16 வயது சிறுமியை ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக சொந்த சித்தப்பாவே வன்கொடுமை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது குறித்த புகாரை காவல் ஆய்வாளர் உதாசீனப்படுத்தியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நமது நக்கீரன் அலுவலகத்திற்கு  சில தினக்களுக்கு முன்பு ஒரு நாள் காலை 10 மணியளவில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில், பெயர் கூற விரும்பாத ஒருவர், செங்குன்றத்தை அடுத்த அலமாதி பகுதியைச் சேர்ந்த தனது உறவினரான 16 வயது சிறுமி பரிதாவை(பெயர் மாற்றப்பட்டுள்ளது) அவரது சொந்த சித்தப்பா ஜமாலுதீன் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அதனால், தற்போது நான்கு மாத கர்ப்பிணியாக உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், செங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பரணி, ஜமாலுதீனுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார். பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் ஜமாலுதீனை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தபோதும் அவரை கைது செய்யாமல் தப்பிக்க விடுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

அதன்பிறகு உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, நேரில் பேசினோம். அப்போது அவர்களின் குடும்பத்தார், “பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி ஆறாம் வகுப்பிற்குப் பிறகு பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு, இறைப்பணி செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் வடசென்னையில் உள்ள அரபு பள்ளி ஒன்றில் அரபு மொழி கற்கச் சென்று வந்தார். அவரது தாய் மனநலம் பாதிக்கப்பட்டவர். அவரது தந்தை, எனது தங்கையின் மகன், பழைய இரும்பு, பிளாஸ்டிக், காகிதம் வாங்கி, மூன்று சக்கர வாகனத்தில் காயலாங்கடை வியாபாரம் செய்து வருகிறார்.

இந்த சிறுமியை சீரழித்த ஜமாலுதீன் மனைவி, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாருடன் பிறந்த தங்கை ஆவார். ஜமாலுதீன் செங்குன்றத்தை அடுத்து திருவள்ளூர் செல்லும் சாலையில் எடப்பாளையம் பகுதியில் வசித்து வருகிறான், வடசென்னை பகுதியில் எலெக்ட்ரிசியன் வேலை செய்து வருவதாலும், தினமும் அலமாதி  வழியாகச் செல்வதாலும், சிறுமியை அரபிக் பள்ளிக்கு அழைத்து சென்று விட்டு மீண்டும் மாலை அழைத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். சிறுமியின் பெற்றோர்களும் சித்தப்பன் உடன் செல்வதால் பாதுகாப்பாக இருப்பாள் என்று நினைத்துக் கொண்டிருந்தனர்.

Advertisment

இந்த நிலையில் கடந்த ஜூன் 22ஆம் தேதி இரவு அவளுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்த போது, அவள் நான்கு மாதம் கர்ப்பினியாக இருப்பது தெரியவந்தது, எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதற்குக் காரணம் சொந்த சித்தப்பா ஜமாலுதீன் தான் என்று கூறியது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால் இந்த ஜமாலுதீனின் மனைவிக்கு ஏற்கனவே தெரிந்திருக்கிறது.  வெளியே சொன்னால் விவாகரத்து செய்து விடுவேன் என்று ஜமாலுதீன் மிரட்டி வந்ததால் வெளியே சொல்ல முடியாமல் அவளும் தவிர்த்து வந்திருக்கிறாள். ஜமாலுதீனுக்கும் அவர் மனைவிக்கும் திருமணம் நடந்து 8 ஆண்டுகளாக குழந்தைகள் இல்லை. இதை சாக்காக வைத்து, ஜமாத் மூலம் விவாகரத்து செய்து விடுவேன் என்று மிரட்டி வந்துள்ளான். இதனை மைத்துனர் எனக்கு ஜூன் 23ஆம் தேதி போனில் தெரிவித்தார், உடனே நான் சைல்ட் ஹெல்ப் லைனுக்கும், காவல்துறை உதவி எண் 100க்கும் போன் செய்து தகவல் கூறினேன், உடனே விரைந்து வந்த சோழவரம் போலீசார், பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவர்களின் பெற்றோரை அழைத்துக் கொண்டு, செங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்குமாறு கூறினர்.

அதன்படி சிறுமிக்கு நடந்த கொடுமையை புகாராக எழுதிக் கொடுத்தோம். இந்த வழக்கை விசாரித்த செங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பரணி, ஜமாலுதீன் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்து உடனடியாக கைது செய்வதாக தெரிவித்தார். பாதிக்கப்பட்ட சிறுமியை கடந்த ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து சீரழித்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது.

Advertisment

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் கடந்த ஜூன் 25ஆம் தேதி பாதிக்கப்பட்ட சிறுமியை அழைத்துக் கொண்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்குப் பரிசோதனைக்காக  சென்றனர். ஆனால் அந்த சிறுமி நான்கு மாதம் கர்ப்பமாக இருந்ததால், மேலும் அவர் உடல்நிலை மோசமாக இருந்ததால், திருவள்ளூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்குத் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு, பின்னர் கருக்கலைப்பு செய்யப்பட்டு, தற்போது சிகிச்சையில் இருந்து வருகிறார்.

ஆனால் இதுவரை ஜமால்லுதீனை கைது செய்யவில்லை, கடந்த 30 ஆம் தேதி அவன் குடியிருக்கும் வீட்டை காலி செய்து, வேறு இடத்திற்குத் தப்பிச் செல்ல முயற்சித்தான். அப்போது, எங்கள் உறவினர்கள் அனைவரும் அவனை மடக்கிப் பிடித்து செங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று ஒப்படைத்தோம். ஆனால் ஆய்வாளர் பரணி, அவனைத் தப்ப விட்டு விட்டு எங்களையும், சிறுமியின் அப்பாவையும் பொய் வழக்குப் போட்டு உள்ளே தள்ளி விடுவேன் என்று மிரட்டினார்.

இதனால் நாங்கள் வேறு வழியில்லாமல் முதல்வரின் தனிப்பிரிவுக்கு போன் செய்து தகவல் தெரிவித்தோம், மீண்டும் எங்களை அழைத்த செங்குன்றம் மகளிர் போலீசார், ‘ஒழுங்காக நடவடிக்கை வேண்டாம் என்று எழுதிக் கொடு... இல்லையென்றால், சிறுமியின் அப்பாவை வழக்குப் போட்டு சிறையில் தள்ளுவேன்..’ என்று மிரட்டினார். இதனால் நாங்கள் செங்குன்றம் உதவி ஆணையரை நேரில் சந்தித்தோம். அவரும் உடனடியாக ஆய்வாளர் பரணிக்கு போன் செய்து ஜமாலுதீனை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டார்.

பிறகு மீண்டும் எங்களை காவல் ஆய்வாளர் பரணி வழக்கை வாபஸ் பெற சொல்லி மிரட்டி கொண்டு, சிறுமியின் வாழ்க்கையை சீரழித்த ஜமாலுதீனுக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வருவதால், வேறு வழி இல்லாமல் நக்கீரனை நாடி வந்துள்ளோம் என்று கண்ணீர் மல்க அவர்கள் நம்மிடம் தெரிவித்தனர்.

மேலும், “ஜமாலுதீனுக்கு ஆதரவாக சில கட்சிக்காரர்களும் சிபாரிசு வருகின்றனர், அவனின் தாயாரும், ‘நாம் பேசிக் கொள்ளலாம்...  சமாதானமாக செல்லலாம்..’ என்று கூறுகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வியாசர்பாடி சேர்ந்த 10க்கும் மேற்பட்ட ரவுடி கும்பல் என் வீட்டு வாசலில் அமர்ந்து, மதுபானம் அருந்திக்கொண்டு, சிகரெட் பிடித்தபடி வழக்கை வாபஸ் பெறச் சொல்லி மிரட்டினர். நாங்கள் காவல்துறை உதவி என் 100க்கு கால் செய்து புகார் கூறினோம், பிறகு சோழவரம் போலீசார் வந்து அவர்கள் மீது வழக்குப் பதியாமல் அவர்களை விரட்டி விட்டனர். இதே போல ஒரு சிறுமி அவர்கள் வீட்டில் இருந்தால் இதுபோல பேசுவார்களா? போலீசும் சரி...  குற்றவாளியும் சரி... ஒரே செயலில் ஈடுபடுவது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகின்றது” என்று தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக செங்குன்றம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் பரணியை தொடர்பு கொண்டு பேசினோம், “எல்லாம் பண்ணுவாங்க... அவரோ மருந்து குடிச்சுட்டு ஹாஸ்பிடல்ல இருக்காரு...’ என்று கூறினார்.

பாதிக்கப்பட்டவர் மீது ஏன் வழக்குப் பதிவுகள் என்று மிரட்டினீர்களா? என்று கேட்டதற்கு, ‘நீங்கள் கேட்கும் கேள்விக்கெல்லாம் பதில் கூற முடியாது...’ என்று தொடர்பைத் துண்டித்தார். இதுபோன்ற அலட்சியமான காவல்துறை அதிகாரிகளால் தான், தற்போது அரசுக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது, ஆட்சிகள் மாறினாலும் இந்த அதிகாரிகளின் காட்சிகள் எப்போதும் மாறாது என்பதற்கு இது ஒரு சான்று.