Panaiyur residents are furious over Vijay's party's issue Photograph: (tvk)
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி, அதேபோல் அதிமுக-பா.ஜ.க அடங்கிய கூட்டணி தேர்தலில் களம் காண்கின்றன.
சீமானின் நாம் தமிழர் கட்சி, கடந்த தேர்தல்களைப் போலவே 234 தொகுதிகளிலும் கூட்டணி வைக்காமல் தனித்தே போட்டியிடுகிறது. அதேபோல் விஜய்யின் தவெகவும் தனித்துப் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக 234 தொகுதிகளிலும் விருப்ப மனுக்களை பெற தவெக திட்டமிட்டு இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அண்மையில் வெளியிட்டிருந்தார். அதன்படி இன்று 06/02/2026) முதல் பிப்ரவரி 14ம் தேதி வரை கட்சியின் தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட இருக்கிறது. குறிப்பாக இன்று நண்பகல் 12:00 மணி முதல் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
தவெகவிற்கு விசில் சின்னம் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில் அடுத்த கட்டமாக தேர்தல் பரப்புரைக்கு தவெக தீவிரம் காட்டி வருகிறது. வரும் பிப்.13 ஆம் தேதி சேலத்தில் பிரச்சாரம் செய்ய விஜய் திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இதற்காக சேலம் மகுடஞ்சாவடி மற்றும் சீலநாயக்கன்பட்டி பகுதியில் பிரச்சாரம் செய்ய அனுமதிகோரி சேலம் தவெக நிர்வாகி பார்த்திபன் காவல் ஆணையரகத்தில் அனுமதி கோரி கடிதம் வழங்கியுள்ளார்.
இந்தநிலையில் இன்று பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தில் விருப்ப மனு பெறப்பட்டு விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில் அந்த பகுதியில் கட்சி தொண்டர்கள் அதிமாக சூழ்ந்துள்ளதால் தாங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக அந்தப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அந்தப்பகுதி மக்கள் சிலர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ''இங்கே பாருங்க காரை நினைத்த இடத்தில் பார்க் பண்றாங்க. சாப்பிட்டுட்டு குப்பையை ஃபுல்லா போட்டுட்டு போறாங்க. இங்கு குடியிருக்கும் மக்களை இப்படி போகாதீங்க அப்படி போகாதீங்க என்கிறார்கள். எங்க கார் வந்தால் விட மாட்டேன் என்கிறார்கள். இதுக்கு மேல இல்லாமல் எதைக் கேட்டாலும் சண்டை போடுறாங்க. எதை சொன்னாலும் நகர மாட்டேன் என்கிறார்கள். என்னமோ பெரிய இது மாதிரி நீங்க பாட்டுக்கு சொல்லுங்க எங்களுக்கு கவலை இல்லைன்னு சொல்லிட்டு அவங்க பாட்டுக்கு இருக்காங்க .
6 வது அவென்யூவில் இருந்து 11 வது அவென்யூ வரை பிளாக் பண்றாங்க. போலீஸ் கிட்டயும் புகார் சொல்லிட்டோம். போலீசும் எதுவும் பண்ண மாட்டேன் என்கிறார்கள். இந்த ஆறு அவென்யூவையும் செய்தி மீடியாக்கள் கவர் பண்ணுங்க என்ன பிரச்சனை என்று உங்களுக்கே தெரியும். ஒரு நாள் ரெண்டு நாள் இல்லைங்க. இதை நாங்க மாசக்கணக்கா அனுபவிச்சுட்டு தான் ரெசிடன்ஸ் வந்து இப்பவே வெளியே வர ஆரம்பிச்சிருக்கோம். காரணம் இதை எங்களால் கண்ட்ரோல் பண்ண முடியவில்லை. இவங்க இன்னும் பாலிடிக்ஸ்கு வரவே இல்லை அதுக்குள்ள எங்களுக்கு இவ்வளவு பிரச்சனை.
வேலைக்காரர்களை வீட்டுக்குள்ள விட மாட்டேங்கறாங்க. அந்த ஓனர் வந்து இவங்க கிட்ட கெஞ்சி வேலைக்காரங்களை உள்ள கூட்டிட்டு போக வேண்டியிருக்கு. எல்லா அவென்யூவிலுள் பேரிகாட் போட்டு வச்சுருக்காங்க. யார் இவங்களுக்கெல்லாம் பர்மிஷன் கொடுக்கறது? வீட்டுக்கு முன்னாடியே காரை பார்க் பண்றாங்க. போய் பாருங்க நாங்க சொல்லவே வேண்டாம். கையில கேமரா இருக்கு நீங்க கேமராவை எடுத்து போய் கவர் பண்ணாலே உங்களுக்கு பிரச்சனை தெரியும். இதே பகுதியில் அன்புமணி ராமதாஸ் அலுவலகம் உள்ளது. நாளைக்கு அவரும் ஸ்டார்ட் பண்ணுவார். இப்படி போனால் எப்படி நாங்கள் வசிப்பது.
இனிமேல் கல்யாண மண்டபத்தில் வச்சிக்கோங்க, பெரிய மண்டபம் அல்ல கிரவுண்ட் எடுத்து பண்ணுங்க. ஆபீஸ்குள்ள என்னவோ பண்ணிக்கிட்டும் நாங்க அதைப்பற்றி கேட்கவில்லை. ஆனால் ரோடுல இங்க போகக்கூடாது, அங்க போகக்கூடாது, எங்க கார் போக கூடாது என்பதெல்லாம் என்ன நியாயம்? ப்ளீஸ் நடவடிக்கை வேண்டும்'' என்றனர்.
பொதுமக்கள் பேட்டி கொடுத்தபோது அந்த பகுதியில் இருந்த சில தவெக கட்சி தொண்டர்களுக்கும் குடியிருப்பு வாசிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Follow Us