Skip to main content

அம்பேத்கர் கைபட்ட குளத்தை புனிதப்படுத்த 108 பானை சாணி, கோமியம்!

Published on 14/04/2018 | Edited on 15/04/2018
ambedkar


மஹத் என்ற நகரில் சவுதார் குளம் என்ற பொதுக் குளம் இருக்கிறது. அந்தக் குளத்தை தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்த உயர்ஜாதி இந்துக்கள் அனுமதிக்கவில்லை.

இதுகுறித்து விவாதிப்பதற்காக அந்த நகரில் 1927 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தாழ்த்தப்பட்ட மக்களின் மாநாடு கூட்டப்பட்டது. அதில் அம்பேத்கர் கலந்து கொண்டார். இந்த மாநாட்டுக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் மீது பரிவு கொண்ட சில பிரமுகர்களும் உதவியாக இருந்தனர்.

மாநாடு தொடங்கியது. மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு குடிக்கக்கூட தண்ணீர் கிடைக்கவில்லை. உயர்ஜாதியினரிடம் விலை கொடுத்து தண்ணீரை வாங்கிக் குடிக்க வேண்டிய அவலம் இருந்தது. “மனிதர்கள் என்ற முறையில் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களுடைய உரிமைகளுக்காக போராட வேண்டும். தங்கள் குழந்தைகளுக்கு கல்வி கிடைக்க செய்ய வேண்டும். அதன்மூலம் தங்களுடைய வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும். ராணுவத்திலும் போலீஸ் துறையிலும் நுழைவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை எதிர்த்து கிளர்ச்சி நடத்த வேண்டும்”என்று அந்த மாநாட்டில் அம்பேத்கர் வேண்டுகோள் விடுத்தார்.

“பொதுக் குளமான சவுதார் குளத்தை தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்த உயர்ஜாதியினர் அனுமதிக்க வேண்டும். அதை நிறைவேற்ற சவுதார் குளத்திற்கு மாநாட்டு பிரதிநிதிகள் ஊர்வலமாக செல்ல வேண்டும்” என்று மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து 1927 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் தேதி காலை மாநாட்டு பிரதிநிதிகள் சவுதார் குளத்திற்கு அமைதியாக அணிவகுத்தனர். தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் உரிமையை நிலை நாட்ட அணிவகுத்தது இதுதான் இந்தியாவில் முதல் முறை. ஊர்வலம் சவுதார் குளத்திற்கு சென்றது.

முதலில் அம்பேத்கர் குளத்தில் இறங்கி தண்ணீரை கைகளில் அள்ளி பருகினார். பிரதிநிதிகளும் தண்ணீரை பருகினர். பிறகு மாநாட்டுப் பந்தலுக்கு திரும்பினார்கள். குளத்தில் இறங்கியவுடன் ஆத்திரமடைந்த உயர்ஜாதியினர், நகரில் ஒரு வதந்தியை பரப்பினார் கள். தாழ்த்தப்பட்ட மக்கள் நகரில் உள்ள கோவிலுக் குள் நுழையப் போவதாக அந்த வதந்தி பரவியது. இதையடுத்து உயர்ஜாதியினர் மாநாட்டு பந்தலுக்கு ஆத்திரத்துடன் வந்தார்கள்.

அந்தச் சமயத்தில் மாநாடு முடிந்துவிட்டது. பிரதி நிதிகள் பலர் தங்கள் ஊருக்குத் திரும்பி விட்டனர். பலர் மூட்டை முடிச்சுகளை கட்டிக் கொண்டிருந் தனர். அப்போது மாநாட்டுப் பந்தலுக்குள் உயர் ஜாதியினர் நுழைந்தார்கள்.

பிரதிநிதிகளை கண்மூடித் தனமாக தாக்கினார்கள். நகரில் வசித்த தாழ்த்தப்பட்ட மக்கள் மீதும் தாக்குதல் நடத்தினார்கள். பிரதிநிதிகள் முஸ்லிம் வீடுகளுக்குள் நுழைந்து தப்பினார்கள். அப்போது அரசாங்க ஓய்வு இல்லத்தில் அம்பேத்கர் தங்கியிருந்தார். தாக்குதல் பற்றி கேள்விப்பட்டதும், விரைந்து வந்தார். வழியிலேயே அவரை ஒரு கும்பல் மறித்தது. அவர்களிடம் பொறுமையாக விளக்கம் அளித்தார்.

“கோவிலுக்குள் நுழைய நாங்கள் திட்டமிடவில்லை. அத்தகைய விருப்பம் எதுவும் இல்லை” என்று அம்பேத்கர் சொன்னார். அதன்பிறகே அவரை மாநாட்டு பந்தலுக்குள் செல்ல அனுமதித்த னர். மாநாட்டுப் பந்தல் சேதமடைந்து கிடந்தது. பொருட்கள் உடைந்து கிடந்தன. உணவுப் பொருட்கள் சிதறிக் கிடந்தன. 20க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் படுகாயம் அடைந்திருந்தனர்.

காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். இரண்டு நாட்கள் அங்கேயே தங்கியிருந் தார். தாக்குதலில் ஈடுபட்ட சமூக விரோதிகள் குறித்து தகவல்களைத் திரட்டினார். போலீஸில் புகார் செய்தார். ஐந்து பேருக்கு கடுங்காவல் தண்டனை வாங்கிக் கொடுத்தார்.
 

ambedkar


இந்த நிகழ்வு அவருக்குள் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. தாழ்த்தப்பட்ட மக்களை பெருமளவில் திரட்டி அமைதியான போராட்டங்களை நடத்த வேண்டிய நேரம் வந்துவிட்டதாக நினைத்தார். இந்தப் போராட்டம் பம்பாய் மாகாணம் முழுவ தும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பல பத்திரிகைகள் பாராட்டி எழுதின. வேறு சில பத்திரிகைகள் தாழ்த்தப்பட்ட மக்கள் நீசத்தனமான குற்றம் இழைத்ததாக எழுதின.

இந்தப் போராட்டம் முடிந்த பிறகு ஒரு வேடிக்கையான நிகழ்வு அரங்கேறியது. சவுதார் குளம் அசுத்தப்பட்டு விட்டதாகவும் அதை சுத்தப்படுத்தப் போவதாகவும் மந்திரங்களை ஓதினர். சுத்தப்படுத்துவதற்கு அவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?

108 மண் பானைகளில் சாணம், மாட்டு மூத்திரம், பால், தயிர் ஆகியவற்றை கலந்து குளத்தில் கொட்டினார்கள். இந்த நிகழ்ச்சியை மஹத் நகரில் இருந்த பல உயர் ஜாதியினர் புறக்கணித்தார்கள் என்பது முக்கியமான மாற்றமாகும்.

சவுதார் குள போராட்டம் அம்பேத்கருக்குள் புதிய சிந்தனையை உருவாக்கியது. மார்ச் மாதம் நடைபெற்ற அந்த போராட்டத்தைத் தொடர்ந்து, தாழ்த்தப்பட்ட மக்களை அணிதிரட்ட அவர் முடிவெடுத்தார்.