Advertisment

"காசாவில் 50,000 இறப்புகள் அவசியம்"  -  லீக்கான இஸ்ரேல் முன்னாள் உளவுத்துறை தலைவரின் ஆடியோ!

Int

காசாவிற்கு எதிராக அடுத்தக்கட்ட போருக்கு இஸ்ரேல் தயாராகி வரும் சமயத்தில், ஒரு ஆடியோ பதிவு, இஸ்ரேல், காசாவில் நிகழ்த்தும் தாக்குதல்களுக்கான நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது. வரும் அக்டோபர் மாதத்துடன் இஸ்ரேல் - காசா போர் தொடங்கி இரண்டாண்டுகள்  முடிவடையப்போகிறது. ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்ட போதிலும், இஸ்ரேல் தொடர்ந்து காசாவில் தாக்குதல் நடத்தி அங்கு 'இனப்படுகொலை' செய்கிறது என்ற குற்றச்சாட்டுக்கு இந்த ஆடியோ பதிவு வலுசேர்க்கிறது.

Advertisment

அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலில் நடத்திய தாக்குதலில் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், 250 இஸ்ரேலியர்கள் பணயக்கைதிகளாக ஹமாஸால் பிடித்துச் செல்லப்பட்டனர். அன்று தொடங்கிய இஸ்ரேலின் பதிலடி, இன்று அடுத்தகட்டத்திற்கு சென்றுள்ளது. இந்த இரண்டு ஆண்டுகளில், இஸ்ரேல் காசாவில் நடத்திய தாக்குதலில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதுமட்டுமின்றி, லட்சக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை, வாழ்வாதாரத்தை இழந்து ஒரு வேலை உணவிற்காக தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கின்றனர்.

Advertisment

ஆரம்பத்தில், இஸ்ரேலை பல நாடுகள் ஆதரித்தாலும், தற்போது அந்த நிலைப்பாடு மாறியுள்ளது. காரணம் - இஸ்ரேல் தனது கோரமுகத்தை, தான் காசாவில் நிகழ்த்தும் மனிதாபிமானமற்ற தாக்குதகள் மூலம், காட்டிவருகிறது. இஸ்ரேல் அரசாங்கம் காசாவில் வேண்டுமென்றே உணவு பற்றாக்குறையை ஏற்படுத்துவதாகவும், அங்கு செல்லும் நிவாரணப்பொருட்களை தடுத்து, பாலஸ்தீனியர்களை சாவின் விளிம்பில் தள்ளுவதாகவும் பல நாடுகள் தற்போது குற்றம் சாட்டுகின்றன.

லீக்கான ஆடியோ பதிவு:

இஸ்ரேலின் நோக்கம் ஹமாஸ் படையை வீழ்த்துவது மட்டுமல்ல...காசாவில் இனப்படுகொலை செய்துவதும்தான் என பரவலாக நம்பப்படுகிறது. காசா மக்களை இஸ்ரேல் பல வகைகளில் கொல்கிறது - ஆயுத தாக்குதல், வாழ்விடத்தை அழிப்பது, பசி, பட்டினியை ஏற்படுத்துவது என இதில் பல வகைகள் அடங்கும். இப்படி, இஸ்ரேல் நிகழ்த்துவது இனப்படுகொலைதான் என்பதற்கு ஆதாரமாக வந்திருக்கிறது இந்த ஆடியோ பதிவு.

இந்த ஆடியோ பதிவு தற்போது வெளியானாலும், அது எப்போது எடுக்கப்பட்டது எனத் தெளிவாக தெரியவில்லை. இந்த ஆடியோவில் பேசும் இஸ்ரேல் ராணுவத்தின் முன்னாள் உளவுத்துறை தலைவர் அஹாரோன் ஹலிவா, '50,000 மக்கள் காசாவில் சாகவேண்டும், இது நமக்கு கட்டாயம்' என கூறுகிறார். மேலும், 'அக்டோபர் 7 அன்று கொல்லப்பட்ட ஒவ்வொரு இஸ்ரேலியருக்கும் 50 பாலஸ்தீனியர்கள் கொல்லப்படவேண்டும், குழந்தைகளாக இருந்தாலும் பரவாயில்லை, அவர்கள் கொல்லப்படவேண்டும்' எனக் கூறுகிறார்.

'எதிர்கால தலைமுறைக்காக காசாவில் 50,000 பேர் சாகவேண்டும்' என அவர் தெரிவிக்கிறார். ஹலிவா எப்போது இப்படி பேசினார் எனத் தெரியவில்லை...ஆனால், ஜூலை 2025 கணக்குப்படி, சுமார் 62,000 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் படைகளால் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் அரசின் நோக்கத்தைத்தான் ஹலிவா வெளிப்படுத்தியிருப்பதாவும், இஸ்ரேல் காசாவில் நிகழ்த்துவது இனப்படுகொலைதான் என சந்தேகமின்றி கூறலாம் என சர்வதேச விவகாரங்களுக்கான நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Int2
நெட்டன்யாஹுவுடன்      ஹலிவா

ஹலிவா யாரிடம் பேசுகிறார் எனத் தெளிவில்லை. ஆனால், அவர் தொடர்ந்து கூறும் கருத்துக்கள் மனதைநொறுக்கும் வகையில் இருக்கின்றன. 'நமக்கு இது ஒன்று தான் வழி. அவர்கள் செய்த தவறுக்கான விலையை அவர்கள் உணரவேண்டும். அவர்கள் மற்றொரு 'நக்பா'வை சந்திக்கவேண்டும்' எனக் கூறுகிறார். நக்பா என்பது அரபு மொழியில் 'அழிவு' எனப் பொருள்படும். 1948ஆம் ஆண்டு, இஸ்ரேல் என்னும் நாட்டை கட்டமைக்கும் முயற்சியில் யூதப் படைகள், அந்த பகுதியில் ஏற்கனவே வாழ்ந்துவந்த ஏழு லட்சம் பாலஸ்தீனியர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர்.

பாலஸ்தீனிய வரலாற்றில் இந்த நிகழ்வு மிகமோசமான அழிவாக அமைந்தது. அப்படியொரு அழிவை பாலஸ்தீனியர்கள் மீண்டும் எதிர்கொள்ளவேண்டும் என இஸ்ரேல் ராணுவத்தின் முன்னாள் உளவுத்துறை தலைவர் ஹலிவா பேசியுள்ளார். ஹமாஸ் அமைப்பினர் அக்டோபர் 7, 2023, அன்று இஸ்ரேலை தாக்கியபோது ஹலிவா ராணுவத்தின் உளவுத்துறை தலைவராக இருந்தார். ஏப்ரல் 2024 அன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த ஆடியோ பதிவை Channel 12 என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஹமாஸ் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதல் என்பது தான் தலைமையேற்று வழிநடத்திய ராணுவ உளவுத்துறையின் தோல்வி மட்டுமல்ல, இஸ்ரேல் அரசின் தோல்வியும் கூட என்று இந்த ஆடியோவில் ஹலிவா தெரிவிக்கிறார். இதுவரை ஹமாஸை அழிப்பது மட்டும் தான் தன்னுடைய நோக்கம் எனக் கூறிவந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு அரசின் உண்மையான நோக்கத்தை இந்த ஆடியோ பதிவு வெளிப்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.

பாலஸ்தீனில் வாழும் குழந்தைகள், பெண்கள் உட்பட லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் ஒரு வேளை உணவிற்காக கண்ணீருடன் ஏங்கும் காட்சிகளும், பசியுடன் போராடும் காட்சிகளும் சமீபநாட்களாக வெளியாகி உலகை உலுக்கியபோது, இஸ்ரேல், இது ஹமாஸ் அமைப்பின் சதிவேலை, ஹமாஸ் அமைப்பு உணவுகளை பதுக்கிவைத்து, பாலஸ்தீன மக்களை கொல்கிறது என்று கூறிவந்தது. காசாவில் உணவு பற்றாக்குறையோ, பசியால் மரணங்களோ ஏற்படவேயில்லை என்று இஸ்ரேல் பிரதமர் நெட்டன்யாஹு கூறினார். பசியால் வாடும் குழந்தைகளின் புகைப்படங்கள் போலியான புகைப்படங்கள் என்றும், ஹமாஸின் சூழ்ச்சி தான் இதற்கு காரணம் என்றும் அவர் வெளிப்படையாகவே பேசினார்.

ஆனால், ஐ.நா. அறிக்கைகளின் படியும், மனித உரிமை அமைப்புகளின் படியும், காசாவில் உணவு பற்றாக்குறையால் அதிக இறப்புகள் ஏற்படுவது தெளிவாகிறது. அத்தியாவசிய தேவைகள் காசாவிற்குள் செல்லமுடியாமல் தடுப்பதன்மூலம் இஸ்ரேல் அரசும் இந்த இறப்புகளுக்கு முக்கிய காரணமாக இருப்பது மறுக்கமுடியாத உண்மை. இஸ்ரேல் அடுத்தகட்ட போருக்கு தயாராகிவரும் சமயத்தில், இந்த ஆடியோவில் பதிவானதுபோல, குழந்தைகளாக இருந்தாலும் பரவாயில்லை, அவர்கள் சாகவேண்டும் என்று இஸ்ரேல் விரும்புகிறதோ, ஹமாஸை காரணம்காட்டி பாலஸ்தீனில் உள்ள அனைத்து மக்களையும் நிர்மூலமாக்க இஸ்ரேல் தயாராகிறதோ என்ற கேள்வி எழுவதை தவிர்க்கமுடியவில்லை.

இஸ்ரேலில் தீவிரமடையும் போராட்டம்:

இந்த ஆடியோ பதிவு ஒருபக்கம் நெட்டன்யாஹு அரசிற்கு நெருக்கடியை கொடுத்தாலும், மறுபக்கம் இஸ்ரேலில் தீவிரமடையும் மக்களில் போராட்டம் மேலும் தலைவலியாக மாறியிருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் இஸ்ரேலின் முக்கிய இடங்களில் குவிந்து போராட்டம் நடத்துகின்றனர். அவர்களின் ஒற்றை நோக்கம் போர் நிறுத்தம் வேண்டும் என்பதே. இஸ்ரேல் அரசாங்கம் அடுத்தகட்ட போருக்கு தயாராகிவரும் சமயத்தில், 'போதும், நிறுத்துங்கள்' என இஸ்ரேல் மக்கள் எழுப்பும் முழக்கம் நெட்டன்யாஹுவிற்கு பின்னடைவை தந்துள்ளது.

இந்த மாதம் நாடு முழுக்க பரவிய போராட்டம், தொடர்ந்து தீவிரமடைகிறது. நெட்டன்யாஹுவின் சர்ச்சைக்குரிய போர் கையாளும் முறை மக்களுக்கு விரக்தியை ஏற்படுத்தியுள்ளது என்றும், இஸ்ரேல் தனது போரை விரிவுபடுத்தக்கூடாது என்றும் மக்கள் நினைப்பதாக செய்திகள் கூறுகின்றன. இஸ்ரேல் அரசாங்கம், காசா நகரத்தை கைப்பற்ற மேலும் ஒரு தாக்குதலை திட்டமிட்ட சமயத்தில் இந்த போராட்டம் வந்துள்ளது. ஹமாஸால் பணயக்கைதிகளாக சிறைப்படுத்தப்பட்ட இன்னும் சில இஸ்ரேலியர்கள் காசா நகரத்தில் இருப்பதாகவும், அந்த நகரத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கும் இஸ்ரேல் மக்கள், அரசு அடுத்தகட்ட போருக்கு செல்லக்கூடாது என அழுத்தம் கொடுக்கின்றனர்.

மேலும், ஹமாஸ் அமைப்பை முடிவுக்கு கொண்டுவர தொடங்கப்பட்ட போரில், இதுவரை அப்பாவி பாலஸ்தீனியர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கொல்லப்பட்டுள்ளதாகவும், இது நெட்டன்யாஹு அரசாங்கத்தின் தோல்வி என்றும், மேற்கொண்டு போரை விரிவுபடுத்தவேண்டாம் எனவும் மக்கள் கூறுகின்றனர். போராட்டம் நடத்தும் இஸ்ரேல் மக்கள் பலர், பசியுடன் போராட்டம் நடத்தும் பாலஸ்தீன குழந்தைகளின் புகைப்படத்தை ஏந்தி நிற்கின்றனர். இஸ்ரேலின் மிகப்பெரிய நகரமான டெல் அவிவில் சுமார் ஐந்து லட்சம் மக்கள் திரண்டுவந்து போராட்டம் நடத்திக்கொண்டிருக்கின்றனர். நெட்டன்யாஹுவின் நோக்கம் போரை விரிவுபடுத்தி தன் மீது உள்நாட்டில் இருக்கும் அரசியல் நெருக்கடியை திசைதிருப்புவது என்றிருந்தாலும், மக்களின் நோக்கம் 'பணயக்கைதிகளை மீட்டுக்கொண்டுவாருங்கள், போரை நிறுத்துங்கள்' என்றே இருக்கிறது.

int3
பாலஸ்தீனிய குழந்தைகளின் படங்களுடன் போராடும் இஸ்ரேல் மக்கள்

தன்னுடைய ஆட்சியை காப்பாற்றிக்கொள்ளதான் நெட்டன்யாஹு இந்த போரை தொடர்ந்து நடத்திவருவதாக ஏற்கனவே ஒரு குற்றச்சாட்டு இருந்தது. தன் நாட்டு மக்களை விட, தன் ஆட்சிதான் முக்கியம் என நெட்டன்யாஹு கருதுவதாகவும், அவரது கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கும் தீவிர வலதுசாரிகள் கொடுக்கும் அழுத்தத்தின் காரணமாகத்தான் இந்த போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். போர் நிறுத்தம் ஏற்பட்டால், வலதுசாரிகள் தங்களது ஆதரவை விலக்கிக்கொள்வார்கள் என்றும், அதன் காரணமாக தன்னுடைய ஆட்சி முடிவிற்கு வரும் என நெட்டன்யாஹு அஞ்சுவதாகவும் தெரிகிறது.

போர்நிறுத்தத்திற்கு ஆதரவாக பெரும்பாலான இஸ்ரேல் மக்கள் இருப்பதாக சமீபத்திய கருத்துக்கணிப்பு கூறுகிறது. நியூஸிலாந்து, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் நெட்டன்யாஹுவை கண்டிக்கின்றன. உள்நாட்டு மக்களின் போராட்டம் ஒருபுறம், சர்வதேச நாடுகளின் அழுத்தம் மறுபுறம் என எல்லாத்திசைகளிலும் நெட்டன்யாஹுவிற்கு நெருக்கடி முற்றுகிறது. தற்போது லீக்கான ஆடியோ, நெட்டன்யாஹுவின் நோக்கத்தை வெளிப்படுத்துவதால், இது மேலும் அவருக்கொரு நெருக்கடியாக மாறியிருக்கிறது.

பாலஸ்தீனில் 62,000 மக்கள் ஏற்கனவே இறந்துவிட்டநிலையில், பட்டினியால் பல குழந்தைகள், பெண்கள் அவதிப்படும்நிலையில், நெட்டன்யாஹு, மக்களின் முடிவை ஏற்று, போர்நிறுத்ததை அறிவிப்பாரா? அல்லது, அவரின் அரசியல் லாபத்திற்காக போரை மேலும் விரிவுபடுத்துவரா? இதற்கான பதில் வெகுதொலைவில் இல்லை என்றே தெரிகிறது.

-அழகு முத்து ஈஸ்வரன்

gaza israel
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe