வரி கட்டுபவர்கள் முதல் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் வரை அனைவரின் கடைசி நம்பிக்கையாக நீதிமன்றங்கள் உள்ளன. அவ்வபோது நீதிபதிகள் வழங்கும் தீர்ப்புகளே இந்தியாவில் ஜனநாயகத்தை உயிர்ப்போடு வைத்திருக்கின்றன. ஆனால், சமீப காலமாக நீதித்துறை தனது நிலையிலிருந்து சற்று மாறுபட்டிருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. நாக்பூர், அலகாபாத் உள்ளிட்ட பல உயர் நீதிமன்ற நீதிபதிகள் சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை வழங்கியிருக்கின்றனர். இதனை உச்சநீதிமன்ற நேரடியாக தலையிட்டு கண்டித்த சம்பவங்களும் நடந்துள்ளன.

இந்த நிலையில், பாஜகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த ஆர்த்தி அருண் சாத்தே மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய தலைமை நீதிபதி தலைமையிலான மூத்த நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்றக் கொலீஜியம், நீதிபதிகளை நேர்காணல் செய்து, நீதித்துறை நியமனங்களுக்கான பரிந்துரைகளை மத்திய அரசுக்கு அனுப்புகிறது. அதனை ஏற்று, மத்திய அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டு நீதிபதிகள் நியமிக்கப்படுகின்றனர்.

அந்த வகையில், இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையில் உச்சநீதிமன்றக் கொலீஜியம் ஜூலை 28 அன்று வழக்கறிஞர்களான அஜித் பகவந்த்ராவ் கடேதங்கர், ஆர்த்தி அருண் சாத்தே, மற்றும் சுஷில் மனோகர் கோதேஸ்வர் ஆகிய மூவரை மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைத்து, மத்திய அரசுக்கு அனுப்பியது. இதில் ஆர்த்தி அருண் சாத்தேவின் நியமனமே தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது.

104

Advertisment

மும்பை அரசு சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்ற ஆர்த்தி அருண் சாத்தே, 20 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். அத்துடன், 2023 முதல் 2024 வரை மகாராஷ்டிரா மாநில பாஜகவின் செய்தித் தொடர்பாளராகவும், மும்பை பாஜக சட்டப் பிரிவு தலைவராகவும் இருந்துள்ளார். அதன்பிறகு, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஆர்த்தி அருண் சாத்தே, அனைத்து பதவிகள் உள்பட, பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் ராஜினாமா செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனைச் சுட்டிக்காட்டி, “ஒரு அரசியல் கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்தவர், திடீரென நீதிபதியாகி, பாஜகவிற்கு எதிராக நடுநிலையுடன் எப்படித் தீர்ப்பு வழங்குவார்” என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும், மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் ஹர்ஷவர்தன் சப்கல், “2014 முதல் இந்தியாவில் ஜனநாயகமும் அரசியலமைப்பும் முறையாகப் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அனைத்து தன்னாட்சி நிறுவனங்களும் அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. ஆனால், நீதித்துறையில் இத்தகைய நியமனங்கள் மிகவும் கவலை அளிக்கின்றன,” எனக் காட்டமாக விமர்சித்திருக்கிறார்.

103

Advertisment

அதேசமயம், “எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை” என்று விமர்சித்துள்ள பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் கேசவ் உபாத்யே, “பாஜகவிலிருந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ராஜினாமா செய்த பிறகு ஆர்த்தி சாத்தே உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பரிந்துரைக்கப்பட்டார். தற்போது அவருக்கும் பாஜகவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நீதிபதி பஹாருல் இஸ்லாம் 1962-ஆம் ஆண்டு காங்கிரஸ் வேட்பாளராக மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1968-இல் மீண்டும் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தச் சமயத்தில் காங்கிரஸ் சார்பில் அசாம் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

இதனைத் தொடர்ந்து, 1972-ஆம் ஆண்டு தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து, கவுகாத்தி உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், 1980-ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். பஹாருல் இஸ்லாம் நியமனத்தை போன்றே, ஆர்த்தி சாத்தேவின் நியமனமும் முறையாகச் செய்யப்பட்டுள்ளது,” என்று தெரிவித்திருக்கிறார். இந்த விவகாரம் தற்போது இந்திய அளவில் பெரும் விவாதத்தை கிளப்பியிருக்கிறது.