உலக வரலாற்றை தோண்டிப் பார்க்கும் போது மக்களின் பண்பாடு, கலாச்சாரம், பழக்கவழக்கம், நாகரீகம், எழுத்தறிவு எல்லாமே ஆழத்தில் இருந்து சான்றாக கிடைப்பது சுடு களிமண் பாண்டங்கள் தான். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நமது மக்கள் பயன்படுத்திய பாத்திரங்கள் களி மண்ணால் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை இன்றும் நம்மால காணமுடிகிறது. எத்தனையோ உலோகங்கள் மண்ணில் மக்கிப் போனாலும் கூட மண்பாண்டங்கள் அப்படியே இருக்கிறது. சங்க இலக்கியங்களும் மண்பாண்டங்களை பற்றி பேசி இருக்கிறது. 

Advertisment

எழுத்தறிவுக்கு முன்பே ஒரு செய்தியை சொல்ல மண்பாண்டங்களில் குறியீடுகளை பயன்படுத்தியுள்ளதும் பிற்கு எழுத்து பொறிப்புகளில் தங்கள் பெயர்களை பொறித்து வைத்துள்ளனர். இந்த மண்பாண்ட கலைஞர்கள் கலைநயமிக்கவர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். ஒரு இடத்தில் கிடைக்கும் அதே வடிவம், கலைநயம் தூரத்தில் மற்றொரு இடத்திலும் கிடைத்திருக்கிறது.கீழடியில் கிடைத்துள்ள லட்சக்கணக்கான பானை ஓடுகளும் அதில் உள்ள தமிழ் எழுத்துக்களும் தமிழர்களின் நீண்ட நெடிய வரலாற்றையும் நாகரீகத்தையும், எழுத்தறிவையும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. 

pdu-pot1

நீர்நிலைகளில் களிமண்ணை கைகளால் கொஞ்சம் கொஞ்சமாக சுரண்டி அள்ளி வந்து உடைத்து பவுடராக்கி காயவைத்து பிறகு தண்ணீர் ஊற்றி பிசைந்து சலிக்க வைத்து உறுதித்தன்மைக்கா நெல் உமி சேர்த்து செய்ய வேண்டிய பாண்டத்தை மனதில் நிறுத்தி கற்பனையிலேயே உருவத்தை கொண்டு வந்து முழுவதுமாக செய்து முடியும் போது இத்துடன் முடிந்து விடாது பச்சை மண் பாண்டத்தை சூலையில் வைத்து பழைய பானைகளை அடுக்கி இடைஇடையே புது பாண்டங்களும், விறகும் வைத்து பதமாக வேகவைத்த பாண்டத்தை முழுமையாக வெளியே எடுக்கும் போது தான் நிம்மதி பெருமூச்சு வரும் கலைஞர்களுக்கு. இப்படி பல ஆயிரம் ஆண்டுகளாக அழியாத களிமண் பாண்டங்களுக்கும் தற்போது ஆபத்து வரத் தொடங்கிவிட்டது என்ற வேதனையை வெளிப்புத்துகிறார் மண்பாட்ட கலைஞர் துவரடிமனை சங்கர். 

Advertisment

pdu-pot2

மேலும் அவர், “முன்பு குளத்தில் மண் எடுத்து வருவோம். உமி சேர்த்து பிசைந்து பானை, சாமி சிலைகள் செய்வோம். சூளையில் வைத்து வேகவைத்து மக்களிடம் கொடுத்துவிடுவோம். தானிய குதிர்கள் செய்வோம். அதே போல ஒவ்வொரு ஆண்டும் அய்யனார் கோயில்களுக்கு குதிரை, காளை, நாய் பொம்மைகள் சாமி சிலைகள் செய்து கொடுப்பது வழக்கம். ஒரு ஊரில் அய்யனார் கோயில் குதிரை எடுப்பு தேதி குறிப்பிட்டதும் எங்களிடம் வந்து இத்தனை குதிரை, காளை, சாமி சிலைகள் வேண்டும் என்று சொல்லி முன் பணம் கொடுப்பார்கள். அதன் பிறகு விரதம் இருந்து வேலை செய்வோம். குறிப்பிட்ட நாளில் கொடுத்துவிடுவோம். அப்ப நாங்க செஞ்ச களிமண் சிலைகள் பல நூறு வருடங்களாக இன்றும் உறுதியாக உள்ளது. 

ஆனால் இப்ப அந்த உறுதித் தன்மை குறைந்து போச்சுங்க என்றவர், முன்பு விவசாயத்தில் இயற்கை உரங்களை பயன்படுத்தினாங்க மண் தரமாக இருந்தது. ஆனால் ரசாயன உரங்கள் விவசாயத்தில் நுழைந்ததும் மண்ணும் கெட்டுப் போய் உறுதி இலல்லாமல் போச்சு. ஒரு குதிரை சிலை ஆர்டருக்கு 6, 7 குதிரை சிலை செஞ்சு சூளையில வேக வைத்தால் தான் ஒன்று தேரும். பாக்கி எல்லாம் உடைஞ்சு நாசமாப் போகுது. இந்தாப் பாருங்க எத்தைனை சிலைகள் ஒரு சூளையில் சிதைந்து கிடக்குதுன்னு. போன மாதம் ஒரு கோயிலுக்கு செஞ்ச 8, 9 குதிரைகளும் சேதமடைந்ததால ஊர் ஊராக தேடி அதே அளவில் உள்ள குதிரை தலையை வாங்கி வந்து நல்லபடியாக கொடுக்கிறதுக்குள்ள ரொம்ப அவதிப்பட்டோம். ரசாயன கலப்புகளை குறைத்தால் தான் நாம் மண்ணை காப்பாற்றலாம்” என்றார். 

Advertisment

pdu-pot3

மேலும், பல்வேறு உலோக பொருட்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டதால் மண்பாண்ட கலைஞர்களின் எண்ணிக்கையும் குறையும் நிலை வந்துவிட்டது. ஆனால் களிமண் சிலைகளை ரசிப்போர் இன்னும் உலகமெங்கும் இருக்கிறார்கள். அவர்களுக்காக தமிழக மண்பாண்ட கலைஞர்கள் பல நாடுகளுக்கும் சென்று களிமண் சிலைகளை கலை நயத்தோடு செய்து கொடுத்துக் கொண்டு தான் உள்ளனர். அதே நேரத்தில் இந்த கலைஞர்களுக்கு தேவையான இயந்திர உபகரணங்களை அரசு மானியத்தில் வழங்கினால் அழிவின் விழிம்பில் உள்ள மண்பாண்ட கலையை காப்பாற்றலாம். பண்டைய வரலாறு பேசும் மண்பாண்டங்களுக்கும் ரசாயன உரங்களால் ஆபத்து வந்துவிட்டது வரும் காலங்களில் பேராபத்துக்கு வழிவகுக்குமோ என்ற நிலை உள்ளது.