காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி, பா.ஜ.கவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் வாக்குச் சூறையாடலில் ஈடுபட்டதாகத் தொடர்ந்து கடும் குற்றம் சாட்டி வருகிறார். 2024 மக்களவைத் தேர்தல், 2024 மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல், 2023 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றில் தேர்தல் ஆணையம் பா.ஜ.கவுக்கு சாதகமாக முறைகேடு செய்ததாக அவர் கூறிவருகிறார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தின. தேர்தல் ஆணையம் உடனடியாக மறுப்பு தெரிவித்தது. ராகுல் காந்தி தனது குற்றச்சாட்டுகளுக்கு பிரமாணப் பத்திரம் அளிக்க வேண்டும் அல்லது பொதுமக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என்று தெரிவித்தது. ஆனால், தனது குற்றச்சாட்டில் இருந்து பின்வாங்காத ராகுல் காந்தி, தற்போது மகாராஷ்டிரா, கர்நாடகாவைப் போலவே ஹரியானா மாநிலத்திலும் தேர்தல் ஆணையம் வாக்கு மோசடியில் ஈடுபட்டிருப்பதாக அடுத்த குண்டை வீசியிருக்கிறார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஹரியானா சட்டமன்றத் தேர்தலில், 2 கோடி வாக்காளர்களில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டிருப்பதாகவும், பதிவான ஓட்டுகளில் 8 இல் ஒரு ஓட்டு கள்ள ஓட்டு என்றும் குற்றம்சாட்டி ஆதாரங்களை வெளியிட்டுள்ளார். மேலும், 1.24 லட்சம் வாக்காளர்களுக்கு போலி புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அதிலும் குறிப்பாக, ஒரு பெண் 10 வாக்குச்சாவடிகளில் 22 முறை வாக்களித்திருக்கிறார். அந்தப் பெண் ஹரியானாவைச் சேர்ந்தவரோ, பீகாரைச் சேர்ந்தவரோ, உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவரோ கிடையாது. அவர் பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் லாரிசா. அவரது புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையில் சீமா, ஸ்வீட்டி, சரஸ்வதி என்று 22 வெவ்வேறு பெயர்கள் இருக்கின்றன என்று ஆதாரத்துடன் எடுத்துக்கூறி அரங்கையே அதிரவைத்தார் ராகுல் காந்தி.
இது இந்தியாவைத் தாண்டி உலகளவில் பேசுப்பொருளாக மாறியுள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலானதையடுத்து, பிரேசில் மாடல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில், “இது எனது 18-20 வயதில் எடுத்த பழைய புகைப்படம். இந்தியத் தேர்தலில் என்னை இந்தியப் பெண்ணாகக் காட்டி மோசடி செய்திருக்கிறார்களா? இது என்ன பைத்தியக்காரத்தனம்!” என்று அதிர்ச்சியுடனும் நகைப்புடனும் பேசியிருக்கிறார். தற்போது மாடலிங்கை விட்டு, பிரேசிலின் பெலோ ஒரிசோன்டேயில் முடி அலங்கார நிபுணராக இருந்து வரும் லாரிசா இந்தியாவுக்கு ஒருமுறைகூட வந்ததில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் நம்பும்படியாகவே இருக்கின்றன. கர்நாடகாவின் சிக்பள்ளாப்பூர் தொகுதியில் ஒரே வீட்டில் 294 வாக்காளர்கள் இருந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், அங்கு ஆய்வு செய்தபோது வெறும் 4 பேர் மட்டுமே இருந்தனர். இந்த உண்மை நிலையை வீடியோ, புகைப்படங்கள் மற்றும் உள்ளூர் மக்களின் சாட்சியம் மூலம் நவம்பர் மாதம் ராகுல் காந்தி வெளிப்படுத்தியிருந்தார்.
இதேபோல ஹரியானாவில் ஒரே வீட்டில் 501 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. மகாராஷ்டிராவிலும் இதே வகை முறைகேடுகள் கண்டறியப்பட்டன. மூன்று மாநிலங்களிலும் ஒரே மாதிரியான மோசடி முறை, ஒரே வீட்டில் நூற்றுக்கணக்கான பெயர்கள், போலி புகைப்படங்கள், செல்லாத முகவரிகள்... என்பது தற்செயலான நிகழ்வு அல்ல, திட்டமிட்ட வாக்குச் சூறையாடல் நடந்திருப்பதை உறுதிப்படுத்துகிறது. குறிப்பாக ஹரியானாவில் பிரேசில் மாடல் லாரிசா நெரியின் புகைப்படம் 22 வெவ்வேறு பெயர்களில் பயன்படுத்தப்பட்டது தொழில்நுட்ப மோசடியின் உச்சத்தை வெளிப்படுத்துகிறது. இது இந்திய ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்டுள்ள மிகப்பெரிய தாக்குதல். ஆகையால் உடனடியாக உச்ச நீதிமன்றம் தலையிட்டு முழு ஆய்வு நடத்தினால் மட்டுமே தீர்வு கிடைக்கும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/06/4-2025-11-06-18-23-47.jpg)