தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக திராவிட இயக்கம் தோன்றிய போது கிராமம் கிராமமாகச் சென்று பொதுக்கூட்டங்களை நடத்தி இயக்கத்தை வளர்த்தார்கள். வாயால் வளர்ந்த இயக்கம் என்பார்கள். அன்றைய பொதுக் கூட்டங்களுக்கு துண்டு பிரசுரம் வெளியானால் 25 கி.மீ தூரத்திற்கு அப்பால் இருந்தும் புளிச்சோறு கட்டிக் கொண்டு வாடகை சைக்கிள் எடுத்துக் கொண்டு கூட்டம் நடக்கும் இடத்திற்கு வந்துவிடுவார்கள் தலைவர்களின பேச்சை கேட்கும் மக்கள். பொதுக்கூட்டங்களில் தங்கள் மனங்கவர்ந்த தலைவர்களின் பேச்சைக் கேட்க அத்தனை ஆர்வம். விடிய விடிய பேசினாலும் இருந்து கேட்டார்கள். தற்போது அந்தக் காலம் மாறிப் போனது. (இப்போது எந்த ஒரு பொதுக்கூட்டத்திற்கும் பணமும், குவாட்டரும், கோழிப் பிரியாணியும் கொடுத்து வாகனங்கள் மூலம் கூட்டம் சேர்த்தாலும் சிறிது நேரம் தான்) அதிலும் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், நாவலர், பேராசிரியர் என பல தலைவர்கள் செல்லாத கிராமங்களும் இல்லை, அவர்களின் பேச்சை கேட்காத மக்களும் இல்லை. இந்த தலைவர்களில் பலர் பேசிய, குண்டு மைக்கை இன்று வரை பாதுகாப்பாக வைத்திருக்கிறார் வடகாடு மைக்செட் மணிக்குண்டு என்கிற 78 வயது திமுக மூத்த முன்னோடி. இதை பாதுகாப்பதை பெருமையாக நினைக்கிறேன் என்கிறார்.
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தைச் சேர்ந்த 78 வயது மைக்செட் மணிக்குண்டு தீவிர தி.மு.க காரர். தனது 16 வயதில் தொடங்கியது முதல் இன்று வரை மைக்செட் வைத்து நடத்தி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு கூட, மாங்காடு சாளுவன்குடியிருப்பு பாதாள ஐய்யனார் கோயில் பூஜைக்கு விடிய விடிய கண்விழித்து மைக்செட் ஓட்டினார். அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், நாவலர், பேராசிரியர், எஸ்.எஸ்.ஆர் ஆகியோர் பேசிய மைக்கை தான் இன்னும் பாதுகாப்பாக வைத்திருப்பதாக கூறியவர் மேலும் நம்மிடம், ‘1963 ல் மைக்செட் வாங்கினேன். தொடர்ந்து நாடகங்களுக்கு ஓட்டுவேன். பிறகு எந்த ஊர்ல அரசியல் பொதுக்கூட்டம் நடந்தாலும் என்னை அழைப்பாங்க. அப்படித்தான் வெட்டன்விடுதியில பள்ளிக் கூடம் திறப்பு விழாவுக்கு அறிஞர் அண்ணா வந்தார். அப்ப வேற ஒருத்தர் மைக் செட் கட்டியிருந்தார். அவர் நல்ல மைக் வேணும்னு கேட்டார். அப்பதான் அமெரிக்கா தயாரிப்புல குண்டு மைக் ஒன்றை 135 ரூபாய்க்கு வாங்கி வச்சிருந்தேன். 10 அடிக்கு அந்தப் பக்கம் இருந்து பேசினாலும் கினீர்னு கேட்கும். அண்ணா பேசுகிறார் என்றதும் அந்த மைக் கொண்டு போனேன். அதில் பேசினவர் மைக் நல்லா இருக்குனு பாராட்டினார். அதே போல வடகாடு சுற்றியுள்ள கிராமங்கள்ல கலைஞர் பேசினப்பவும், வடகாடு அரச மரத்தடியில எம்.ஜி.ஆர், அப்பறம் நாவலர், பேராசிரியர் எல்லாருக்கும் இதே குண்டு மைக் தான்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/08/02/mik4-2025-08-02-22-04-22.jpg)
அதே போல, வடகாடு முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவுல முதல் முறையா நாகூர் ஹனிபாவை பாட அழைத்தோம். (அப்ப திமுக - காங்கிரஸ் எதிர் எதிர் முனையா இருந்த காலம்) கோயில் திருவிழாவுல நான் வந்து என்ன பாடுறதுனு கேட்டார். திமுகவுக்காக பாடிய பாடல்களை பாடுங்கனு சொல்லி அழைத்து வந்தோம். ஒரு இஸ்லாமியர் இந்து கோயில் திருவிழாவுல என்ன பாடப் போறார்னு சுற்றியுள்ள கிராம மக்கள் மட்டுமின்றி புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை வரை உள்ள மக்கள் திரண்டு வந்தாங்க. கார், சைக்கிள் போட இடமில்லை. முதலில், ‘அழைக்கின்றார் அழைக்கின்றார் அண்ணா’ என்ற பாட்டை பாடினார். மொத்த கூட்டமும் கைதட்டியது. அடுத்து ‘ஓடி வருகிறான் உதயசூரியன்’ போன்ற கட்சிக்காக பாடிய பாடல்களையும் பாடப்பாட கைதட்டல் அதிகமானது. கடைசியில திமுக-காங்கிரஸ் தேர்தல் போட்டி பற்றி பாடி முடிச்சுட்டு இந்த குண்டு மைக்கை உருவி முத்தம் கொடுத்துட்டு என்னையும் பாராட்டிட்டு போனார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/08/02/mik3-2025-08-02-22-04-52.jpg)
அதே போல, ஒரு நாடகத்தில் என் மைக்செட் நல்லா இருந்ததைப் பார்த்து நெடுவாசல்காரங்க அவங்க ஊர் பள்ளிக்கூடம் கட்ட நிதி திரட்ட எஸ்.எஸ்.ஆரை வச்சு நாடகம் நடத்த என்னை மைக்செட் போட அழைச்சாங்க. 6 மைக் வேணும்னு எஸ்.எஸ்.ஆர் சொன்னதால 6ல் ஒன்னு இந்த குண்டு மைக் வச்சோம். முதல்ல அவரே வந்து ஹலோ ஹலோனு டெஸ்ட் பண்ணாம கனைச்சுப் பார்த்தார். இந்த குண்டு மைக் சத்தம் கினீர்னு இருந்ததால இது தான் எனக்கு வேணும்னு அதில் பேசி நாடகத்தில் நடிச்சவர் அடுத்த முறை வடகாடு கூட்டத்துக்கு வந்தவர் மேடையில இருந்து என் மைக்கை பார்த்துட்டு அவருக்கு கொண்டு வந்த டீ யை முதல்ல கீழ இருக்கிற மைக்செட் காரருக்கு குடுத்துட்டு வான்னு சொன்னார். இப்படி பல பேரோட பாராட்டுகளை வாங்கிக் கொடுத்த இந்த குண்டு மைக்கை இப்ப வரை வச்சு பாதுகாக்கிறேன். ஆல் ரவுண்ட் மைக் க்கு இணையான மைக் இந்த குண்டு மைக். முன்ன மாதிரி இப்ப யாரு பொதுக் கூட்டத்துல பேசுறாங்க, அவங்க பேசுறதை கேட்க யாரு போறாங்க தம்பி. போனாலும் கொஞ்ச நேரம் நின்னுட்டு போயிடுறாங்க. இல்லன்னா செல்போனை பார்த்துட்டு போறாங்க. இப்ப எனக்கு வயசானாலும் மைக் செட் வச்சிருக்கேன். கேட்கிறவர்களுக்கு கொண்டு போய் கட்றேன்’ என்றார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/08/02/mik2-2025-08-02-22-05-05.jpg)
இது போன்ற கழக முன்னோடிகளால் தான் கழகம் வளர்ந்தது. இப்ப அந்த வயதான கழக தூண்களை கண்டுக்காம இருப்பது தான் வேதனை என்கிறார்கள் பழைய உடன் பிறப்புகள். இந்த செய்தி மற்றும் வீடியோக்களை நக்கீரன் இணையத்தில் வெளியானது. இந்த நிலையில் தான், இன்று வடகாடு கிராமத்தில் ஒரு நிகழ்ச்சிக்காக சென்ற பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் நிகழ்ச்சி முடிந்ததும் நம்ம கட்சிக்காரர் கழகம் வளர்த்த மூத்த முன்னோடி முதியவர் மைக்செட் மணி எப்படி இருக்கிறார் அவரைப் பார்க்கனும் என்று சொல்ல உள்ளூர் உ.பி கள் மைக்செட் மணிக்குண்டு என்கிற திமுக மூத்த முன்னோடி மணியை பார்க்க அழைத்துச் சென்றனர். முதலில் அவருக்கு பொன்னாடை அணிவித்து நிதி உதவியும் வழங்கிய அமைச்சர் உங்களைப் போன்றவர்களால் தான் கழகம் இன்றும் நிமிர்ந்து நிற்கிறது. உங்களை எப்பவும் மறக்கமாட்டோம். இந்த வயதிலும் உழைத்து வாழ வேண்டும் சுயமரியாதையை நினைத்து பெருமைப்படுகிறேன் என்றார். மேலும் அவர், தலைவர் பேசிய மைக்கை பார்க்க மீண்டும் ஒரு நாள் வருகிறேன் என்று கூறிச் சென்றார். இதுவரை யாரும் கண்டு கொள்ளாத திமுக பொக்கிஷமான மைக்செட் மணிக்குண்டை அமைச்சர் மெய்யநாதன் பார்த்து பொன்னாடை அணிவித்ததில் அவருக்கும், கிராமத்தினருக்கும் பெரும் மகிழ்ச்சி.