பீகார் மாநிலம் தேர்தல் அறிவிப்பதற்கு முன்பே, அதன் தகிப்பை உணர ஆரம்பித்திருந்தது. அடுக்கடுக்கான வாக்குறுதிகள், ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் என்று தொடங்கிய சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றன. இந்தத் தேர்தலில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (N.D.A.), காங்கிரஸ் - ராஷ்ட்ரிய ஜனதா தளம் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணி, தேர்தல் வியூக வகுப்பாளரான பிரஷாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி ஆகியவை களத்தில் இருந்ததால் மும்முனைப் போட்டி நிலவி பெரும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

Advertisment

ஆனால், அனைத்து எதிர்பார்ப்புகளையும் தவிடுபொடியாக்கும் வகையில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தனிப்பெரும்பான்மையில் மீண்டும் ஆட்சியமைக்க விருக்கிறது. இது ஒரு பக்கம் என்றால் பாஜக சார்பில் அலிநகர் தொகுதியில் களமிறக்கப்பட்ட 25 வயது பாடகியின் வெற்றி பலரின் கவனத்தைப் பெற்றிருக்கிறது.  

Advertisment

நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் பக்தி இசை மூலம் புகழ் பெற்றவர்,  பாடகி மைத்திலி தாக்கூர். 2000 ஜூலை 25 அன்று, பீகாரின் மதுபானி மாவட்டத்தில் உள்ள பெனிபட்டி கிராமத்தில் பிறந்த இவர், இசை உலகில் ஆரம்பித்து அரசியலில் அசத்தலாகப் பிரவேசித்துள்ளார். இவரது தந்தை ரமேஷ் தாக்கூர் இசை ஆசிரியர்... தாய் பார்த்தி தாக்கூர். மைத்திலிக்கு இரண்டு உடன்பிறந்த சகோதரர்கள் உள்ளனர்.  

இசைப் பயிற்சியை மூன்று வயதிலிருந்தே தாத்தா ஸ்ரீ ஷோபா சிந்து தாக்கூரிடமும், 6 வயதிலிருந்து தந்தை ரமேஷ் தாக்கூரிடம் கற்கத் தொடங்கிய மைத்திலி, ஹிந்துஸ்தானி கிளாசிக்கல் இசை, ஹார்மோனியம் மற்றும் தப்ளாவில் தேர்ச்சி பெற்றவராக திகழ்திருக்கிறார். அதன்பிறகு பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது பாடல்கள் மூலம் பலரின் கவனத்தைப் பெற்றார். 2017 ஆம் ஆண்டு ரைசிங் ஸ்டார் நிகழ்ச்சியில் பங்கேற்று இரண்டாம் இடத்தை பிடித்தார். இருப்பினும் நிகழ்ச்சியில் அவர் பாடிய பாடல்கள் நாடு தழுவிய அளவில் அவருக்கு ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது.

Advertisment

ஹிந்தி, போஜ்புரி, அவதி, மகாஹி உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் மைத்திலி பாடல்களைப் பாடியிருக்கிறார். தனது சகோதரர்களுடன் சேர்ந்து யூடியூப் சேனலை ஆரம்பித்த அவர், பக்தி இசை வீடியோக்களைப் பதிவேற்றி, 1 மில்லியனுக்கும் மேற்பட்ட சப்ஸ்கிரைபர்களையும் வைத்துள்ளார். இப்படி ஆஃப்லைனிலும், ஆன்லைனிலும் படு வைரலாக இருந்த மைத்திலிக்கு கடந்த ஆண்டு ராமர் கோவில் திறப்பு விழாவில் பக்தி பாடல் பாடும் வாய்ப்பு கிடைத்தது. அதனைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு பாடல் பாடி அசத்திய மைத்திலிக்கு, பிரதமர் மோடியிடம் பாராட்டும் புகழ் வெளிச்சமும் கிடைத்தது.

இந்த நிலையில்தான் அக்டோபர் 14 ஆம் தேதி யாரும் எதிர்பார்க்காத விதமாக மைத்திலி தாக்கூர் பாஜகவில் இணைந்தார். அவரது புகழை வாக்காக அறுவடை செய்ய நினைத்த பாஜக தலைமை, கட்சியில் சேர்ந்த அடுத்த நாளே அதாவது அக்டோபர் 15 ஆம் தேதி அலிநகர் சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராக மைத்திலியை அறிவித்தது. அதேசமயம் அவர் சார்ந்த சமூகத்தின் வாக்குகளைப் பாஜக கண்க்கிட்டே காயை நகர்த்தியிருந்தது. கைமேல் பலனாகத் தற்போது அலிநகர் தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஆர்.ஜே.டி வேட்பாளர் பினோத் மிஸ்ராவை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றி 25 வயதில் இளம் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

2008 ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பிற்குப் பிறகுதான், அலிநகர் சட்டப்பேரவைத் தொகுதி உருவானது. அதன்பிறகு நடந்த 2010 மற்றும் 2015 சட்டப்பேரவைத் தேர்தல்களில் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் மூத்தத் தலைவர் அப்துல் பாரி சித்திக் தொகுதியைக் கைப்பற்றி முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தார். இந்தத் தொகுதியில் இஸ்லாமியர்களுக்கு என்று கனிசமான வாக்குகள் இருக்கின்றன. தனது பிரச்சாரத்தில் குடும்பத்தினரையும் சேர்த்து ஃபோக் பாடல்களைப் பாடி மக்களை ஈர்த்த மைத்திலி எம்.எல்.ஏ. ஆன பிறகு, அலிநகர் என்ற தொகுதியின் பெயரை "சீதாநகர்" என்று மாற்றவேன் என்று கூறியிருந்தார். இந்தச் சூழலில்தான் பாஜக சார்பில் போட்டியிட்ட மைத்திலியின் வெற்றி பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.