Skip to main content

100 நாள் வேலைத்திட்டம்... எடப்பாடி அரசின் மெகா மோசடி... அதிர்ச்சி ரிப்போர்ட்!

கிராமப்புற மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்க அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரவேண்டிய கட்டாயம் இருப்பதை ஆட்சிக்கு ஆதரவாக இருந்த இடதுசாரியினரும், கூட்டணிக் கட்சியினரும் வலியுறுத்திய நிலையில், அப்போது மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு, கடந்த 2006-ல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. கிராமத்திலுள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் வருடத்தில் 100 நாட்கள் உறுதியாக வேலையளிப்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம்.

 

admkதுவக்கத்தில் ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 150 ரூபாயாக இருந்த சம்பளம், நடப்பு நிதியாண்டில் 229 ரூபாயாக வழங்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதுமுள்ள கிராமங்களில் அமல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்திற்காக, ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசுக்கு நேரடியாக நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது மத்திய அரசு. அப்படி வழங்கப்படும் பல ஆயிரம் கோடி ரூபாய்களில் மெகா ஊழல் நடந்திருப்பது அம்பலமாகியிருக்கிறது.

 

admkநூறுநாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊழல்களுக்கு எதிராக போராடிவரும் வழக்கறிஞர் நல்வினை விஜயராஜிடம் பேசியபோது, "தேசிய அளவிலான வேலைவாய்ப்பு உறுதிச் சட்டமானது அனைவரும் வேலை பெறுவது என்கிற உரிமையை நிலைநாட்டியிருக்கிறது. ஆரம்பத்தில் குறிப்பிட்ட சில கிராமங்களில் மட்டுமே செயல்படுத்தப்பட்ட இந்த திட்டம் தற்போது தேசம் முழுவதும் சுமார் 2 லட்சத்து 62 ஆயிரம் கிராமங்களில் நடை முறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின்படி, நீர்நிலைகளை புனரமைத்தல், பண்ணைக் குட்டைகளை உருவாக்குதல், மரக்கன்று நடுதல், ஊரகச் சாலைகளை மேம்படுத்துதல், நீர் மேலாண்மை பணிகளை கவனித்தல், குளம் குட்டை ஏரிகளை தூர்வாருதல், ஆழப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளில் தொழிலாளர்களை ஈடுபடுத்தினர். ஒரு கட்டத்தில், ஊரக வளர்ச்சித் துறையால் மேற்கொள்ளப்பட்ட கழிப்பறைகள், சேவை மையங்கள், அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்ட கட்டுமான பணிகளும் 100 நாள் திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டன.

 

admkஇந்த திட்டத்தில் வேலை செய்யாமலே வேலை செய்ததாக கணக்குக் காட்டப்பட்டு முழுமையான நிதியை அதிகாரிகள் சுருட்டிக்கொள்வது, ஒரு நாள் சம்பளத்தில் 60 சதவீதம் தொழிலாளர்களுக்கு கொடுத்துவிட்டு 40 சதவீதத்தை அதிகாரிகள் எடுத்துக்கொள்வது என இரண்டு விதமான முறைகேடுகள் நடந்துள்ளன. உதாரணமாக, சேலம் மாவட்டம் மூக்கனேறி பஞ்சாயத்தில் மட்டும் ஒரு வருடத்தில் 26 லட்சத்தை எடுத்திருக்கிறார்கள். அதாவது, 200 மீட்டர் மட்டும் ஓடையை தூர் வாரிவிட்டு ஒன்னரை கிலோ மீட்டர் தூர் வாரியதாக கணக்கு காட்டியுள்ளனர். இப்படி ஒவ்வொரு ஊராட்சிகளிலும் நடந்திருக்கிறது. அந்த வகையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தில் மட்டும் கடந்த 3 ஆண்டுகளில் 136 கோடி ரூபாய் இத்திட்டத்தில் ஊழல் நடந்திருக்கிறது.


இத்திட்டத்தை கவனிப்பதற்கும் தணிக்கை (ஆடிட்) செய்வதற்கும் ஒவ்வொரு ஒன்றியத்திலும் 20 பஞ்சாயத்துகளுக்கு ஒரு சமூக தணிக்கைக் குழு உண்டு. வட்டார வள அலுவலர் தலைமையில் இந்த ஆடிட் குழு இயங்கும். வட்டார வள அலுவலர் ஒரு ஆடிட்டராக இருப்பார். மாவட்ட அளவில் ஒரு குழு இயங்கும். இதில் பணிபுரியும் அலுவலர்கள் 3 ஆண்டு கால காண்ட்ராக்ட் அடிப்படையில் தமிழக அரசால் நியமிக்கப்படுவார்கள். இவர்களுக்கு பவானிசாகரில் உள்ள பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் 5 நாட்கள் தங்கியிருந்து தணிக்கை செய்யும் இந்தக் குழுவினர், திட்டத்தின் பயனாளிகளை நேரடியாக சந்தித்து அவர்களிடம் பேசி, அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சம்பளத்தின் விபரங்களைப் பெற்றுக்கொள்வார்கள். பணிகள் செய்யப்பட்ட பகுதிகளை நேரடியாக ஆய்வு செய்து குறிப்பெடுத்துக்கொள்வர்.


அதன் பிறகு ஒவ்வொரு ஊராட்சியிலுமுள்ள ஊராட்சி செயலரிடமிருந்து பெறப்படும் வவுச்சர்கள் அடங்கிய கோப்புகளை இக்குழு ஆய்வு செய்யும். ஒவ்வொரு பணியையும் 100 சதவீதம் நேரடியாக ஆய்வு செய்வார் வட்டார வள அலுவலர். இவரது ஆய்வுக்கு உதவி செய்ய, வேறு பகுதியைச் சேர்ந்த கிராம வள அலுவலர்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வேலை நடந்த பகுதிகளை 100 சதவீதமும், வேலையில் ஈடுபட்ட தொழிலாளிகளில் 75 சதவீதமும் நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும்.

புகார் பெறுவதற்கும் நடவடிக்கை எடுப்பதற்கும் வட்டார வள அலுவலர் தலைமையிலுள்ள ஆடிட் குழுவுக்கு அதிகாரம் உண்டு. இதையெல்லாம் 4 நாட்களில் முடித்துவிட்டு 5-ஆவது நாளில் சிறப்பு கிராமசபை கூட்டத்தை கூட்டுவார். தனது ஆய்வில் கண்டறிந்தவைகளை சபையில் சொல்லி ஒப்புதலை பெறுவார். கண்டுபிடிக்கப்பட்ட முறைகேடுகள், ஊழல்களையெல்லாம் விவரித்து சபையில் தீர்மானமும் நிறைவேற்றுவார். அதன்படி, ஒவ்வொரு ஊராட்சிக்கும் 150 முதல் 500 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தயாரிப்பார் வட்டார வள அலுவலர். அந்த அறிக்கையில் ஐட்டம்வாரியாக அனைத்து விபரங்களும் இருக்கும். அப்படி தயாரிக்கப்பட்ட சமூக தணிக்கைப் பிரிவின் ஆக்சன் டேக்கன் ரிப்போர்ட்டில்தான் கடந்த மூன்று வருடங்களில் 4000 கோடிக்கான ஊழல்கள் அம்பலமாகியிருக்கிறது'' என்று சுட்டிக்காட்டுகிறார்.

தொடர்ந்து பேசிய அவர், "இந்த திட்டத்திற்காக வருசத்துக்கு சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்குகிறது மத்திய அரசு. இதில் தமிழக அரசுக்கு 6 ஆயிரம் கோடி கடந்த ஆண்டு ஒதுக்கியிருக்கிறது. தமிழக அரசு தன் பங்காக 600 கோடி ஒதுக்கியிருக்கிறது. சமூக தணிக்கை குழுவின் ஆக்சன் டேக்கன் ரிப்போர்ட்டில் நிதி முறைகேடுகள், நிதி இழப்புகள் என இரண்டு வகையில் ஊழல்களை சுட்டிக்காட்டுகின்றனர். அந்த வகையில், கடந்த 2017-18 நிதியாண்டில் தமிழகத்திலுள்ள 31 மாவட்டங்களிலும் செயல்படுத்தப் பட்ட இத்திட்டத்தில் 92 கோடியே 84 லட்சத்து 46 ஆயிரத்து 276 ரூபாய் நிதி முறைகேடும், 1,830 கோடியே 68 லட்சத்து 60 ஆயிரத்து 341 ரூபாய் நிதி இழப்பும் ஏற்பட்டிருக்கிறது.

அதேபோல, 2018-19 நிதியாண்டில் 115 கோடியே 94 லட்சத்து 20 ஆயிரத்து 561 ரூபாய் நிதி முறைகேடும், 1,548 கோடியே 38 லட்சத்து 36 ஆயிரத்து 976 ரூபாய் நிதி இழப்பும் நடந்திருக்கிறது. மேலும், 2019-2020 நடப்பு நிதியாண்டில் 35 கோடியே 35 லட்சத்து 10 ஆயிரத்து 745 ரூபாய் நிதி முறைகேடும், 592 கோடியே 5 லட்சத்து 25 ஆயிரத்து 252 ரூபாய் நிதி இழப்பையும் சந்தித்திருக்கிறது இந்த திட்டம். ஆக, கடந்த 3 ஆண்டுகளில் நிதி முறைகேட்டையும் நிதி இழப்பையும் கணக்கிட்டால் சுமார் 4 ஆயிரத்து 215 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதை அம்பலப்படுத்துகிறது சமூக தணிக்கையின் ஆக்ஷன் டேக்கன் ரிப்போர்ட்''’என்கிறார் அவர்.

தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘இத் திட்டத்தின் மெகா ஊழல்களை அறிந்துள்ள மாவட்ட கலெக்டர்கள், இதன் மீது ஒரு ஆக்சனையும் எடுக்கவில்லை என்பதுதான் துரதிர்ஷ்டம். அதேசமயம், ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையிலுள்ள இத்திட்டத்தின் குறைதீர்க்கும் நடுவர் அமைப்பில் 15 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவர்களும் இந்த ஊழல்கள் மீது நடவடிக்கை எடுக்க அக்கறை காட்டாமல் இருப்பதுதான் அதைவிட துரதிர்ஷ்டம்''‘என குற்றம்சாட்டுகிறார்கள்.

இதற்கிடையே, இத்திட்டத்தில் நடந்துள்ள ஊழல்களை மாநிலம் வாரியாக விசாரிக்க துவங்கியிருக்கும் மத்திய அரசு, தமிழகத்தில் நடந்துள்ள 4 ஆயிரம் கோடி ஊழல் குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறது. இந்த நிலையில், இத்திட்டத்தில் தேசம் முழுவதும் ஊழல்கள் நடப்பதாலும், அதனை தடுக்க வேண்டிய மாநில அரசுகள் அதில் அக்கறை காட்டாததாலும் வரும் நிதியாண்டில் இத்திட்டத்தை ரத்து செய்து விடலாம் என மத்திய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் ஆலோசித்து வருவதாக டெல்லியிலிருந்து தகவல்கள் கிடைக்கின்றன. மகாத்மா பெயரிலான முக்கியமான திட்டத்தை காந்தி கணக்கின் பெயரில் காலி செய்ய மத்திய-மாநில அரசுகள் தயாராகிவிட்டன.