பீகாரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி 243 தொகுதிகளில் 202 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. எதிர்க்கட்சியான மகாகத்பந்தன் கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம் 141 தொகுதிகளில் போட்டியிட்டு 25 இடங்களிலும், காங்கிரஸ் 61 தொகுதிகளில் போட்டியிட்டு 6 இடங்களிலும் மட்டுமே வெற்றி பெற்றன. பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட்டை இழந்து படுதோல்வி அடைந்தது. இந்த மோசமான தோல்வி எதிர்க்கட்சிகளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இதற்கிடையில் ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவரும் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவின் மகளும் தேஜஸ்வி யாதவின் சகோதரியுமான ரோஹினி ஆச்சாரியா 15 ஆம் தேதி அரசியல் மற்றும் குடும்பத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும், இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், “நான் அரசியலை விட்டு விலகுகிறேன், என் குடும்பத்தையே துறக்கிறேன். சஞ்சய் யாதவும் ரமீஸும் என்னிடம் இதைச் செய்யச் சொன்னார்கள். எல்லாப் பழிகளையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்று பரபரப்பை ஏற்படுத்தினார். தேஜஸ்வியின் நெருங்கிய நண்பரும், கட்சியின் மூத்த தலைவருமான சஞ்சய் யாதவ், தன்னை விலகச் சொன்னதாக ரோஹினி கூறியது சொந்த கட்சியினர் மத்தியிலேயே பெரும் அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியது.

Advertisment

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அதற்கு அடுத்த நாளே அதாவது 16 ஆம் தேதி ரோஹினி வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், நேற்று ஒரு மகள், ஒரு சகோதரி, ஒரு திருமணமான பெண், ஒரு தாய் அவமானப்படுத்தப்பட்டாள். அவள் மீது மோசமான வார்த்தைகள் வீசப்பட்டன. அவளை அவர்கள் செருப்பால் அடிக்க முயன்றார்கள். சுயமரியாதையை விட்டுக்கொடுக்கவில்லை என்பதாலேயே எனக்கு இந்த அவமானம். அழுது கொண்டிருந்த தாய் மற்றும் சகோதரிகளை விட்டுவிட்டு வெளியேறினேன். என் தாய் வீட்டிலிருந்து என்னைப் பிரித்து அனாதையாக்கி விட்டார்கள்.

என்னை அழுக்கனவள் என்று விமர்சித்தனர். கோடிக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டும், தேர்தலில் நிற்க சீட் வாங்கிக் கொண்டும் எனது அழுக்கு சிறுநீரகத்தை என் தந்தைக்குப் பொறுத்தியதாகப் பழி சுமத்துகின்றனர். நான் என்ன தவறு செய்தேன்? எனது சிறுநீரகத்தை கொடுத்து, என்னுடைய கடவுளை என் அப்பாவைக் காப்பாற்றினேன். ஆனால், தற்போது அந்த சிறுநீரகத்தை அழுக்கு என்கிறார்கள். நான் செய்த இந்த தவறை வேறு யாரும் செய்யக்கூடாது. யாரும் என் பாதையில் நடக்க வேண்டாம், ரோஹினி போன்ற மகள் யாருக்கும் வேண்டாம். திருமணமான பெண்களுக்கு நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

Advertisment

திருமணமான பெண்கள் தங்களின் கடவுளான தந்தையை காப்பாற்ற எந்த முடிவும் எடுக்க வேண்டாம். அதற்கு பதிலாக அந்த வீட்டில் இருக்கும் மகனிடம், உனது சொந்த சிறுநீரகத்தையோ அல்லது அவரது நண்பரின் சிறுநீரகத்தையோ வழங்கச் சொல்லுங்கள். பெண்கள் தங்கள் குடும்பம், குழந்தைகள், மாமியார் வீட்டை மட்டும் கவனியுங்கள்; பெற்றோரைப் புறக்கணியுங்கள். என் குடும்பம், மூன்று குழந்தைகளை விட்டுவிட்டு கணவனிடமோ மாமியாரிடமோ அனுமதி பெறாமல் சிறுநீரகத்தைத் தானம் செய்தது பெரும் பாவம் ஆகிவிட்டது. யாரும் என்னைப் போல தவறு செய்ய வேண்டாம், ரோஹினி போன்ற மகள் யாருக்கும் வேண்டாம்.” என்று வேதனை தெரிவித்துள்ளார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த ரோஹினி நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்ததாகவும், ஆனால் அதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இந்தச் சூழலில்தான் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த ரோஹினி தற்போது சொந்தக் குடும்பத்தினர் மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை அள்ளி வீசியிருக்கிறார். ஏற்கனவே தேர்தல் தோல்வியால் துவண்டு கிடந்த ஆர்.ஜே.டி. தொண்டர்களை ரோஹினியின் குற்றச்சாட்டு மேலும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.