Skip to main content

தகவல்களை திருடிய ஃபேஸ்புக், முகங்களையும் திருடுகிறதா??? #10YearChallenge பின்னணி

Published on 18/01/2019 | Edited on 18/01/2019
10 year challenge

 

கிகி, மோமோ, ஃபிட்நெஸ், ஐஸ் பக்கெட், பேட் பாக்ஸ் ஆகிய சேலஞ்ச்களைத் தொடர்ந்து, அந்த வரிசையில் தற்போது புதிதாக வந்துள்ளதுதான் 10yearchallenge. 10 வருடங்களுக்கு முன்பு எடுத்த புகைப்படங்களையும், தற்போது எடுத்த புகைப்படங்களையும் ஒன்றாக சேர்த்து பதிவிடவேண்டும். இரண்டுக்குமிடையேயான வித்தியாசத்தை ஒப்பிடும் படியான சேலஞ்ச்தான் இது. அதாவது 2009 களில் எடுத்த புகைப்படங்களையும் 2019ல் எடுத்த புகைப்படங்களையும் பதிவேற்றி வருகின்றனர். இது தொடர்பாக பல மீம்களும் வலம் வருகின்றன. 
 

சிலர் இந்த சேலஞ்ச்களை விடாப்பிடியாக கடைபிடித்து வருகின்றனர். சிலர் இதை விமர்சித்து வருகின்றனர். சிலர் அப்போலாம் நான் ஃபோட்டோவே எடுக்கல என புலம்பி வருகின்றனர். இவ்வாறாக இந்த சேலஞ்ச் ஒருபுறம் மீம்களாலும், ஒருபுறம் ஃபோட்டோக்களாலும் பிரபலமடைந்துகொண்டே வருகிறது. பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை பெரும்பாலானோர் இந்த சேலஞ்சில் கலந்துகொண்டு தங்களது புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். 
 

இது வெறும் பொழுதுபோக்கு தானே என நாம் கடந்து போனாலும், இதற்கு பின் பெரிய ஆபத்து ஒன்று காத்துக்கொண்டிருக்கிறது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பிரபல எழுத்தாளர் கேட் ஓ நெய்ல் கூறியுள்ளது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அவர் கூறி்யதாவது, ஃபேஸ்புக் மக்களின் முகத்தில் ஏற்பட்ட மாற்றங்களை வைத்து ஃபேஷியல் ரெககனேஷன் என்ற தொழில்நுட்பத்தை அப்டேட் செய்கிறது. ஃபேஷியல் ரெககனேஷன் என்பதே மக்களின் சுதந்திரத்திற்கு எதிரானது. பேஸ்புக் அதை மேலும் தவறாக பயன்படுத்த பார்க்கிறது. 
 

இவர் கூற்று மேலும் பல சந்தேகங்களை கிளப்பியுள்ளது. ஏற்கனவே கேம் பிரிட்ஜ் அனலிடிகா போன்ற மூன்றாம் தரப்பு நிறுவனங்களிடம் பேஸ்புக் தங்கள் பயனர்களின் தகவல்களைக் கொடுத்தது. தற்போதும் அதுபோல ஏதும் முயற்சிக்கிறதா என சந்தேகத்தை கிளப்பியுள்ளது. பேஸ்புக் இனி இப்படியான சம்பவங்கள் நிகழாது என உறுதியளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்த இணைய உலகத்தில் எதுவுமே தனிமனித தகவல்களாக இருப்பதில்லை. இதில் இதுவேறு என வருத்தம் கொள்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

 

 

 

Next Story

சேலஞ்ச்... சவால்... பந்தயம் கட்ட ரெடி..! செந்தில்பாலாஜி அதிரடி..!

Published on 22/09/2020 | Edited on 22/09/2020
Senthil Balaji

 

 

அதிமுகவில் தற்போதைய சூழ்நிலையில் ஓ.பி.எஸ். அணி, இ.பி.எஸ். அணி, டி.டி.வி.தினகரன் அணி என உள்ளன. மேலும் இந்த மூன்று அணிகளையும் பிடிக்காத ர.ர.க்களும் உள்ளனர். 2021 தேர்தலை சந்திக்க ஓரளவு நெருங்கிவிட்ட நிலையிலும் அதிமுக அணிகளுக்குள் கருத்து வேறுபாடுகள் வெளிப்படையாகவே தெரிகின்றன. ஏற்கனவே பெற்ற வெற்றி ஜெயலலிதா ஏற்படுத்திக்கொடுத்தது. தற்போது அதிமுக இப்படி பிரிந்து ஈகோ யுத்தமாக நடைபெறுதால் தேர்தலை சந்தித்தாலும் வெற்றி எப்படி இருக்கும் என்று ர.ர.க்கள் கவலையில் உள்ளனர். 

 

இந்தநிலையில் கரூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிளிலும் திமுக வெற்றி பெறும் என்றதோடு, இந்த சவாலுக்கு நாங்கள் ரெடியாக இருக்கிறோம் என்று அதிரடியாக கூறி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

 

செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''2021ல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கலைஞர் ஆட்சி அமையும். 234 தொகுதிகளிலும் திமுக மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெறும். கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். நான்கு தொகுதிகளிலும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறும். 

 

ஆளும் கட்சிக்காரர்கள் என்கிட்டேயோ அல்லது வேறுயாருக்கிட்டேயோ சேலஞ்ச் பண்றதுக்கு, சவால் விடுவதற்கு, பந்தயம் கட்டுவதாக இருந்தால் சொல்லுங்கள் நாங்க ரெடியா இருக்கிறோம். நாங்கள் சவாலுக்கு ரெடியா இருக்கிறோம். நான்கு தொகுதியிலும் தொகுதிக்கு தலா 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நான்கு தொகுதியிலும் வெற்றி பெறுவோம். யாராவது சேலஞ்ச் பண்ணா சொல்லுங்க சேலஞ்ச் பண்ணுவோம்.

 

ஏற்கனவே அரவக்குறிச்சியில் சேலஞ்ச் பண்ணினோம். ஒருத்தர் வீர வசனம் பேசினார். டெபாசிட் வாங்கிவிட்டால் நான் அரசியலைவிட்டு போய்விடுகிறேன் என்றார். இப்ப அந்த வீரவசனமெல்லாம் வரட்டும், களத்திற்கு வரட்டும். இப்ப சொல்றேன், அடிச்சு சொல்றேன் நான்கு தொகுதியிலும் திமுக ஜெயிக்கும், உதயசூரியன் ஜெயிக்கும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்தான் முதலமைச்சர்'' என்றார். 

 

சேலஞ்ச் செய்கிறேன், சவால் விடுகிறேன், பந்தயம் கட்ட தயார் என்று செந்தில் பாலாஜி அறிவித்தது கரூர் அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் இருந்து வந்தவர் என்பதால் மாவட்டத்தில் அதிமுகவுக்கு உள்ள பலம், பலவீனம் எல்லாம் செந்தில்பாலாஜிக்கு தெரியும், அதனால்தான் இவ்வளவு நம்பிக்கையாக சவால் விடுகிறார் என்கின்றனர் திமுகவினர். 

 

 

 

Next Story

எடப்பாடிக்கு துரைமுருகன் சவால்!

Published on 03/05/2019 | Edited on 03/05/2019

கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி வேலூர் தொகுதி நாடாளுமன்ற  தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்து உத்தரவிட்டது.இதற்கு வேலூர் தொகுதியில் அதிகளவு பணப்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்ததாக கூறப்பட்டது.இதில் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினர் பணம் கைப்பற்றியதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று பரவியது.இந்த நிலையில் வருமானவரித்துறை சம்மந்தமாக முதலமைச்சர் பழனிச்சாமி சூலூர் பிரச்சாரத்தில் கூறியது  ஜமுக்காளத்தில் வடிக்கட்டிய பொய் என்றும் தங்களுடைய வீடு, கல்லூரியில் சோதனை நடத்தி வருமான வரித்துறை கொண்டு சென்றது 10 லட்சம் ரூபாய் பணம் மட்டுமே என்றும் துரைமுருகன்  விளக்கம் அளித்துள்ளார். மேலும்,13 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படும் இடம் தங்களுடையது இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

 

eps



அதேபோல், சோதனையின்போது எங்குமே 12 கிலோ தங்கம் கைப்பற்றப்படாத நிலையில், முதலமைச்சர் பொய்யான தகவலை பரப்பி வருவதாகவும் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார். அனைத்தும் அறிந்துக் கொள்ளக்கூடிய இடத்தில் அமர்ந்துள்ள முதலமைச்சர், ஏதும் தெரியாத சராசரி மனிதனை போல பேசியிருப்பது கேலிக்கூத்தாக இருப்பதாகவும் திமுக பொருளாளர் கூறியுள்ளார்.மேலும்  முதலமைச்சர் நிரூபித்தால் தமது பதவியை ராஜினாமா செய்கிறேன் என குறிப்பிட்டுள்ள துரைமுருகன், இல்லையெனில் முதலமைச்சர் பழனிசாமி பதவியை ராஜினாமா செய்ய தயாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.பின்பு தேர்தல் முடிவு வந்தவுடன் மக்களே அவரை வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள் என்று தனது வழக்கமான கிண்டலில் துறைமுருகன் கூறியுள்ளார்.