மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள போவாய் பகுதியில் ஆர்.ஏ. ஸ்டுடியோ ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ரோஹித் ஆர்யா என்ற இளைஞர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த ஸ்டுடியோவில், சினிமா திரைப்படங்கள், புதிதாக தயாரிக்கப்படும் வெப் தொடர் உள்ளிட்டவற்றிற்கான ஆடிஷன் நடைபெற்று வருகிறது. அதற்காக கடந்த சில நாட்களாக ஏராளமானவர்கள் வந்து சென்றுள்ளனர். அந்த வகையில் 30 ஆம் தேதி அன்றும் 17 சிறுவர்கள், முதியவர்கள், பெண்கள் என 100க்கும் மேற்பட்டவர்கள் ஆடிஷனுக்காக வந்துள்ளனர். வழக்கம் போல் அவர்களைத் தேர்வு செய்யும் பணியில் ரோஹித் ஆர்யா ஈடுபட்டிருந்துள்ளார். ஆடிஷன் வந்தவர்களின் உறவினர்கள் வெளியே நின்றுள்ளனர்.
இதனையடுத்து மதியம் உள்ளே ஆடிஷனுக்கு சென்றவர்கள் வெளியே வரத் தொடங்கியுள்ளனர். ஆனால், 17 சிறுவர்கள் உள்பட ஒரு சிலர் நீண்ட நேரமாகியும் வெளியே வராமல் இருந்துள்ளனர். இது வெளியே இருந்த அவர்களது உறவினர்களுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறிது நேரத்திலேயே ஸ்டுடியோவின் ஜன்னல் வழியே சிறுவர்கள் அலறும் சத்தம் கேட்டிருக்கிறது. இதனால் அங்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் திகைத்து நின்ற பெற்றோர்களுக்கு சிறிது நேரத்திலேயே தங்களது குழந்தைகளை ஸ்டுடியோவில் பணியாற்றும் ரோஹித் ஆர்யா பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்திருப்பது தெரியவந்தது.
தகவலின் பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மும்பை போலீசார் ஸ்டுடியோ இருக்கும் கட்டடத்தைச் சுற்றி வளைத்தனர். மேலும், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டன. இதையடுத்து ரோஹித் ஆர்யாவைத் தொடர்பு கொண்ட போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், குழந்தைகளை வெளியிட மறுத்த ரோஹித் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அந்த வீடியோவில், “நான் ரோஹித் ஆர்யா. தற்கொலை செய்து கொள்வதற்குப் பதிலாக, நான் ஒரு திட்டத்தை வகுத்து, சில குழந்தைகளை இங்கே பிணைக் கைதிகளாக வைத்திருக்கிறேன். எனக்கு எந்தக் கோரிக்கைகளும் இல்லை, தார்மீக மற்றும் நெறிமுறை சார்ந்த சில கேள்விகள் மட்டுமே உள்ளன. நான் சிலரிடம் சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன். நான் ஒரு பயங்கரவாதியும் இல்லை, எனக்கு பணம் சார்ந்த கோரிக்கைகளும் இல்லை. நான் ஒரு எளிய உரையாடலை மட்டுமே விரும்புகிறேன். அதனால்தான், இந்தக் குழந்தைகளை பிணைக் கைதிகளாகப் பிடித்துள்ளேன். இதனை நான் சுமுகமாக நடத்த விரும்புகிறேன். எனக்கு எதிராக சிறு நடவடிக்கை எடுத்தாலும், இந்த இடத்தையே கொளுத்தி நாசம் செய்துவிடுவேன்” என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையடுத்து தொடர்ந்து போலீசார் ரோஹித் ஆர்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் எந்தப் பலனும் ஏற்படவில்லை. அதன் காரணமாக கட்டடத்தின் பின்புறம் வழியாக ஸ்டுடியோவில் உள்ள குழியலறைக்குள் அதிரடியாக நுழைந்த மும்பை போலீசார் அங்கிருந்து பத்திரமாக சிறுவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கினர். அந்த நேரம் பார்த்து போலீசாரை நோக்கி ரோஹித் ஆர்யா துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனால் தற்காப்பிற்காக போலீசார் சுட்டதில் ரோஹித் ஆர்யாவின் உடலில் குண்டு பாய்ந்து கீழே விழுந்துள்ளார். உடனடியாக 17 சிறுவர்கள் உள்பட பிடித்து வைக்கப்பட்டிருந்த அனைவரும் வெளியே பத்திரமாக மீட்கப்பட்டனர். அதேசமயம் குண்டடிபட்டு கிடந்த ரோஹித் ஆர்யாவை போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து, ரோஹித் ஆர்யாவின் பூர்வீகம் என்ன? அவர் யார்? எதற்காக இந்த சம்பவத்தை அரங்கேற்றினார்? அவருக்கு வேறு யாருடனாவது தொடர்பு இருக்கிறதா? என்று மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த ஒட்டுமொத்த சம்பவமும், ஒரு சில மணி நேரங்களிலேயே நடந்து முடிந்திருக்கிறது. துரிதமாக செயல்பட்டு அனைவரையும் பத்திரமாக மீட்ட போலீசாருக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png) 
   Follow Us
 Follow Us/nakkheeran/media/media_files/2025/10/31/untitled-1-2025-10-31-13-10-29.jpg)