சங்க கால கோட்டைகளில் இன்றளவும் சிதைவின்றி எஞ்சியுள்ள கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் உள்ள வட்டக் கோட்டை தான். இங்குக் கோட்டை மேடுக்கு கீழ்புறம் உள்ள நீராவி குளத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு துணி துவைக்கும் கல்லில் எழுத்துகள் இருப்பதை தஞ்சை தமிழ் பல்கலைக் கழக ஆய்வு மாணவர்கள் கண்டுபிடித்தனர்.
அந்த முக்கோணக வடிவக் கல்லில்,
"கோவெண்கட்டிற்நெதிர
ணறுபொன்கொங்கர் விண்ணகோன்
ஆஎறிஇத்துஏவ அதவ்வனரு
அங்கபடைததாணையன்கணங்
குமரன்கல்"
கணங்குமரன் என்ற ஒரு வீரனின் நடுகல் என்பது தெற்ந்தது.
தொடர்ந்து பல்வேறு மேலாய்வுகளில் ஏராளமான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு இந்த கோட்டையை ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் நீதிமன்ற உத்தரவும் பெறப்பட்ட நிலையில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகம் சிறு தொகை ஒதுக்கு அகழாய்வு செய்தது. தொடர்ந்து தமிழழ்நாடு தொல்லியல் துறை சார்பில் 2 கட்ட அகழாய்வுகள் நடநந்து முடிந்துள்ள நிலையில் சங்க காலம் முதல் தொடர்ச்சியாக இப்பகுதி குடியேற்றம் இருந்துள்ளதற்கான சான்றுகள் கிடைத்துள்ளது. தங்கம் உள்ளிட்ட ஆபரணங்களும், பானை ஓடுகள், வட்ட சில் என ஏராளமான தொல் பொருட்கள் கிடைத்துள்ளது.
இந்த நிலையில் தான் அமைச்சர் தங்கம் தென்னரசு அவரது முகநூல் பக்கத்தில் பொற்பனைக்கோட்டை சங்ககாலத்திலேயே மாபெரும் வாணிப நகலமாக விளங்கியுள்ளது என்பதை படங்களுடன் தகவல் பகிர்ந்துள்ளார். அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்.. "தமிழ் நாட்டில் சங்ககாலத்தைச் சார்ந்த கோட்டை ஒன்றின் எச்சங்களை இன்றும் நாம் காணக் கிடைக்கும் இடம், புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை ஆகும். தமிழ் நாட்டு அரசின் தொல்லியல் துறை சார்பில் அங்கே இரண்டு கட்டங்களாக நடைபெற்ற அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட 4 நாணயங்கள் கால வரிசையிலும், வாணிப வளத்திலும் பொற்பனைக்கோட்டையின் முக்கியத்துவத்தைப் பறைசாற்றுகின்றன.
அகழ்வாய்வில் வெளிக்கொணரப்பட்ட காசுகளில் கங்கைச் சமவெளியைச் சேர்ந்த ஒரு வெள்ளி முத்திரைக் காசும், முற்காலச் சோழர்கள் காலத்தைச் சேர்ந்த, புலி உருவம் பொறிக்கப்பட்ட இரண்டு செப்புக் காசுகளும், மூன்று வளை முகடுகள் மீது பிறை வடிவம் கொண்ட சங்க கால செப்பு முத்திரை ஒன்றும் முக்கியமானவை.
இந்த நாணயங்கள், சங்க காலத்தில் பொற்பனைக்கோட்டை மாபெரும் வணிக நகரமாக இருந்தமைக்குச் சான்றாக விளங்குகின்றது. பொற்பனைக்கோட்டை அகழ்வாய்வில் கிடைக்கப்பெற்ற கரிம மாதிரி ஆய்வு முடிவுகள் நான்குமே தொடக்கக் கால வரலாற்றுக் காலத்தைச் சேர்ந்ததாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது."இவ்வாறு அந்த தகவல் உள்ளது.