Shocking network of Insta guys - police investigation Photograph: (chennai)
போதைப்பொருள் விற்பனை சென்னையில் தலைதூக்கி வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தி வரப்பட்டு ரயில் நிலையங்களில் பிடிபடும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. கஞ்சாவை தாண்டி மெத்தப்பட்டமைன் உள்ளிட்ட உயர் ரக போதைப்பொருட்கள் விற்பனைக்கு குவியும் இடமாகவும் சென்னை உருமாறி வருகிறது.
சென்னையில் போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்காக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் காவல்துறை ஆணையர் ஏ. அருணின் நேரடி மேற்பார்வையின் கீழ் போதைப்பொருள் தடுப்பு புலனாய்வு பிரிவு (ANIU) உருவாக்கப்பட்டது. சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா மற்றும் செயற்கை போதைப்பொருட்கள் குறித்த தகவல்களை ANIU சேகரிக்கிறது. தகவல் கொடுப்போரை பாதுகாக்கும் நடவடிக்கைகளையும் காவல்துறை மேற்கொண்டு வருகிறது. சென்னை மட்டுமல்ல தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த ஜூனில் மணிப்பூரைச் சேர்ந்த ஒரு பெண்ணை தலைமையாக கொண்ட ஒரு பெரிய போதைப்பொருள் கடத்தல் கும்பலை சென்னை நகர காவல்துறை கைது செய்து, அவர்களிடமிருந்து மெத்தபட்டமைன், துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இப்படியாக பல்வேறு மெத்தப்பட்டமைன் கடத்தல் சம்பவங்கள் சென்னையை அவ்வப்போது அதிர்ச்சிக்குள்ளாக்கி வரும் நிலையில் மறுபுறம் மாற்று போதைக்கு அடிமையாகி வரும் இன்ஸ்டா இன்ஃபுளுயன்சர்களின் மாத்திரை விற்பனை என்பது போலீசார் கண்களை உறக்கம் இழக்க வைத்துள்ளது.
அப்படி கொடுங்கையூரில் சிக்கிய இன்ஸ்டா சில்வண்டுகள் மூலம் வெளியான தகவல்கள் பகீர் ரகத்தில் உள்ளன. சென்னை கொடுங்கையூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இளைஞர்கள் சிலர் வலி நிவாரண மாத்திரிகளை அளவுக்கு அதிமாக போதைக்காக பயன்படுத்துவதாகவும் விற்பதாகவும் கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட கொடுங்கையூர் போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் கிருஷ்ணமூர்த்தி நகர், மீனாம்பாள் சாலை பகுதியில் வசித்து வரும் அரவிந்த் என்கிற டோலுவை கைது செய்து விசாரித்தனர்.
இன்ஸ்டா இன்ஃப்ளுவரான அரவிந்த் சமீபத்தில் வந்த 'என் மூச்சவ பேச்சவ' உள்ளிட்ட ட்ரெண்டில் இருக்கும் பல்வேறு பாடல்களுக்கு பெண்களுடன் ரீல்ஸ் வெளியிட்டு அந்த பகுதியில் பிரபலம் போல சுற்றிவந்துள்ளான். இன்ஸ்டா மோகம் தலைக்கேற ஒரு கட்டத்தில் தன் தந்தையின் இறப்பில் உடலைப் பார்த்து தான் கதறி அழும் வீடியோவை ரீல்ஸாக வெளியிட்டு சென்டிமென்ட் டச்களை கொடுத்து வந்துள்ளான். அவ்வப்போது நேர்மை, உண்மை என இன்ஸ்டாவில் கருத்துகளை சொல்லியும் சில்லறைகளை சிதற விட்டுள்ளான். ஆனால் போலீசார் விசாரணையில் அரவிந்தின் உண்மை முகம் தெரிய வந்தது.
அரவிந்தின் வீட்டுக்குச் சென்று போலீசார் சோதனை செய்தபோது வீட்டில் நானூன்றுக்கும் மேற்பட்ட வலி நிவாரணி மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மாற்றுப் போதைக்காக இவை விற்பனைக்கு வைத்திருந்தது தெரிந்தது. தொடர்ந்து அரவிந்திடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் வியாசர்பாடி பி.கல்யாணபுரம் பகுதியில் வசித்து வரும் சஞ்சய் (23) என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து 480 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. சஞ்சய் இடம் நடத்தப்பட்ட விசாரணையில் சங்கிலி போல இந்த நெட்வொர்க் நீண்டு கொண்டே போனது போலீசாருக்கே அதிர்ச்சியை தந்தது.
கொடுங்கையூர் எழில் நகரைச் சேர்ந்த அஜித்குமார் (27) என்ற ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டதில் அஜித்குமார் வீட்டில் 266 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அரவிந்த், சஞ்சய், அஜித்குமார் ஆகியோரிடம் அவ்வப்போது மாத்திரை வாங்க வந்த ரஞ்சித் (23), பிரவீன் (22) என மொத்தம் ஐந்து பேரை கைது செய்தனர். இதில் மாத்திரை விற்பனை ஏஜெண்டாக அரவிந்த் செயல்பட்டது தெரிந்தது.
ஐந்து பேரையும் கொண்டுவந்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் வைத்து நடத்திய விசாரணையில் கண்ணதாசன் நகர் எட்டாவது பிளாக்கில் வசித்து வரும் பீகாரை சேர்ந்த பைசன் அகமது (23) என்ற நபர் சதாம் ஹுசைன் என்பவரோடு அண்மையில் நடந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்றுவிட்டு சென்னைக்கு திரும்பியபோது விற்பனைக்காக 1200 மாத்திரைகளை வாங்கி வந்ததும், அதை அரவிந்த் என்கிற டோலுவிடம் கொடுத்து விற்கச் சொன்னதும் தெரியவந்தது.
மாத்திரைகளை வாங்கிக்கொண்ட அரவிந்த் இன்ஸ்டாவில் தன்னுடன் பழகும் நபர்களிடம் விற்பனை செய்து வந்தது தெரிந்தது. இதில் கைது செய்யப்பட்ட அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ள கொடுங்கையூர் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் இன்ஸ்டா இன்ஃப்ளுவன்சர் அரவிந்த் உடன் இன்ஸ்டாவில் பழகி வந்த பலர் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளனர். அரவிந்துடன் ரீல்ஸ் வெளியிட்ட பெண்களுக்கும் இதில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.
மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் வலிநிவாரண மாத்திரைகளை பயன்படுத்துவது தவறு என்ற நிலையில் அளவுக்கு அதிகமான வலி நிவாரண மாத்திரைகளை பயன்படுத்தினால் போதை நிலை உருவாகும் என்பதை வைத்து பணம் பார்க்க நினைத்த புள்ளிகோ நெட் வொர்க் பிடிபட்ட சம்பவம் சென்னையை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. தொடர் விசாரணை நடைபெற்று வருவதால் நெட்வொர்க்கின் நீளம் அதிகரிக்கலாம் என்கிறது காவல்துறை தரப்பு.
Follow Us