அமெரிக்காவைச் சேர்ந்தவர் 71 வயதான பெண்மணி, இந்திய வம்சாவளியான ரூபிந்தர் கவுர் பாந்தர். இவருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமான நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று சியாட்டிலில் (Seattle) தனியாக வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் தான் ரூபிந்தர் கவுருக்கு, இணையதளம் வழியாக வெளிநாடு வாழ் இந்தியரான, இங்கிலாந்தில் வசித்து வரும் 75 வயதான சரஞ்சித் சிங் க்ரூவால் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. சரஞ்சித் சிங் க்ரூவாலும் மனைவியுடன் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்ததால், இருவருக்கிடையேயான பழக்கம் பின்னாளில் காதலாகவும் மாறியிருக்கிறது.

Advertisment

இதனைத் தொடர்ந்து சரஞ்சித் சிங் க்ரூவால் அமெரிக்காவுக்கு சென்று ரூபிந்தர் கவுரை நேரில் சந்தித்துள்ளார். பின்னர் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து தங்களது காதலை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். இருவரும் திருமணம் செய்துகொண்டு தங்களது புது வாழ்க்கையைத் தொடங்க திட்டமிட்டனர். அதன்படி, சரஞ்சித் சிங் க்ரூவால் திருமணத்தை தனது பூர்வீகக் கிராமமான பஞ்சாபின் கீளா ரைபூரில் நடத்தலாம் என்று கூறியிருக்கிறார். வருங்கால காதல் கணவர் கூறியதற்கு ரூபிந்தர் கவுர் சம்மதம் தெரிவித்திருக்கிறார். அதற்கான ஒரு பெரும் தொகையையும் ரூபிந்தர் கவுர் சரஞ்சித் சிங் க்ரூவாலிடம் கொடுத்துள்ளார்.

இதையடுத்து தனது சொந்த கிராமத்திற்கு வந்த சரஞ்சித் சிங் க்ரூவால் அடுத்த கட்ட வேலையைக் கவனித்து வந்திருக்கிறார். இந்த நிலையில் தான் ரூபிந்தர் கவுர், தனது காதலன் சரஞ்சித் சிங் க்ரூவாலை கரம் பிடிக்கும் ஆசையோடு, அமெரிக்காவிலிருந்து கடந்த ஜூலை மாதத் தொடக்கத்தில் இந்தியா வந்திருக்கிறார். ஆனால் அதன்பிறகு அவரிடமிருந்து எந்தத் தகவலும் அவரது குடும்பத்தினருக்குத் தெரியவில்லை. இதனால் சந்தேகமடைந்த ரூபிந்தர் கவுரின் மூத்த சகோதரி கமல் கவுர், அவரது எண்ணுக்கு தொடர்பு கொண்டிருக்கிறார். ஆனால், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதையடுத்து,  ஜூலை 24 ஆம் தேதி அவரது மூத்த சகோதரி கமல் கவுர் டெல்லியில் உள்ள அமெரிக்க எம்பஸிக்கு  இது குறித்து புகார் செய்திருக்கிறார். அதன்பேரில் லுதியான போலீஸுக்கு தகவல்  தெரிவிக்கப்பட்டு ரூபிந்தர் கவுரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் சரஞ்சித் சிங் கிரேவாலிடம் விசாரணை நடத்தியபோது முன்னுக்கு பின்னாக பதிலளித்திருக்கிறார். அதன்பிறகு அவரது செல்போன் என்னை சோதித்தபோது,  சுக்ஜீத் சிங் சோனு என்பவருக்கு அடிக்கடி போன் செய்திருப்பது தெரியவந்தது. அவர் சரஞ்சித் சிங் கிரவோலின் நண்பர் என்றும், லூதியான நீதிமன்றத்தில் டைபிஸ்டாக(Typist) வேலை பார்த்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சோனுவை அழைத்து போலீசார் விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்களும் அதிர்ச்சிகரமான உண்மையும் வெளிவந்திருக்கிறது. சரஞ்சித் சிங் க்ரூவால் திருமண ஆசைகாட்டி ரூபிந்தர் கவுரிடம் அதிகளவில் பணத்தைக் கரந்திருக்கிறார். மேலும், அவரிடமிருக்கும் மொத்தப் பணத்தையும் சுருட்டிக்கொள்வதற்கான திட்டத்தைத் தீட்டி, திருமணம் செய்துகொள்வதற்காக ரூபிந்தர் கவுரை இந்தியாவுக்கு வரவழைத்துள்ளார். அதன்பேரில் இந்தியா வந்த அவரை, சரஞ்சித் சிங், நண்பர் சோனுவின் வீட்டில் தங்கவைத்துள்ளார். பின்னர் ரூபிந்தர் கவுரைத் தீர்த்துக்கட்டிவிட்டு அவரின் மொத்தப் பணத்தையும் அபகரிக்கத் திட்டமிட்டிருக்கிறார்.

Advertisment

அதன்படி, சோனுவிடம் ரூ.50 லட்சம் கொடுத்த அவர், ரூபிந்தர் கவுரை உன் வீட்டில் வைத்துக் கொலை செய்துவிடு; அப்படிச் செய்தால் உனக்கு வெளிநாட்டில் சொகுசு வாழ்க்கை ஏற்பாடு செய்து தருகிறேன் என்று பேரம் பேசியிருக்கிறார். அதில் மயங்கிய சோனு, ரூபிந்தர் கவுரை வீட்டில் வைத்து பேஸ்பால் பேட்டால் (baseball bat) அடித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் அங்கேயே அவரது உடலை எரித்து, சாம்பலையும் எலும்புக் கூட்டையும் கிராமத்தில் உள்ள வடிகாலில் வீசியுள்ளார் என்று ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து, சோனுவைக் கைது செய்த போலீசார், வடிகாலுக்குச் சென்று ரூபிந்தர் கவுரின் எலும்புக் கூட்டைக் கைப்பற்றி தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் சரஞ்சித் சிங் க்ரூவாலை லுதியானா போலீசார் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 

காதலிப்பதாகக் கூறி அமெரிக்காவிலிருந்து  71 வயது பெண்ணை பஞ்சாபிற்கு வரவழைத்து கொடூரமாகக் கொன்று எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.