சேலம் மாநகராட்சியில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், அரசுக் கட்டடங்களின் மேற்கூரைகளில் சோலார் பேனல்கள் பொருத்தி, அதன்மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்காக, 2.69 கோடி ரூபாயில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. இத்திட்டத்திற்கான டெண்டர் படிவங்கள் 3.1.2019 முதல் 6.2.2019 வரை பெறப்பட்டன. டெண்டரில் கலந்து கொண்ட நிறுவனங்களில், 2.41 கோடி ரூபாய் குறைந்தபட்ச விலைப்புள்ளி குறிப்பிட்டு இருந்த, சேலம் நெத்திமேட்டைச் சேர்ந்த டெல்டா ரோட்டோ டெக் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டது.
சோலார் பேனல் கிரிட்டுகள் விநியோகம், பொருத்துதல், சோதனை, 5 ஆண்டுக்கான இயக்கம் மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும். 6 மாதத்திற்குள் சோலார் பேனல்கள் பொருத்தப்பட வேண்டும் என்று ஒப்பந்ததாருக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, சேலம் மாநகராட்சியின் சூரமங்கலம் மண்டலத்திற்கு உட்பட்ட 16 அரசுக் கட்டடங்களின் மேற்கூரைகளில் 52.26 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டன. அஸ்தம்பட்டி மண்டலத்தில் 19 கட்டடங்களில் 208.66 கி.வா., அம்மாபேட்டை மண்டலத்தில் 23 கட்டடங்களில் 152.61 கி.வா., கொண்டலாம்பட்டி மண்டலத்தில் 11 கட்டடங்களில் 57.71 கி.வா., மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு டெல்டா ரோட்டோ டெக் நிறுவனம் சோலார் பேனல் கிரிட்டுகளைப் பொருத்தியது. மொத்தம் 69 கட்டடங்களின் மேற்கூரைகளில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டன.
கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் சோலார் மின் உற்பத்தித் திட்டத்தை, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். ரூப்டாப் சோலார் புராஜக்ட் தொடங்கி ஐந்து ஆண்டுகள் முடிவுற்ற நிலையில், தற்போதைய நிலவரம் குறித்து, 'நக்கீரன்' புலனாய்வு இதழ் நடத்திய நேரடி கள விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. சேலம் பொன்னம்மாபேட்டை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், வாய்க்கால் பட்டறை ஆரம்ப சுகாதார நிலையம், மணக்காடு மகளிர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆகிய கட்டடங்களில் ஆய்வு செய்தபோது, சோலார் பேனல்கள் பெயரளவுக்கு தரையில் கிடத்தப்பட்டு இருந்ததே தவிர, அதற்கான மீட்டர், மின்சார உற்பத்திக்கான இணைப்புகள் வழங்கப்படாமல் பயனற்றுக் கிடப்பது தெரிய வந்தது.
மணக்காடு தொடக்கப்பள்ளி, மணக்காடு சமுதாயக்கூடம், பாவடி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டடங்களில் பொருத்தப்பட்ட சோலார் பேனல்கள் திருடு போய்விட்டதாக 8.11.2022ம் தேதியும், பாவடி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டடத்தில் பொருத்தப்பட்ட சோலார் பேனல்கள் சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டதோடு, மின் இணைப்பு கம்பிகள் திருடப்பட்டதாக 21.7.2020ம் தேதியும் மாநகராட்சி மற்றும் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அதன்பிறகு இங்கு புதிதாக சோலார் பேனல்கள் பொருத்தவோ, புகாரின் மீது யாதொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/29/sa3-2026-01-29-10-31-31.jpg)
சேலம் மிட்டா புதூர் நடுநிலைப்பள்ளியில் கடந்த 2023ம் ஆண்டு கட்டுமானம் மற்றும் மின் கசிவு காரணமாக எலக்ட்ரிகல் பணிகள் நடந்துள்ளன. அப்போது பள்ளி மேற்கூரையில் பொருத்தப்பட்டு இருந்த சோலார் பேனல்களை கழற்றி, சுவர் ஓரமாக சாய்த்து வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. கட்டுமானப் பணிகள் முடிந்து இரண்டு வருடங்கள் ஆகியும் சுவரில் சாய்த்து வைக்கப்பட்ட பேனல்கள் இன்று வரை கேட்பாரற்றுக் கிடக்கின்றன.
அழகாபுரம் புதூர் தொடக்கப்பள்ளி, அல்லிக்குட்டை நடுநிலைப்பள்ளிகளில் கூடுதல் கட்டடம் கட்டும் பணிகள் நடந்தபோது சோலார் பேனல்கள் கழற்றப்பட்டுவிட்டன. அதன்பிறகு அங்கு மீண்டும் பேனல்கள் பொருத்தப்படாததால் மின் உற்பத்தி முடங்கியது தெரிய வந்தது.சோலார் பேனல்களுக்கான இன்வெர்ட்டர் துண்டிக்கப்பட்டது, தீக்கிரையானது, திருடு போனது, கட்டுமானப் பணிகளால் பேனல்கள் பிரிக்கப்பட்டது என 41 கட்டடங்களில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாகவே மின் உற்பத்திப் பணிகள் நடைபெறவில்லை.
சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தாதகாப்பட்டி சிவராமன் ஆர்.டி.ஐ.,யில் பெற்ற தகவலில், மேற்கூரைகளில் சோலார் பேனல்கள் நிறுவியதன் மூலம் கடந்த 2024 ஆகஸ்ட் வரை 2.14 லட்சம் கிலோவாட் ஹவர் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டதாக மாநகராட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம், ராம் நகர் தொடக்கப்பள்ளி கட்டடத்தில் சோலார் பேனல் பொருத்தப்பட்டு உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. ஆனால் அங்கு பள்ளிக்கூடமே இல்லை என்பது நமது ஆய்வில் தெரிய வந்தது. அம்மாபேட்டை அண்ணா மருத்துவமனை, அஸ்தம்பட்டி மண்டல அலுவலக கட்டடங்களில் சோலார் பேனல்கள் பொருத்தப்படாமலேயே, பொருத்தப்பட்டதாக பொய்யான தகவலை ஆர்.டி.ஐ.,யில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, ரூப்டாப் சோலார் புராஜக்டை ஒப்பந்தம் எடுத்த டெல்டா ரோட்டோ டெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுப்ரமணியிடம் அலைபேசி வழி தொடர்பு கொண்டு கேட்டோம்.
''எங்களுக்கு ஒப்பந்தத்தில் என்ன சொல்லப்பட்டதோ அந்தப் பணிகளை முடித்துக் கொடுத்து விட்டோம். ரூப்டாப் சோலார் ஒப்பந்தம் உள்பட 7 விதமான பணிகளை முடித்த பிறகும் இன்னும் 10 சதவீத 'பில்' தொகை மாநகராட்சி நிர்வாகம் வழங்காமல் பாக்கி வைத்திருக்கிறது. நிலுவைத் தொகையைக் கேட்டு மாநகராட்சிக்குக் கடிதம் எழுதி இருக்கிறோம்.
கட்டுமானப் பணிகள் காரணமாக சோலார் பேனல்கள் கழற்றப்பட்டு இருந்தால், அப்பணிகள் முடிந்த பிறகு மாநகராட்சி நிர்வாகம்தான் தகவல் அளிக்க வேண்டும். சீரான இடைவெளியில் நாங்களும் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். பிரிக்கப்பட்ட சோலார் பேனல்களை மீண்டும் பொருத்தும்போது அதற்கான செலவுகளும் இருக்கின்றன,'' என்றார் சுப்ரமணி.
ரூப்டாப் சோலார் புராஜக்ட் மூலம் ஆண்டுக்கு 60 லட்சம் ரூபாய் மின் கட்டணம் சேமிக்கப்படும் என்று சேலம் மாநகராட்சி தரப்பு கூறியிருந்தது. ஆனால் இத்திட்டம் அமலுக்கு வந்த 3 ஆண்டுகளுக்கு உள்ளாகவே முடங்கிப் போனதும், எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது. மாநகராட்சியின் அலட்சியம், மெத்தனப் போக்கால் மக்கள் வரிப்பணம் 2.41 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டு உள்ளது நமது கள ஆய்வில் தெரிய வந்துள்ளது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/29/sa4-2026-01-29-10-31-49.jpg)
இது தொடர்பாக சேலம் மாநகராட்சி ஆணையர் இளங்கோவனிடம் அலைபேசிவழி தொடர்பு கொண்டு கேட்டபோது, ''இதுபற்றி விசாரித்துச் சொல்கிறேன்,'' என்றார். அதன்பிறகு தொடர்பு கொண்டபோது, ''வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் முடிந்த பிறகு பேசுகிறேன்,'' என்றார். பின்னர், மாநகராட்சியின் அலட்சியத்தால் மக்கள் பணம் விரையமாக்கப்பட்டது குறித்து விரிவாக அவருக்கு மெசேஜ் செய்திருந்தோம். அதன் பிறகும் அவரிடம் இருந்து பதில் ஏதும் வரவில்லை.
இதுகுறித்து சேலம் மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ''ரூப்டாப் சோலார் புராஜக்ட் தொடங்கியது முதல் இப்போது வரை சேலம் மாநகராட்சிக்கு 6 ஆணையர்கள் பணியாற்றியுள்ளனர். ஆனால், ஒருவர்கூட இத்திட்டத்தின் மீது கவனம் செலுத்தவில்லை. முந்தைய அதிமுக ஆட்சியின்போதே இத்திட்டத்திற்கான கமிஷனை அதிகாரிகள் ஒப்பந்ததாரரிடம் இருந்து கறந்து விட்டனர். திமுக ஆட்சி அமைந்த பிறகு வந்த அதிகாரிகள், 'கட்டிங்' கிடைக்காததால் சோலார் திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டனர். கூட்டிக்கழித்துப் பார்த்தால் மக்களுக்குதான் நிகர இழப்பு. மக்களின் வரிப்பணத்தை விரையமாக்கிய அலட்சிய அதிகாரிகளிடம் இருந்து உரிய இழப்பீட்டை வசூலிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார் வருத்தம் தோய்ந்த குரலில். 'அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது; ஆனால், நோயாளி இறந்துவிட்டார்' என்பது இதுதானோ?
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/29/salem2-2026-01-29-10-30-13.jpg)