10th Century God Mayon Sculpture Discovery!

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் 1,200 ஆண்டுகள் பழமையான பாண்டியர் காலத்தைச் சேர்ந்த திருமால் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிற்பத்தை அருங்காட்சியகத்தில் பாதுகாக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வடமலைக்குறிச்சி கண்மாய் பகுதியில், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, நூர்சாகிபுரம் சு.சிவகுமார் ஆகியோர் கள ஆய்வு செய்தபோது, நகராட்சி மயானப்பகுதியில் பாதி உடைந்த திருமாலின் கருங்கற் சிற்பம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. சேதமடைந்த நிலையில், இடுப்புப்பகுதிவரை மட்டுமே உள்ள இச்சிற்பம், முற்காலப் பாண்டியர் கலைப்பாணியில் அமைந்துள்ளது.

Advertisment

இதுகுறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது, "முல்லை நிலக் கடவுளாக மாயோன் எனத் தொல்காப்பியத்திலும், நெடுமால், நெடியோன், நெடுமுடி எனப் பிற இலக்கியங்களிலும் திருமால் குறிப்பிடப்படுகிறார். சங்கு சக்கரம் ஏந்தி நின்ற நிலையிலான நெடியோன் சிலப்பதிகாரத்திலும், கிடந்த கோலம் பெரும்பாணாற்றுப்படை, சிலப்பதிகாரத்திலும் சொல்லப்படுகிறது. பக்தி இலக்கிய காலத்தில் தோன்றிய இலக்கியங்களில் திருமால் உருவம் வருணிக்கப்படுகிறது.

10th Century God Mayon Sculpture Discovery!

பொதுவாக நான்கு கைகளுடன் சங்கு, சக்கரம் ஏந்தியவாறு திருமால் சிற்பங்கள் காணப்படும். சங்கு, சக்கரம், முப்புரிநூல் ஆகிய அமைப்பைக் கொண்டு சிற்பத்தின் காலம் கணிக்கப்படுகிறது. இங்கு கண்டெடுக்கப்பட்ட சிற்பத்தின் உயரம் 2 அடி, அகலம் 1½ அடி ஆகும். இதில் நான்கு கைகளுடன் கர்த்தரி முக முத்திரையில் வலது பின் கையில் சக்கரத்தையும், இடது பின் கையில் சங்கையும் ஏந்தியவாறு, காதுகளில் மகர குண்டலங்களுடன், கிரீடமகுடம் அணிந்து திருமால் காணப்படுகிறார். இச்சிற்பத்தில் அவரது இடுப்புக்கு கீழ் உள்ள பகுதி உடைந்து போயுள்ளது. அதன் உடைந்த பகுதி இங்கு காணப்படவில்லை. முகமும் தேய்ந்துள்ளது. சிற்ப அமைப்பைக் கொண்டு கி.பி.9-ம் நூற்றாண்டைச் சேர்ந்தாக இதைக் கருதலாம்.

Advertisment

திருவில்லிபுத்தூர் வடபத்திரசாயி பெருமாள் கோயிலில் கி.பி.10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மாறன் சடையன், வீரபாண்டியன் ஆகிய முற்காலப் பாண்டியர்களின் இரு வட்டெழுத்துக் கல்வெட்டுகள் உள்ளன. இதன்மூலம், இக்கோயில் முற்காலப் பாண்டியர்களால் கி.பி.10-ம் நூற்றாண்டுக்கு முன்பு கட்டப்பட்டதை அறிய முடிகிறது. திருவில்லிபுத்தூர் கோயில் கட்டப்பட்ட அதே காலத்தைச் சேர்ந்ததாக இச்சிற்பம் உள்ளது. இதை அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாக்க வேண்டும்" எனக் கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார்.