ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தின் பாஜக மாநிலத் தலைவராக ராஜீவ் பிந்தல் பொறுப்பு வகித்து வருகிறார். அவரது மூத்த சகோதரர், 80 வயதான ராம்குமார் பிந்தல், சோலன் மாவட்டத்தில் பிரபலமான ஆயுர்வேத மருத்துவராக அறியப்படுகிறார். இவர் தனியாக ஒரு கிளினிக் வைத்து மக்களுக்கு வைத்தியம் பார்த்து வருகிறார். இவரது பிள்ளைகளுக்கு திருமணமாகி, பேரக்குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், சிகிச்சை அளிப்பதாகக் கூறி, 80 வயதான ராம்குமார் ஒரு இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. நீண்ட வருடங்களாக ஒரு நோயால் பாதிக்கப்பட்டு வந்த அந்த பெண், மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்துள்ளார். ஆனால், அவருக்கு அந்த நோய் குணமாகவில்லை. அதனால், ஆயுர்வேத மருத்துவத்தின் மூலம் தனது நோய்க்கான சிகிச்சையைப் பெற முடிவு செய்துள்ளார். இதையடுத்து, அந்த பெண் அக்டோபர் 7 ஆம் தேதி ராம்குமாரின் கிளினிக்கிற்கு சென்றுள்ளார். நோய் குறித்து கேட்டறிந்த ராம்குமார், பெண்ணின் உடலைத் தொட்டு, பாலியல் பிரச்சனைகள் தொடர்பான கேள்விகளைக் கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்தப் பெண் பதிலளிக்க மறுத்துள்ளார். இருப்பினும், “நான் கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள் அளிக்கும் பதிலை வைத்துதான் நோய்க்கான சிகிச்சையை அளிக்க முடியும்” என்று கூறியிருக்கிறார். பின்னர், மருத்துவர் ராம்குமார் அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து பாதிக்கப்பட்ட பெண், மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், ராம்குமார் பிந்தல் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார், அக்டோபர் 8 ஆம் தேதி அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் ராஜீவ் பிந்தல் கூறுகையில், “இந்த வழக்கு அரசியல் ரீதியாக நோக்கம் கொண்டது. இது சதித்திட்டத்தின் ஒரு பகுதி. எனது சகோதரர் மாநிலத்தில் மிகவும் மதிக்கப்படும் ஆயுர்வேத மருத்துவர். அவருக்கு பேரக்குழந்தைகள் உள்ளனர். அவர்களில் ஒருவர் ஐபிஎஸ் அதிகாரியாக உள்ளார். குற்றச்சாட்டுகள் எங்கள் குடும்பத்திற்கு மிகவும் தொந்தரவாக உள்ளன. காவல்துறை அவசரமாகச் செயல்பட்டது. சில குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர் எப்படி கைது செய்யப்பட்டார் என்பது எனக்குப் புரியவில்லை” என்று கூறினார். மேலும், பாஜக தரப்பில், “ராம்குமார் சனாதன தர்மத்தை வலுப்படுத்தியவர்; இது அரசியல் சதி” என்று கூறி, காங்கிரஸ் மற்றும் சிபிஎம் கட்சிகளைக் குற்றம் சாட்டியுள்ளது.
இதனை மறுத்துள்ள எதிர்க்கட்சியினர், “இது பாஜகவின் இரட்டைத் தரம்; பாதிக்கப்பட்டவருக்கு அச்சுறுத்தல்கள் உள்ளன, அவருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். வழக்கு முடிவடையும் வரை பிந்தல் பதவியில் இருக்கக் கூடாது” என்று கூறியுள்ளனர். இது குறித்து பேசிய மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகூ, “சட்டம் தனது பாதையில் இயங்குகிறது; அரசு நடுநிலையுடன் செயல்படும்” என்று விளக்கமளித்துள்ளார்.
பாஜக மாநிலத் தலைவரின் மூத்த சகோதரர் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் அரசியல் புயலை ஏற்படுத்தியுள்ளது.