2022ஆம் ஆண்டு, கர்நாடகாவில் பாஜக தலைமையிலான அரசு கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்தது. இதனால், பல பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. பல இஸ்லாமிய மாணவிகள் வகுப்புகளையும் தேர்வுகளையும் புறக்கணித்தனர். ஹிஜாப் அணிந்து வருவதை எதிர்த்து, சில மாணவர்கள் காவித் துண்டுகளை அணிந்து கல்லூரிகளுக்கு வந்தனர். இதனால், சில கல்லூரிகள் ஹிஜாப் தடை விதித்தன. சில இடங்களில் இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர். 

Advertisment

காவல்துறை தடியடி மற்றும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தி போராட்டக்காரர்களைக் கலைத்தது. மத அடையாள உடைகளைப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அணிவதற்கு கர்நாடக உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இது தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இதையடுத்து, 2023ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு ஹிஜாப் தடையை நீக்க உத்தரவிட்டது

Advertisment

2024ஆம் ஆண்டு, மும்பையில் உள்ள ஒரு பிரபல கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டது. மேலும், மாணவ-மாணவிகள் மத அடையாளங்களைப் பிரதிபலிக்கும் ஆடைகள் அணிவதற்கு ஆடைக் கட்டுப்பாட்டில் மாற்றங்கள் செய்யப்பட்டதாக கல்லூரி விளக்கமளித்தது. இதை எதிர்த்து, 9 இஸ்லாமிய மாணவிகள் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மும்பை உயர் நீதிமன்றம், கல்லூரியின் நடவடிக்கையை உறுதி செய்து, மாணவிகளின் மனுவை தள்ளுபடி செய்தது.

இது தொடர்பான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், “பொட்டு, திலகம் வைக்க வேண்டாம் என்று உங்களால் கூற முடியுமா? அதற்கு தடை விதிக்க முடியுமா?” என்று கல்லூரியிடம் கேள்வி எழுப்பியது. மேலும், மும்பை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில், ஹிஜாப் சர்ச்சை கர்நாடகா, மும்பையைத் தாண்டி, தற்போது கேரளாவிலும் வெடித்துள்ளது.

Advertisment

கேரளாவின் கொச்சி அருகே செயல்படும் ஒரு கத்தோலிக்க பள்ளியில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இப்பள்ளியில் பயிலும் 8ஆம் வகுப்பு இஸ்லாமிய மாணவி ஒருவர், பள்ளி விதிகளை மீறி ஹிஜாப் அணிந்து வந்தார். இதனால், பள்ளி நிர்வாகம், சீருடை அணிந்தால் மட்டுமே அனுமதிக்க முடியும் என்று கூறி, மாணவியை கண்டித்து, பள்ளியில் நுழைய தடை விதித்தது. இந்த விவகாரம் பெரிதாகி, கம்யூனிஸ்ட் மற்றும் எஸ்டிபிஐ கட்சியினர் பள்ளி முன்பு போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட மாணவி ஹிஜாப் அணிந்த பள்ளிக்கு வர அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவை கேரள கல்வித்துறை அமைச்சர் பிறப்பித்தார். மேலும், இந்தச் சம்பவத்தால் மாணவிக்கும் அவரது பெற்றோருக்கும் ஏற்பட்ட மன உளைச்சலை பள்ளி முதல்வரும், நிர்வாகமும் நிவர்த்தி செய்ய வேண்டும். கேரளா மதச்சார்பற்ற மற்றும் அரசியலமைப்பு மதிப்புகளை நிலைநிறுத்துகிறது. மத அடிப்படையில் மாணவர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டும் எந்தவொரு செயலையும் பொறுத்துக்கொள்ளாது. கேரளாவில் எந்த மாணவரும் இதுபோன்ற சிரமங்களை எதிர்கொள்ளக் கூடாது. எந்தவொரு கல்வி நிறுவனமும் அரசியலமைப்பு உரிமைகளை மீற அனுமதிக்கப்படாது” என்று தெரிவித்தார்.

கல்வி நிறுவனங்கள் யூனிஃபார்ம் கோடை பின்பற்ற வேண்டும் என்றாலும், மாணவர்களின் மத உரிமைகளை மதிக்க வேண்டும். அரசியல் கட்சிகள் இதைத் தங்களது பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, உரையாடல் மூலம் தீர்வு காண வேண்டும் என  சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.