ஆஸ்திரேலியாவில் நடந்த ‘காளான் கொலைகள்’ (Mushroom Murders) அந்நாட்டில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மதிய உணவில் கெட்டுப்போன காளானை விருந்தளித்து மூவரை கொன்ற பெண்ணை தற்போது, பலகட்ட விசாரணைகளுக்கு பிறகு நீதிமன்றம் குற்றவாளி என அறிவித்துள்ளது. நீதிமன்றம் என்ன தண்டனை அறிவிக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கும் நிலையில், இந்த கொலைக்கு பின்னணியில் உள்ள காரணமும், பின்னணியில் உள்ள சதியும் தற்போது அம்பலமாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா மாகாணத்தின் லியன்கேத்தா என்னும் நகரைச் சேர்ந்தவர் 50 வயதான எரின் பேட்டர்சன். ஜூன் 2007ஆம் ஆண்டு சைமன் என்பவரை திருமணம் செய்தார் எரின். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆரம்பத்தில் சரியாக சென்ற இவர்களது திருமண வாழ்க்கை, நீண்ட ஆண்டுகள் நீடிக்கவில்லை. பல குடும்ப பிரச்சனைகள், நிதி சார்பான பிரச்சனைகள் ஒரு கட்டத்தில் இவர்களுக்கிடையே மோதலை உருவாக்கியது. விளைவு, கடந்த 2015 ஆம் ஆண்டு, இருவரும் பிரிந்து சென்றனர். பிரிந்து சென்றாலும் அவர்களிடையே இருந்த மோதல் முடிவிற்கு வரவில்லை. குழந்தைகளின் வளர்ப்பில் சைமன் கவனம் செலுத்தவில்லை என எரின் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார்.
2022-க்கு பிறகு அவர்களின் மோதல் பகையாக மாற ஆரம்பித்தது. குழந்தைகளுக்கான கல்விச்செலவிற்கும், மருத்துவச்செலவிற்கும் சைமன் பணம் தர மறுப்பதாக எரின் குற்றம் சாட்டினார். குழந்தைகளை வேறு பள்ளியில் சேர்ப்பதற்கு சைமன் எதிர்ப்புத் தெரிவித்தது முதல் பணம் தர மறுத்தது வரை சைமனின் முடிவுகள் எரினை விரக்தியடைய செய்தது. இப்படி மோதல் தொடர்ந்தால், எரின் சைமனின் பெற்றோரான டான் மற்றும் கெயில் பேட்டர்சன்னிடம் முறையிட்டு, அவர்களின் உதவியை நாடினார். அவர்களோ இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வருவதிலிருந்து ஒதுங்கிக் கொண்டதாகவும், எரினுக்கு உதவ மறுத்ததாகவும் கூறப்படுகிறது. பேட்டர்சன் குடும்பத்தினர் தன்னை வேண்டுமென்றே ஒதுக்குவதாக உணர்ந்த எரின், ஒரு கொடூர திட்டத்தை தீட்டியுள்ளார். சைமனை அவரின் பெற்றோர் சரியாக வளர்க்கவில்லை என்று குறைகூரிய எரின், அவர்களை பழி வாங்க வேண்டும் என முடிவுசெய்தார். அதற்காக அவர் போட்ட ஸ்கெட்ச் தான் மதிய உணவு.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/07/10/mush1-2025-07-10-10-57-13.jpg)
கடந்த ஜூலை 29, 2023 அன்று சைமனையும் அவரின் பெற்றோரையும் மதிய உணவிற்கு அழைத்தார் எரின். ஆனால், தனக்கு வேறு வேலைகள் இருப்பதாக கூறி, அந்த மதிய விருந்தை சைமன் புறக்கணித்துவிட்டார். எரின் விரித்த வலையில் வந்து விழுந்தார்கள் சைமனின் பெற்றோர் டான் மற்றும் கெயில் பேட்டர்சன். கூடவே, கெயிலின் சகோதரி ஹீதர்ரும் அவரின் கணவர் இயான்னும் இந்த விருந்தில் கலந்துகொண்டனர். இந்த விருந்தில், அவர்களுக்காக மாட்டிறைச்சியும் கெட்டுப்போன காளானும் படைத்தார் எரின். கெட்டுப்போன காளான் வேண்டுமென்றே அவர்களுக்கு படைக்கப்பட்டது. தானும் சாப்பிடவேண்டும் என்ற நிர்பந்தத்தில் மிகக்குறைவாக அந்த உணவை உட்கொண்டார் எரின். பிறகு, உடனே அவர், பின்புறமாக சென்று, தான் உண்டதை வாந்தி எடுத்துவிட்டார் என தெரிகிறது. ஆனால், மற்றவர்கள் கெட்டுப்போன காளானையும், மாட்டிறைச்சியையும் மிக அதிகமாக உட்கொண்டதால் அவர்களின் உயிருக்கு ஆபத்தாக முடிந்தது. நால்வரும் வயிற்றுக்கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஐந்து நாட்கள் கழித்து, ஆகஸ்ட் 4, 2023 அன்று 70 வயதான கெயில் பேட்டர்சன்னும், 66 வயதான ஹீதர்ரும் கெட்டுப்போன காளான்களை உட்கொண்டதின் விளைவாக உயிரிழந்தனர். மறுநாள், ஆகஸ்ட் 5ஆம் தேதி, சைமனின் தந்தை டான் பேட்டர்சன் உயிரிழந்தார்.
அடுத்தடுத்து மூன்று பேர் கெட்டுப்போன காளான்களை உட்கொண்டு உயிரிழந்ததால், விக்டோரியா மாகாண போலீசார் இந்த மரண பின்னணி குறித்து விசாரிக்க தொடங்கினர். இந்த மதிய விருந்தில் கலந்துகொண்ட நால்வரில் ஒருவரான இயான், சுமார் ஏழு வார சிகிச்சைக்கு பிறகு பிழைத்துக் கொண்டார். போலீஸ் விசாரணை இவர்களை அனைவரையும் விருந்துக்கு அழைத்த எரின் பக்கம் திரும்பியது. விசாரணையில், முதலில் அவர் காளான் கெட்டுப்போய்விட்டது என தனக்கு தெரியாது என்றும், இது ஒரு விபத்து என்றும் கூறினார். இறந்தவர்களின் உடலில் கெட்டுப்போன காளான் விஷமாக மாறி, பல உடலுறுப்புகள் செயலிழந்து விட்டன. இது கொலையாக இருக்கக்கூடும் என்ற கோணத்தில், விக்டோரியா போலீசார் பிரேதப் பரிசோதனை அறிக்கைகளையும், தடயவியல் அறிக்கைகளையும் தீர ஆராய்ந்தனர். இந்த விசாரணையில், எரின் பல இடங்களில் முரணாக பதிலளித்தது போலீசாருக்கு சந்தேகத்தை கொடுத்தது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/07/10/mush2-2025-07-10-10-57-54.jpg)
தீவிர விசாரணைக்குப் பிறகு, தான், அந்த காளான்களை மூன்று மாதத்திற்கு முன்பே வாங்கியதாக எரின் பின்னர் ஒப்புக்கொண்டார். 2022ஆம் ஆண்டு, இது போன்ற ஒரு விருந்தை எரின் சைமனுக்கு அளித்தார் என்றும், அதை உட்கொண்ட பிறகு சைமன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற உண்மை தெரிந்தது. ஆகையால், எரினுக்கு சைமன் குடும்பத்தினரை தீர்த்துக்கட்ட வேண்டும் என்ற நோக்கம் ஏற்கனவே இருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. எரினுக்கு சைமன் மீதிருந்த கோபமும், அவரின் பெற்றோர் மீதிருந்த கோபமும் இந்த கொலைக்கு நோக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. தொடர் விசாரணைக்கு பிறகு, எரின் நவம்பர் 2, 2023 அன்று கைது செய்யப்பட்டார். மூவரை கொன்றத்திற்காக மூன்று கொலை வழக்குகளும், ஒருவரை கொல்ல முயற்சி செய்ததற்காக ஒரு கொலைமுயற்சி வழக்கும் எரின் மீது பதியப்பட்டது. நீதிமன்ற விசாரணையில், எரினுக்கு எதிராக, பிரேதப் பரிசோதனை அறிக்கைகளையும், தடயவியல் அறிக்கைகளையும், அவரின் முரணான பதில்களையும், அவர் கணவர் சைமனின் வாக்குமூலங்களையும் போலீசார் சமர்ப்பித்தனர்.
ஐம்பதுக்கும் மேற்பட்டோர் இந்த வழக்கில் சாட்சியம் அளித்தனர். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில், தற்போது நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை வழங்கப்பட்ட தீர்ப்பில், நீதிமன்றம் எரினை அனைத்து வழக்குகளிலும் குற்றவாளி என கூறியுள்ளது. இன்னும் தண்டனை விபரங்கள் அறிவிக்கப்படாவிட்டாலும், எரினுக்கு ஒவ்வொரு கொலைக்கும் ஒரு வாழ்நாள் சிறை என மூன்று வாழ்நாள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும், கொலை முயற்சிக்கு ஏழு வருடம் சிறை தண்டனை கிடைக்கும் என சொல்லப்படுகிறது. கெட்டுப்போன காளானை வைத்து மூவரை கொலைசெய்ததால், இந்த கொடூர சம்பவம் ‘காளான் கொலைகள்’ (Mushroom Murders) எனக் குறிப்பிடப்படுகிறது.
-அழகு முத்து ஈஸ்வரன்