BIHAR Photograph: (NITHISH)
பீகார் முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ் குமார் விலகலாம் என்றும் அவருக்கு பதிலாக பாஜகவை சேர்ந்த ஒருவருக்கு முதல்வர் பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
2025-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில், முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) 202 இடங்களை வென்று மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. தொடர்ந்து 10 ஆவது முறையாக நிதிஷ் குமார் பீகார் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் பீகாரில் காலியாகும் 5 ராஜ்யசபா இடங்களுக்கு மார்ச் 16, 2026 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மாநிலங்களவைக்கு மாறுகிறார் என்ற பேச்சு எழுந்துள்ளது. இதற்காக அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் தீவிர அரசியலில் இயங்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மாநில துணை முதல்வராக அவர் பொறுப்பேற்பார் என்ற யூகங்கள் கிளம்பியுள்ளன.
அதேநேரம் நிஷாந்த் குமார் அரசியலில் முறையாக நுழைந்து, ஜே.டி.(யு) சார்பில் ராஜ்யசபா வேட்பாளராக நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. பீகாரை பொறுத்தவரை நிதிஷ்குமாரின் முக்கிய பிரதான ஆயுதமே வாரிசு அரசியல் எதிர்ப்பு தான். லாலு பிரசாத் முதல் ராகுல் வரை நிதிஷ்குமார் வைத்த முக்கிய குற்றச்சாட்டு வாரிசு அரசியல் என்ற நிலையில் தற்போது நிதிஷ் குமாரே தனது வாரிசை அரசியலில் இறக்கி விடுவது விமர்சனத்திற்கே வழிவகுக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
75 வயதை தொட்டுள்ள நிதிஷ்குமாரின் சில மேடை செயல்பாடுகள் சர்ச்சையை ஏற்படுத்த அதை கடந்த 2025 தேர்தலில் கையிலெடுத்த எதிர்க்கட்சிகள் பெரிதாக்கின. மேலும் 2025 பீகார் தேர்தல் முழுக்க முழுக்க இளைஞர்கள் மற்றும் அடுத்த தலைமுறை தலைவர்களை கொண்ட தேர்தலாக இருந்தது. தீவிர அரசியலில் இருந்து லாலு நீங்கி விட்ட நிலையில் அவரது மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையில் ஆர்.ஜெ.டி போட்டியிட்டது. ஜன் சுராஜ் கட்சியின் பிரசாந்த் கிஷோர், லோக் ஜனசக்தி இன் சிராக் பஸ்வான் என அனைவரும் அடுத்த தலைமுறை அரசியல்வாதிகள் என்ற நிலையில் தனது கட்சியிலும் இளைய முகத்தை பூட்ட நிதிஷ் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் அமைச்சரும், மூத்த தலைவருமான ஷ்ரவன் குமார் உள்ளிட்ட பலரும் நிஷாந்த் குமாரின் அரசியல் வருகையை வரவேற்று வருகின்றனர். இருப்பினும் அவருக்கு கட்சியில் என்ன பொறுப்புகள் வழங்கப்படும், துணை முதல்வர் பதவிக்கு நிஷாந்த் குமார் கொண்டுசெல்லப்படுவாரா? அல்லது ராஜ்யசபா வேட்பாளராக நிறுத்தப்பட வாய்ப்புள்ளதா? புது ரத்தம் பாய்ச்சும் ஐக்கிய ஜனதா தளத்தின் ஆசை பலிக்குமா என்பதெல்லாம் பின்னர் தான் தெரியும் என்கின்றனர் அரசியல் ஆர்வலர்கள்.
Follow Us