நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சீன ஊடுருவல், எப்ஸ்டீன் பைல்ஸ் உள்ளிட்டவற்றை குறித்து பேச முயன்றார். ஆனால் இது குறித்து பேச அவருக்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மாணிக்கம் தாக்கூர் உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் மேசை மீது ஏறி பேப்பர்களை கிழித்து அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து மாணிக்கம் தாக்கூர், சு. வெங்கடேசன் உள்ளிட்ட 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

Advertisment

இந்தநிலையில் மக்களவைத் தொடங்குவதற்கு முன்பு சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் மாகர் துவார் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுக்கு ஆதரவாக ராகுல் காந்தியும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தார். அப்போது அந்த வழியாக மத்திய ரயில்வே துறை மற்றும் உணவு பதப்படுத்துதல் துறை இணை அமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டு நாடாளுமன்றத்திற்கு வந்தார். உடனடியாக ராகுல் காந்தி அவரை சுட்டிக்காட்டி, “இதோ ஒரு துரோகி போய்க்கொண்டிருக்கிறார்... முகத்தைப் பாருங்கள்... வா என் துரோகி நண்பா” என்று கூறி கை கொடுக்க முயன்றார். மேலும், “கவலைப்படாதே, நீ மீண்டும் காங்கிரஸுக்குத் திரும்பி வந்துவிடுவாய்” என்றும் கூறியுள்ளார்.

Advertisment

ஆனால் இணை அமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டு ராகுல் காந்தியுடன் கை குலுக்க மறுத்துவிட்டார். மேலும் “நீங்கள் நாட்டின் எதிரி” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் இருந்த பஞ்சாபைச் சேர்ந்த ரவ்நீத் சிங் பிட்டு, 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார். பின்னர் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தற்போது இணை அமைச்சராகப் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் தான் ராகுல் காந்தி அவரை “துரோகி” என்று கிண்டல் செய்தது பாஜகவினரிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment
257
Rahul's single word that increased opposition - tension in Parliament Photograph: (politics)

மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்ட சீக்கிய தலைவர்கள் செய்தியாளர்களிடம், “ராகுல் காந்தியின் இந்த வார்த்தை முழு சீக்கிய சமூகத்தையும் புண்படுத்தியுள்ளது. ‘துரோகி’ என்ற சொல் நாட்டுக்கு துரோகம் செய்தவர்களுக்குத்தான் பயன்படுத்தப்படும். சீக்கியர்கள் நாட்டிற்காக ரத்தம் சிந்தியவர்கள். இது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று கூறியுள்ளனர்.

பஞ்சாபின் முன்னாள் முதல்வராக இருந்த ரவ்நீத் சிங் பிட்டுவின் தாத்தா பீரந்தர் சிங்கின் உயிர்த் தியாகத்தை சுட்டிக்காட்டிய பாஜக தலைவர்கள், ராகுல் காந்தி மீது மக்களவைத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். மேலும் இது தொடர்பாக டெல்லி பாஜக தலைவர் விரேந்திர சச்சுதேவா உள்ளிட்டோர் காங்கிரஸ் தலைமையகத்திற்கு முன் போராட்டம் நடத்தினர்.

ராகுல் காந்தியின் இந்தக் கருத்து சீக்கிய சமூகத்தின் மீதான வெறுப்பை வெளிப்படுத்துவதாகவும், அரசியல் விவாதத்தில் இத்தகைய மொழி ஏற்கத்தக்கதல்ல என்றும் பாஜக தரப்பில் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது. இதனால் நாடாளுமன்றத்தில் அடுத்தடுத்து அரசியல் பதற்றம் அதிகரித்துள்ளது.