தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் புதிதாகக் கட்சி ஆரம்பித்து இந்தத் தேர்தலில் முதல் முறையாகக் களமிறங்க உள்ளார். இதனால், சட்டமன்றத் தேர்தலுக்கான களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் தான் சென்னை பட்டனபாக்கத்தில் உள்ள த.வெ.க. தலைவர் விஜய்யின் வீட்டில், காங்கிரஸ் கட்சியின் தரவு மேலாண்மை மற்றும் வல்லுநர் குழுவின் தலைவரான பிரவீன் சக்கரவர்த்தி, விஜய்யை நேற்று (05.12.2025) சந்தித்துப் பேசிய கூறப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மிக முக்கியமான ஒரு பொறுப்பில் இருப்பவரும், அக்கட்சியின் முக்கியத் தலைவரான ராகுல் காந்திக்கு மிக நெருக்கமாக இருக்கக்கூடிய நபர்களில் ஒருவருமான பிரவீன் சக்கரவர்த்தி த.வெ.க. தலைவர் விஜய்யை சந்தித்து பேசியது தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
முன்னதாக காங்கிரஸ் கட்சி, தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என தன்னுடைய விருப்பத்தை பல்வேறு தருணங்களில் பிரவீன் சக்கரவர்த்தி வெளிப்படுத்தி இருந்ததும் கவனிக்கத்தக்கது. அதே சமயம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பருந்தகையிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் , அதெல்லாம் எனக்குத் தெரியாது” எனப் பதிலளித்திருந்தார். இந்நிலையில் யார் இந்த பிரவின் சக்கரவர்த்தி என மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. அதற்கு பதிலாக பின்வருவதை காண்போம். தமிழகத்தைச் சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி ராஜஸ்தானில் உள்ள பிட்ஸ் பிலானிஎன்ற கல்வி நிறுவனத்தில் பொறியியல் பட்டம் பெற்றார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/06/praveen-chakravarthy-2025-12-06-15-35-46.jpg)
அதனைத் தொடர்ந்து பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்ட்டன் ஸ்கூலில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றார். அதன் பின்னர் ஐபிஎம், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட சர்வதேச அளவிலான உயர் நிறுவனங்களிலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் ஆவார். ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்திக்குக் கட்சி தொடர்பாக ஆலோசனை அளித்துக் கொண்டிருந்தார் பிரவீண் சக்கரவர்த்தி. இத்தகைய சூழலில் தான் கடந்த 2017ஆம் ஆண்டு முழுநேர அரசியல்வாதியாகக் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதன் தொடர்ச்சியாகக் காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தொழில்நுட்ப பிரிவு தலைவராகப் பதவி வகித்து வருகிறார்.
அதோடு அக்கட்சியின் தரவு பகுப்பாய்வு துறைத் தலைவராகவும் உள்ளார். இதன் மூலம் கட்சியின் முக்கிய திட்டங்கள் குறித்து ஆலோசனை தருவது, அக்கட்சி சந்தித்த தேர்தலில் கிடைத்த முடிவுகளைக் கொண்டு அதற்கான காரணங்களை ஆராய்ந்து அறிக்கை அளிப்பதை இவரது குழுவினர் செய்து வருகின்றனர். அதே சமயம் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் மீது ராகுல் காந்தி, வைக்கும் குற்றச்சாட்டுகளுக்குத் தேவையான தகவல்களைத் திரட்டி அறிக்கையாக அளித்து வருவது இவரது குழுவின் பணியாகும். சமீபத்தில் பீகார், மகாராஷ்டிரா, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் ஓட்டுத் திருட்டு நடைபெற்றதாகக் கூற குற்றச்சாட்டுகளை முன் வைத்ததற்கும் மூளையாகச் செயல்பட்டவர் பிரவீண் சக்கரவர்த்தி ஆவார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/06/praveen-chakravarthy-1-2025-12-06-15-36-02.jpg)
எனவே இவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ள ராகுல் காந்தி, பிரவீன் சக்கரவர்த்தியை டேட்டா மேன் என்றே அழைப்பதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக கடந்த 2009ஆம் ஆண்டும் அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங் அரசின் சிறப்பு செயலாக்கத் திட்டங்களில் பங்கேற்றபோது தேசிய அளவில் கவனம் ஈர்த்தார். இவரது தேசிய மற்றும் சர்வதேச அளவிலான பொருளாதார அறிவும், தரவு அறிவியலில் உள்ள நிபுணத்துவமும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களோடு மேலும் நெருங்கி பழகும் வாய்ப்பு உண்டானது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/06/rahul-praveen-chakaravarthi-manmohan-2025-12-06-15-33-03.jpg)