Advertisment

பொறுப்பற்ற ஆசிரியர்கள்; கண்டுகொள்ளாத கல்வி அலுவலர்கள் - அல்லோலப்படும் அரசுப் பள்ளி!

Untitled-1

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள வெள்ளாரில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், 1100 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். 11 முதுகலை ஆசிரியர்கள் உள்பட 40 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். சுற்றுவட்டார கிராம மக்களின் நம்பிக்கை முகமாக இருந்து வந்த இந்தப்பள்ளி, கடந்த சில ஆண்டாக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டதாக பொதுமக்கள் புலம்புகின்றனர். 

Advertisment

இது தொடர்பாக வெள்ளார் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களிடம் விசாரித்தோம். ''வெள்ளார் சுற்று வட்டாரத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் பெரும்பான்மையாக இருப்பதால், இப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களிடமும் அந்த சமூகத்தின் ஆதிக்க உணர்வு மேலோங்கி இருக்கிறது. 

Advertisment

Untitled-2
சத்யா

வெள்ளார் அரசு மேல்நிலைப்பள்ளியில், வணிகவியல் பாடப்பிரிவில் சத்யா என்ற பெண் ஆசிரியர் பணியாற்றி வருகிறார். இவர், தலைமை ஆசிரியர் முதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வரை யாருக்கும் கட்டுப்படுவதில்லை. கடந்த செப்டம்பர் மாதம் காலாண்டுத் தேர்வு தொடங்குவதற்கு சில நாள்களுக்கு முன்பு, தலைமை ஆசிரியர் ராஜா, மேல்நிலை வகுப்பு மாணவ, மாணவிகளை திறந்த வெளியில் அமர வைத்து தேர்வு தொடர்பான ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருந்தார். 

அந்தநேரத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் கபீர், திடீரென்று பள்ளிக்கு ஆய்வு செய்ய வந்துவிட்டார். எல்லா ஆசிரியர்களும் அவர் முன்பு ஆஜராகி இருந்தபோது, ஆசிரியர் சத்யா மட்டும் தனது வகுப்பறையை விட்டு வெளியே வரவில்லை. ஊழியர்கள் மூலம் அவரை அழைத்த முதன்மைக் கல்வி அலுவலர், உயர்  அதிகாரிகள் வந்தால்கூட நேரில் வர முடியாதோ? என்று கடிந்து கொண்டார். 

அதற்கு ஆசிரியர் சத்யாவோ, 'நீங்கள் வந்திருக்கும் தகவலே எனக்குத் தெரியாது,' என்று அலட்சியமாக பதில் அளித்தார். இதனால் டென்ஷன் ஆன முதன்மைக் கல்வி அலுவலர், 'உங்கள் வகுப்பறையில் மாணவர்களே இல்லாதபோது, அவர்கள் எங்கே போனார்கள், என்ன செய்கிறார்கள்,' என்றாவது விசாரித்திருக்க வேண்டாமா? என்று ஒரு காட்டு காட்டிவிட்டுச் சென்றார்.  

7
பாமக எம்.எல்.ஏ. சதாசிவம்

இதனால் அதிர்ந்து போன ஆசிரியர் சத்யா, சாதி மற்றும் அரசியல் செல்வாக்கு காரணமாக மேட்டூர் பாமக எம்எல்ஏ சதாசிவத்திடம் முறையிட்டார். அவர், உடனடியாக தலைமை ஆசிரியர் ராஜாவை தொடர்பு கொண்டு பேசி, சத்யா மீது நடவடிக்கை பாயாமல் பார்த்துக் கொண்டார். 

ஆசிரியர் சத்யா பயன்படுத்தி வரும் வகுப்பறை கட்டடம் பயன்பாட்டிற்கு உகந்தது அல்ல என்று பொதுப்பணித்துறை சான்று அளித்துள்ளது. ஆனாலும், ஒதுக்குப்புறமாக உள்ள அந்த கட்டடத்திலேயே மாணவர்களை அமர வைத்து பிடிவாதமாக பாடம் நடத்தி வருகிறார். 

உடனடித் தேர்வில் தேர்ச்சி பெற்று, பிளஸ்1 வகுப்பில் சேர வரும் மாணவர்களுக்கு வணிகவியல் பாடப்பிரிவில் சேர்க்கை வழங்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர் சத்யா, தலைமை ஆசிரியரிடம் நேரடியாகவே மோதினார். இதை தலைமை ஆசிரியர் கண்டித்ததால், மயங்கி விழுந்து நாடகமாடினார்,'' என்று ஆசிரியர் சத்யாவை பற்றி புட்டு புட்டு வைத்தனர் சக ஆசிரிய பெருமக்கள். 

Untitled-3
அறிவழகன்

இவர் இப்படி என்றால், ஆங்கில பட்டதாரி ஆசிரியரான அறிவழகன், கற்பித்தல் பணிக்கே லாயக்கற்றவர் என ஒட்டுமொத்தமாக பொங்கி எழுகிறார்கள் ஆசிரியர்கள். 

''ஆசிரியர் அறிவழகன், பணிக்கு வராமல் திடீர் திடீரென்று தலைமறைவாகி விடுவார். முன்னனுமதியின்றி மாதக்கணக்கில் விடுப்பில்தான் இருப்பார். ஆட்சேபனை கிளம்பினால் மட்டும் யாரையாவது ஒரு டாக்டரை பிடித்து உடல்நலம் சரியில்லை என்று சான்றிதழ் பெற்றுக் கொடுத்து விடுவார். 

அவரிடம் நெருங்கிப் போனால் மதுபான வாடை வீசுவதாக ஏற்கனவே மாணவர்கள் புகார் அளித்துள்ளனர். அவருடைய உறவினர்கள் சிலர் காவல்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறையில் முக்கிய பதவிகளில் இருப்பதாலும், இங்குள்ள பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் துறை ரீதியான நடவடிக்கைகளில் இருந்து தப்பித்துக் கொள்கிறார். அவர் பணிக்கு வராத நாள்களில் தற்காலிக ஆசிரியரை வைத்து ஆங்கில பாடங்கள் நடத்தப்படுவதால் மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கிறது. 

சமீபத்தில் பிளஸ்டூ மாணவர் ஒருவர், சக மாணவிகளை செல்போனில் படம் எடுத்தும், அவர்களின் குரலை பதிவு செய்தும் வைத்திருந்தது தெரிய வந்தது. அவனிடம் இருந்த செல்போனை தலைமை ஆசிரியர் பறிமுதல் செய்துவிட்டார். அந்த மாணவன் சார்பாக உள்ளூரைச் சேர்ந்த திமுக, பாமக நிர்வாகிகள், சாதிக்காரர்கள் சிலர் ஹெச்.எம்.மிடம் சமாதானம் பேசி செல்போனை வாங்கிச்சென்று விட்டனர். 

தீபாவளிக்கு சில நாள் முன்பு அதே மாணவன், புத்தகப் பைக்குள் நாட்டு வெடிகளை பதுக்கி வைத்து வகுப்பறைக்குள் எடுத்து வந்திருந்தான். அரசியல் அழுத்தம் காரணமாக மாணவன் மீது ஹெச்.எம். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தப் பள்ளி மாணவர்களுடன், பழைய மாணவர்களும் சேர்ந்து கொண்டு விடுமுறை நாளில் பள்ளிக்குள் புகுந்து பல மின்விசிறிகளை சேதப்படுத்தி விட்டனர். இரவுக்காவலர், தூய்மைப் பணியாளர்கள் இல்லாததால் வெளி ஆள்கள் உள்ளே புகுந்து விடுகின்றனர். பெரும்பாலான ஆசிரியர்கள் தினமும் காலையில் பிரேயருக்கு முன்பாக பள்ளிக்கு வருவதில்லை. உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் நான்கு ஆண்டுக்கு மேலாக காலியாக இருக்கிறது. அதை நிரப்பவும் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. 

எல்லாவற்றிலும் முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஆசிரியர்களே பொறுப்பற்று செயல்படுவதாலும், அரசியல் அழுத்தத்தாலும் பள்ளியின் நிர்வாகப் பணிகள் பாதித்துள்ளது. தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க தலைமை ஆசிரியரும்  அஞ்சுகிறார்,'' என்று புலம்புகின்றனர் நேர்மையான ஆசிரியர்கள். 

4
தலைமை ஆசிரியர் ராஜா

ஆசிரியர்களின் பொறுப்பற்ற செயல்பாடுகள் குறித்து தலைமை ஆசிரியர் ராஜாவிடம் விளக்கம் கேட்டோம். ''முதுகலை ஆசிரியர்களில் வணிகவியல் பாட ஆசிரியர் சத்யா மட்டும்தான் பள்ளி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பதில்லை. மற்ற ஆசிரியர்களுடன் சகஜமாக இருக்க மாட்டார். அவருக்கு ஏதேனும் தாழ்வு மனப்பான்மையாக இருக்கலாம். ஆசிரியர் சத்யா மீதும், பணிக்குச் சரவர வராமல் அடிக்கடி விடுப்பில் சென்றுவிடும் ஆசிரியர் அறிவழகன் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி முதன்மைக் கல்வி அலுவலரிடம் புகார் அளித்துள்ளேன். மாவட்டக் கல்வி அலுவலர் இதுகுறித்து ஒருமுறை விசாரித்துவிட்டுப் போனார்,'' என்கிறார் தலைமை ஆசிரியர் ராஜா. 

பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஞானவேல் நம்மிடம் கூறும்போது, ''ஆசிரியர்கள் சத்யா, அறிவழகன் மற்றும் நிர்வாகத்திற்கு ஒத்துழைக்காத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக பி.டி.ஏ., கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறோம்,'' என்றார்.   

5
கபீர்

வெள்ளார் பள்ளி விவகாரம் குறித்து சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கபீரிடம் கேட்டபோது, ''உடனடியாக அந்தப் பள்ளியில் நேரில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கிறேன். ஏற்கனவே ஒருமுறை வெள்ளார் பள்ளியில் ஆய்வு செய்தபோது ஆசிரியர் சத்யா பணிக்கு தாமதமாக வந்திருந்தார். அவரை எச்சரிக்கை செய்தேன்,'' என்றார். 

இந்தப் பள்ளியில் நடக்கும் கூத்துகள், ஆசிரியர்களின் பொறுப்பற்றச் செயல்கள் குறித்து பலமுறை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் புகார்கள் சென்றுள்ளன. ஆனால் நாம் சொல்லித்தான் பள்ளியில் இத்தனை குறைபாடுகள் இருப்பது போல பேசினார் முதன்மைக் கல்வி அலுவலர். விரைவில் அவர் இடமாறுதல் உத்தரவை எதிர்பார்த்து இருப்பதால் பட்டும்படாமலும் பேசுவதாகச் சொல்கிறார்கள் பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள். 

கல்விக்கூடத்திற்குள் சாதியையும், அரசியலையும் புகுத்தும் ஒழுங்கீனமான ஆசிரியர்களால் சமூகத்திற்கும், மாணவர்களுக்கும் எவ்வாறு 'ரோல் மாடல்' ஆக இருக்க முடியும்? என கேள்வி எழுப்புகிறார்கள் நடுநிலையான ஆசிரியர்கள்.  

students govt school Salem
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe