''No seat...''- The background behind the riotous voice Photograph: (admk)
'கட்சி ஒன்றுபட வேண்டும். வெளியே சென்றவர்களை அரவணைத்தால் மட்டுமே தேர்தல் களத்தில் வெற்றி பெற முடியும்' என தற்போது செங்கோட்டையன் உயர்த்தி இருக்கும் குரல் அதிமுக வட்டாரத்தில் பேசுபொருளாகி இருக்கிறது. செங்கோட்டையனின் தற்போதைய இந்த 'ஒற்றுமை' நிலைப்பாட்டிற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் செங்கோட்டையனுக்கு சீட் இல்லை என்ற எடப்பாடியின் நிலைப்பாடுதான் முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது.
செங்கோட்டையன்-எடப்பாடி பழனிசாமி இடையே ஏற்பட்ட முதல் மோதலின் வெளிப்பாடு என்பது கடந்த பிப்.9 ஆம் தேதி அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் விழாதான். கோவை அன்னூர் அருகே நடந்த அந்த விழாவில் விவசாயிகள், அதிமுக முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். ஆனால் அதிமுகவின் மூத்த தலைவர்களின் ஒருவரான செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை. அது அன்றைய நாளில் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
'என்னை வளர்த்து ஆளாக்கிய எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற தலைவர்களின் படங்கள் வைக்கப்படாததால் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை' என செங்கோட்டையன் விளக்கம் அளித்திருந்தார். அதேபோல் மாவட்டச் செயலாளர்கள் உடனான ஒரு காணொளி ஆலோசனைக் கூட்டத்தில் நீண்ட நேரம் காந்திருந்தும் செங்கோட்டையனிடம் எடப்பாடி பழனிசாமி பேசாததும், கருத்துக் கேட்காததும் உற்று நோக்கப்பட்டது. அதேபோல் 2025-2026 ஆம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட் சமயத்தில் சட்டப்பேரவை கூடுவதற்கு முன்பாக, சபாநாயகர் அப்பாவுவை செங்கோட்டையன் தனியாகச் சந்தித்து ஆலோசனை நடத்தியதும் பேசு பொருளானது. இப்படியாக சில மாதங்களாகவே எடப்பாடிக்கும் செங்கோட்டையனுக்கு ஏழாம் பொருத்தம் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இது மாதக்கணக்கில் அல்ல ஆண்டுக்கணக்கில் இருந்த மோதல் என்று சொல்லப்படுகிறது.
எடப்பாடி தரப்பை பொறுத்தவரை ஈரோடு பகுதியில் செங்கோட்டையன் கட்சியை வளர்க்கவில்லை. முத்துசாமி தொடங்கி 15க்கும் மேற்பட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கட்சியில் இருந்து வெளியேறியதற்கு செங்கோட்டையனும் முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டை வைக்கிறார்களாம். இதனால் 2026 சட்டப்பேரவை தேர்தலில் செங்கோட்டையனுக்கு கண்டிப்பாக சீட்டு இல்லை என்ற முடிவை எடப்பாடி பழனிசாமி எடுத்துதான் செங்கோட்டையனின் இந்த கலகக் குரலுக்கு காரணம் என்கின்றனர்.
கடந்த 2016 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் செங்கோட்டையனுக்கு ஜெயலலிதா அமைச்சர் பதவி எதுவும் கொடுக்கவில்லை. ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பின் 2017 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமியை முதல்வராக சசிகலா பரிந்துரைத்த அதே நாளில் சசிகலாவால் அதிமுகவில் சிலர் புதிய அமைச்சர்களாக தேர்தெடுக்கப்பட்டனர். அதில் பள்ளி கல்வித்துறை அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் செங்கோட்டையன். காரணம், கொடநாடு பங்களா வாங்கிய காலத்தில் இருந்தே சசிகலா செங்கோட்டையன் இடையே நல்ல நட்புறவு இருந்து வந்துள்ளது. இன்றைய சூழலில் தனக்கான அங்கீகாரம் இல்லாததால் எடப்படியால் வெளியேற்றப்பட்ட சசிகலா அண்ட் டீம் உள்ளே வந்தால் கை கொடுக்கும் என்ற நோக்கில் செங்கோட்டையனின் இந்த மூவ் இருப்பதாக பேசப்படுகிறது.