ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்து, கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு அறிவிப்பாணையை வெளியிட்டது. அத்துடன், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து, ஜம்மு காஷ்மீர் சட்டப் பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டப் பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் செயல்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் ஆதரவு அளிக்கப்பட்டாலும், எதிர்ப்பும் எழுந்தது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது செல்லும் எனத் தீர்ப்பளித்தது.
இதையடுத்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட முதல் சட்டமன்றத் தேர்தலில், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அதன்படி, அக்கட்சியின் செயல் தலைவராக இருக்கும் உமர் அப்துல்லா மாநிலத்தின் முதல்வராகப் பதவி வகித்து வருகிறார். இதனிடையே, ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று உமர் அப்துல்லா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், யூனியன் பிரதேசமாக இருக்கும் லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தியும், அரசியல் சாசனத்தின் ஆறாவது அட்டவணையில் சேர்க்க வலியுறுத்தியும் கடந்த மூன்று ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். ஆனால், அரசு அவர்களது கோரிக்கையைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில், சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் 35 நாட்களுக்கான உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த 10-ம் தேதி முதல் தொடங்கி நடத்தி வருகிறார். அவருடன், லே தன்னாட்சிக் குழு உறுப்பினரும் போராட்டத்தில் பங்கேற்றார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட இருவரின் உடல்நிலை 23-ம் தேதி அன்று மிகவும் மோசமானதையடுத்து, உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதே சமயம், போராட்டக் குழு உறுப்பினர்களுடன் மத்திய அரசு அடுத்த மாதம் 6-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டது. ஆனால், அந்தப் பேச்சுவார்த்தையை விரைவில் நடத்த வேண்டும் என்று 24-ம் தேதி கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது. மேலும், லே நகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகம் முன்பு போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அந்த நேரத்தில், மருத்துவமனையில் இருக்கும் இருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல் வந்ததையடுத்து, போராட்டம் தீவிரமடைந்தது. பா.ஜ.க. அலுவலகம் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதோடு, தீ வைத்துக் கொளுத்தினர்.
நிலைமையைச் சமாளிக்க, கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களைப் போலீஸார் விரட்டியடித்தனர். இதில் 4 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, லடாக் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால், பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
வன்முறைச் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள லடாக் துணைநிலைக் கவர்னர் கவிந்தர் குப்தா, “லடாக்கின் அமைதியான சூழலைச் சீர்குலைக்கும் வகையில் திட்டமிட்ட வன்முறைச் சம்பவங்கள் நடத்தப்பட்டுள்ளன. இதற்குக் காரணமானவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். வன்முறையைத் தடுக்க, லே மாவட்டம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது,” என்றார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/09/25/1-2025-09-25-16-23-10.jpg)
மேலும், தொடர்ந்து வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்து வருவதால், சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாங்கள் அமைதியான முறையில் போராட விரும்புகிறோம். அரசுடனான பேச்சுவார்த்தை தாமதமானதால், மக்கள் பொறுமையை இழந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இந்த வன்முறைச் சம்பவங்கள் மிகவும் வருத்தமளிக்கின்றன. லடாக் இளைஞர்கள் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். மேலும், அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க, நான் எனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொள்கிறேன்,” என்றார்.
லடாக் முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நமது அண்டை நாடான நேபாளத்தில் அரசுக்கு எதிராக வெடித்த Gen Z இளைஞர்களின் போராட்டம் நாட்டையே புரட்டிப்போட்ட நிலையில், தற்போது இந்தியாவின் லடாக் பகுதியில் அரசுக்கு எதிராக வெடித்திருக்கும் போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/09/25/2-2025-09-25-16-23-00.jpg)