கர்நாடகாவின் தலைநகர் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை என்பது இந்தியாவின் மிகவும் பிரபலமான உயர் பாதுகாப்பு சிறைகளில் ஒன்று. இது 5,500-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகளை அடைத்து வைக்கும் திறன் கொண்டது. கொலை வழக்கு முதல் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் வரை அனைத்துத் தரப்புக் குற்றவாளிகளும் இந்தச் சிறையில்தான் அடைக்கப்பட்டிருக்கின்றனர். இப்படி உயர் பாதுகாப்பிற்குப் பெயர்போன பரப்பன அக்ரஹாரா சிறை கடந்த பல ஆண்டுகளாக பல சர்ச்சைகளைச் சந்தித்து வருகிறது.
சிறையில் செல்போன்கள், டிவி, சமைக்கும் வசதி, பிறந்தநாள் கொண்டாட்டங்கள், கலர் உடைகள், கட்டில், மெத்தை, சிகரெட்..மது என சகல வசதிகளுடன் ஜாலியாக இருப்பதாக தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. அதற்கான காரணமான வீடியோ ஆதாரங்களும் அவ்வப்போது வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஊழல் வழக்கில் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா ஷாப்பிங் சென்றது, ரவுடி நாகராஜ் சிறை அதிகாரிகளைப் பணம் கொடுத்து தனது அறையைச் சொகுசு அறையாக மாற்றியது என்று அடுத்தடுத்த அதிகார அத்துமீறல்கள் நடந்தன. அதன்பிறகு மாநில அரசும் சிறை அதிகாரிகளை மாற்றுவது போன்ற உத்தரவுகள் பிறப்பித்தும் வந்தது. ஆனால், இதுபோன்ற சம்பவங்கள் குறைந்தபாடியில்லை. இன்றும் தொடர்வதை உறுதிப்படுத்தும் வகையில் அடுத்தடுத்த போட்டோ, வீடியோ ஆதாரங்கள் வெளியாகி தற்போது கர்நாடக அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியிருக்கின்றன.
20 பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 18 வழக்குகளில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு கடுங்காவல் தண்டனை அனுபவித்து வரும் உமேஷ் ரெட்டி, சிறையில் இரு ஸ்மார்ட்போன்களை வைத்துக்கொண்டு அமர்ந்திருக்கும் வீடியோ வெளியாகியிருக்கிறது. இதனிடையே, ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதியான ஜூகைப் ஹமீத் ஷகீலுக்கு சிறையில் சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவரும் செல்போனில் பேசியபடி சிறைக்குள் சுற்றித்திரியும் வீடியோக்களும் வெளியாகியிருக்கின்றன. அதேபோன்று, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நடிகை ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய தருண் ராஜு செல்போன் பேசுவதும், அறையில் சமைப்பது போன்ற வீடியோவும் வைரலாகி வருகிறது.
நாட்டின் உயர் பாதுகாப்பு கொண்ட சிறையில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது, உண்மையில் இது சிறைதானா இல்லை சொகுசு விடுதியா என்ற கேள்வியை எழுப்புகிறது. தவறு செய்வோரைத் திருத்தும் நோக்குடன் நீதிமன்றம் சிறைக்கு அனுப்புகிறது. ஆனால், அவர்கள் பணம் மற்றும் அதிகாரத்தின் மூலம் கறைபடிந்த சிறை அதிகாரிகளைக் கையில் போட்டுக்கொண்டு சகல வசதிகளுடனும் கூத்தும் கும்மாளமுமாகக் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர். அதிலும் சிறையில் இருக்கும் ஐஎஸ் பயங்கரவாதி கையில் செல்போன்களை வைத்துக்கொண்டு எந்தவிதப் பயமுமின்றிப் போன் பேசியபடி சிறைக்குள் சுற்றித்திரிவது தேசிய பாதுகாப்பிற்கே ஆபத்து. ஆகையால் அரசு தீவிரமாக செயபட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருக்கிறது.
Follow Us