ஹரியானா மாநிலத்தில் மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஒருவர், சாதி பாகுபாடு காரணமாக தற்கொலை குறிப்பு எழுதிவைத்து, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாநிலத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது
ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த பட்டியல் சாதி சமூகத்தைச் சேர்ந்தவர் புரன் குமார். ஐஐஎம் அகமதாபாத்தில் முதுகலை படிப்பை முடித்த இவர், யுபிஎஸ்சி தேர்வு மூலம் 2001 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஹரியானா கேடரில் கூடுதல் டிஜிபி (ஏடிஜிபி) பதவியில் பணியாற்றி வந்தார். பணியில் திறம்பட செயல்பட்டு, உயர் பதவிகளுக்கு முன்னேறியிருந்தார். இறுதியாக, டெலிகாம் ஐஜியாக பணியாற்றி வந்த அவர், சமீபத்தில் இடமாற்றம் செய்யப்பட்டார். இவரது மனைவி அம்னீத் பி. குமார், ஐஏஎஸ் அதிகாரியாக, ஹரியானா அரசின் வெளியுறவு ஒத்துழைப்பு துறையின் ஆணையர் மற்றும் செயலாளராக பணியாற்றி வருகிறார்.
ஹரியானா மாநில முதல்வரின் ஜப்பான் பயணக் குழுவில் இடம்பெற்றிருந்த அம்னீத் பி. குமார், அலுவல் காரணமாக ஜப்பான் சென்றிருந்தார். அந்த நேரத்தில், சண்டிகரில் உள்ள தனது இல்லத்தில் தனியாக இருந்த புரன் குமார், 8-9 பக்க தற்கொலை குறிப்பு எழுதி வைத்துவிட்டு, அக்டோபர் 7 அன்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவரின் மரணச் செய்தியை அறிந்தவுடன் அம்னீத், அக்டோபர் 8 ஆம் தேதி அன்று இந்தியா திரும்பினார். தற்கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
புரன் குமார், 10 ஐபிஎஸ் மற்றும் 3 ஐஏஎஸ் அதிகாரிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு, சாதி அடிப்படையிலான பாகுபாடு மற்றும் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக தற்கொலை குறிப்பில் கூறியுள்ளார். முறையற்ற பதவி உயர்வுகள், சாதி அடிப்படையிலான பாகுபாடு மற்றும் நிர்வாக துன்புறுத்தல் தொடர்பாக மூத்த அதிகாரிகளுடன் புரன் குமாருக்கு நீண்ட காலமாக தகராறுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து பல ஆண்டுகளாக அவர் முதலமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு பல கடிதங்கள் எழுதியிருப்பதாகவும், ஆனால் அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கணவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், ஹரியானா மாநில போலீஸ் டிஜிபி சத்ருஜீத் கபூர் மற்றும் ரோஹ்தக் போலீஸ் சூப்பிரண்டு நரேந்திர பிஜார்னியா ஆகியோர் மீது அம்னீத் பி. குமார் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வரிடம் அம்னீத் அளித்துள்ள மனுவில், “புரன் குமாரின் தற்கொலை குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரிகளை உடனடியாக பணியிடைநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும். ஹரியானாவின் சக்திவாய்ந்த உயர் அதிகாரிகள் இந்த வழக்கில் ஈடுபட்டுள்ளதால், எங்கள் குடும்பத்திற்கு வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். எனது கணவரின் தெளிவான மற்றும் விரிவான தற்கொலை குறிப்பு மற்றும் முறையான புகார் இருந்தபோதிலும், இதுவரை எந்த எஃப்ஐஆரும் பதிவு செய்யப்படவில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது. இது சாதாரண தற்கொலை வழக்கு அல்ல; பட்டியல் சாதி சமூகத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரியான எனது கணவர், சக்திவாய்ந்த உயர் அதிகாரிகளால் திட்டமிட்டு துன்புறுத்தப்பட்டதன் நேரடி விளைவு. தற்கொலை குறிப்பில் இடம்பெற்ற அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது கணவரின் மரணத்திற்கு உரிய நீதி வேண்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பேசுபொருளாக மாறியதையடுத்து, சண்டிகர் ஐஜி தலைமையில் 6 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. முதற்கட்டமாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அரசியல் ரீதியாகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டியல் சாதி அதிகாரிகளைப் பாதுகாக்கத் தவறியதாக மாநில அரசை எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும், டிஜிபி சத்ருஜீத் கபூர் உட்பட குற்றம் சாட்டப்பட்டவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.