ஒரே பக்கத்தில் காட்டப்பட்டிருப்பது தமிழகத்தில் இதுவே முதன்முறையாகும். எட்டுக்கரங்களுடன் உள்ளார். வலது பின்புறகரங்களில் எறிநிலைச்சக்கரம், வாள், பாம்பு காணப்படுகிறது. கையில் பாம்புடன் ஒரு கொற்றவை கண்டறியப்படுவது தமிழகத்தில் இதுவே முதன் முறையாகும். முன்கரம் அபய முத்திரையில் உள்ளது. இடது பின் கரங்களில் சங்கு, வில், கேடயமும் முன்கரம் கடியஸ்த நிலையிலும் உள்ளது. யானைத்தோலை போர்த்தி இடுப்பில் புலித்தோலால் ஆன மேகலையை அணிந்துள்ளார். முழு ஆடை உள்ளது. இடப்புற காலில் சிலம்பும், வலப்புற காலில் கழலும் அணிந்துள்ளார். கொற்றவையின் காலுக்கு அருகே நவகண்டம் கொடுத்துக்கொள்ளும் வீரன் உள்ளான். நவகண்டம் என்பது தன்னுடைய நாடு போரில் வெற்றி பெற ஒரு வீரன் தன் உடலில் உள்ள ஒன்பது பாகங்களின் சதையை அரிந்து கொற்றவைக்கு படையல் இட்டு தன் தலையை தானே வெட்டி பலி கொடுத்துக்கொள்வதாகும். இடப்புறம் கொற்றவையை வணங்கிய நிலையில் ஒரு அடியவர் உள்ளார். 

 

kotravai

 

கல்வெட்டு எருமைத் தலையின் வலதுபுறம் 6 வரிகளில் சிதைந்த நிலையில் ஒரு கல்வெட்டு உள்ளது. ஸ்ரீ முக்குல மலையமான் சாதன் என கல்வெட்டு வாசகம் உள்ளது. முக்குல மலையமான் வம்சத்தை நேர்ந்த சாதன் என்பவன் இந்த கொற்றவையை செய்து வைத்திருப்பதை இந்தக் கல்வெட்டு மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. மலையமான்கள் சங்ககாலத்தில் இருந்தே திருக்கோயிலூரை தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்து வந்துள்ளனர். சிலகாலம் சுதந்திரமாகவும் சிலகாலம் பல்லவர், சோழர், பாண்டியர்களின் கீழ் குறுநில மன்னர்களாகவும் ஆட்சி புரிந்து வந்துள்ளனர். பல்லவர்களின் கீழ் குறுநில மன்னர்களாக இருந்தபோது அவர்கள் பாணியில் அமைந்த கொற்றவை இதுவாகும். சிவன் கோயில் கல்வெட்டு மங்கமுத்தாயி அம்மன் கோயில் அருகே ஏரிக்கரையின் கீழ் ஓர் சிவன் கோயில் இருந்து அழிந்து போய் உள்ளது. ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் துண்டு கற்கள், தூண்களில் சில கல்வெட்டுகள் உள்ளன. ஒரு துண்டு கல்லில் திரிபுனசக்கரவத்திகள் மது கருவூரும் பாண்டியன் முடித்தலையும் குலோத்துங்க சோழ தேவற்கு என உள்ளது. இது சோழமன்னர் மூன்றாம் குலோத்துங்கசோழரின் மெய்கீர்த்தியாகும். இதன் மூலம் 12 ஆம் நூற்றாண்டில் இந்த ஊர் சோழர்களின் ஆட்சி நிலவியது உறுதியாகிறது.

 

kotravai

 

இங்குள்ள ஓர் உடைந்து போன தூணில் 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டியரின் கல்வெட்டு 13 வரிகளில் காணப்படுகிறது. கல்வெட்டின் நடுவே பாண்டியரின் அரசு சின்னமான இரட்டை மீன் நடுவே செண்டு புடைப்பாக பொறிக்கப்பட்டுள்ளது. பாண்டியத்தேவர் என்பவர் தானமாக கொடுத்த திருநாமத்துகாணி நிலத்தை முதலீடாக கொண்டு இராசாக்கள் மண்டபம் என்ற ஒரு மண்டபத்தை கட்டிக்கொடுத்ததை இக்கல்வெட்டு சொல்கிறது. அந்த மண்டபம் தற்போது அங்கு இல்லை, முற்றிலுமாக அழிந்து விட்டது. இப்பகுதியில் மேலும் ஆய்வுகள் செய்தால் இன்னும் பல வரலாற்று சான்றுகள் கிடைக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர். 



மேலும் தற்போது தமிழ்நாட்டில் பண்டைய வரலாறுகள் புதைக்கப்பட்டு விட்டது என்பதை நீதிமன்றங்கள் நினைவூட்டி வருவதுடன். தமிழக தொல்லியல் துறை அவற்றை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவுகளையும் பிறப்பித்து வருகிறது. அதாவது. புதுக்கோட்டை மாவட்டம் கண்ணனூர் என்ற கிராமத்தில் சுமார் 7 ஆயிரம் ஆண்டுகள் பழமையான வரலாற்று சின்னங்களாக இருந்த நடுகற்களை வனத்துறை பொக்கலின் கொண்டு அழித்துவிட்டதை ஆய்வாளர் கரு.ராஜேந்திரன் நீதிமன்றத்திற்கு சென்று முறையிட்ட வழக்கில் அந்த இடத்தில் இருந்து அகற்றப்பட்ட நடுகற்களை மீண்டும் நடுவதுடன் தமிழ்நாடு தொல்லியல் துறை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
 

 
அதே போல ராஜராஜசோழன் அடக்கம் செய்யப்பட்ட உடையாளூரில் ஆய்வுகள் செய்யவும் உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இப்படி தொடர்ந்து நீதிமன்றங்களே தமிழர்களின் பழமையை பாதுகாப்பதில் முனைப்பக் காட்டி வருகிறது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் தொல்லியல் துறை ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே ஆய்வாளர்களின் வேண்டுகோளாக உள்ளது. அதேபோல தமிழகம் முழுவதும் ஆய்வுகளை மேற்கொண்டு வரலாறுகளை பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

 

 

 

 

 

Next Story

ஆரணி காங்கிரஸ் எம்.பி. கடலூர் வேட்பாளராக அறிவிப்பு!

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Arani Congress MP Cuddalore candidate announcement

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் கடலூர், குறிஞ்சிப்பாடி, விருத்தாச்சலம், பண்ருட்டி, திட்டக்குடி, மற்றும் நெய்வேலி சட்டமன்ற ஆகிய 6 தொகுதிகளை உள்ளடக்கியது. இதில் 14 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இந்த தொகுதியில் வருகிற பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் சிவக்கொழுந்து போட்டியிடுகிறார். அதேபோல் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் இயக்குநர் தங்கர்பச்சான், நாம் தமிழர் கட்சி சார்பில் மணிவாசகம் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இதில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆரணி தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றி வரும் மருத்துவர் எம்.கே விஷ்ணுபிரசாத் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் செயல் தலைவராக உள்ளார். மேலும் இவர் கடந்த 2006 முதல் 2011 வரை செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 1972 ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநிலத் தலைவர் கிருஷ்ணசாமி ஆவார். இவருக்கு மனைவி, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இவர் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸின் மைத்துனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் செய்யாறு தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த காலத்தில் செய்யாறு சிப்காட் தொழில் பூங்காவை நிறுவுவதில் முக்கிய பங்காற்றியுள்ளார். மேலும் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்த புறவழிச்சாலை அனுமதி பெற்று ஓச்சேரி பாலத்தை கட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆரணி தொகுதியில் தி.மு.க. போட்டியிடுவதால் இவர் கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Next Story

1000 ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிற்பம் கண்டுபிடிப்பு

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
1000 year old Mahavira sculpture discovered

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மணவராயனேந்தலில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான கி.பி.11ம் நூற்றாண்டு மகாவீரர் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருச்சுழி பகுதியில் கள ஆய்வின் போது, மணவராயனேந்தலில் இளையராஜா என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் 24 ஆம் தீர்த்தங்கரர் மகாவீரர் சிற்பம் இருப்பதை அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் சு. ராஜபாண்டி, தொல்லியல் துறை பயிற்சி மாணவர் மீ. சரத் ராம் ஆகியோர் கண்டுபிடித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே. ராஜகுரு, ஆய்வாளர் நூர்சாகிபுரம் சிவகுமார் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

இதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே. ராஜகுரு கூறியதாவது, ‘விருதுநகர் மாவட்டத்தில் கோவிலாங்குளம், தொப்பலாக்கரை, குறண்டி, இருஞ்சிறை, புல்லூர், பாலவநத்தம், பந்தல்குடி, பாறைக்குளம், திருச்சுழி, புலியூரான், ஆவியூர், இருப்பைக்குடி, குலசேகரநல்லூர், சேத்தூர், சென்னிலைக்குடி, கீழ் இடையன்குளம், கிள்ளுக்குடி உள்ளிட்ட இடங்களில் சமண சமயம் பரவி இருந்ததற்கான தடயங்கள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மணவராயனேந்தலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மகாவீரர் சிற்பம் பாதி மண்ணில் புதைந்த நிலையில் உள்ளது. கருங்கல்லால் ஆன இச்சிற்பத்தில் மகரத் தண்டுகளுடன் கூடிய சிம்மாசனத்தில் மகாவீரர் அமர்ந்துள்ளார். அவருக்குப் பின்புறம் பிரபாவளி எனும் ஒளிவட்டம் உள்ளது. அதன் மேற்பகுதியில் சந்திராதித்தம், நித்திய விநோதம், சகல பாசனம் ஆகியவற்றைக் குறிக்கும் முக்குடை அமைப்பு உள்ளது. முக்குடை அழகிய கொடிகளுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மகாவீரரின் இருபுறமும் இரு இயக்கர்கள் உள்ளனர். இதன் காலம் கி.பி.11-ம் நூற்றாண்டாகக் கருதலாம். திருப்புல்லாணியிலிருந்து கமுதி, திருச்சுழி வழியாக மதுரை செல்லும் பெருவழிப் பாதையில் அநேக இடங்களில் தீர்த்தங்கரர் சிற்பங்கள் கிடைத்திருக்கின்றன.

சிற்பம் உள்ள இடத்தைச் சுற்றிலும் இரும்புக் காலத்தைச் சேர்ந்த வழுவழுப்பான கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள் சிதறிக் கிடக்கின்றன. இவ்வூர் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான இரும்புக் காலம் முதல் மக்கள் குடியிருப்பாக இருந்துள்ளதற்கு இவை ஆதாரமாக உள்ளன. பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் இச்சிற்பத்தை அரசு அருங்காட்சியகத்தில் வைத்துப் பாதுகாக்க வேண்டும் என அரசைக் கேட்டுக் கொள்வதாக’ அவர் தெரிவித்தார்.